கர்தினால் தாக்லே தவக்கால மறையுரை வழங்குதல் கர்தினால் தாக்லே தவக்கால மறையுரை வழங்குதல் 

தவக்காலப் பயணத்தில், தேவையற்ற சுமைகளை விலக்க...

நோன்பு வழியாக, பசியைக் கட்டுப்படுத்தி, நலவாழ்வையும், பசியாயிருக்கும் நம் அயலவர் மற்றும் இயற்கையையும் பராமரிப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இயேசுவோடு நடக்கும் தவக்காலப் பயணத்தில், தேவையற்ற நம் பைகளையும் சுமைகளையும் ஒதுக்கிவிட்டு, செபம், நோன்பு மற்றும் தர்மச் செயல்கள் ஆற்றும் ஒளியின் பாதையில் நடப்பதற்கு, விசுவாசிகள் தங்களைத் தயாரிக்குமாறு, மனிலா கர்தினால் அந்தோனியோ லூயிஸ் தாக்லே அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

மார்ச் 06, இப்புதனன்று கடைப்பிடிக்கப்படும் திருநீற்று புதனுக்கென வெளியிட்டுள்ள செய்தியில், தவக்காலத்தில் நுழையவிருக்கும் விசுவாசிகள், எருசலேம் நோக்கிய பயணத்தில் இயேசு செய்ததுபோல, விசுவாசிகளும், ஒளியில் பயணம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார், கர்தினால் தாக்லே.

கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவுக்கான பாதையில் பின்செல்வதற்கு, செபம், நோன்பு மற்றும் தர்மம்செய்தல் ஆகியவை, முக்கிய படிகளாகும் என்றுரைத்துள்ள, உலகளாவிய காரித்தாஸ் நிறுவனத் தலைவருமான, கர்தினால் தாக்லே அவர்கள், நீதிச் செயல்கள் வழியாக, நம்மிடமுள்ளதை ஏழைகளோடு பகிர்ந்து வாழ்வோம் என்று கூறியுள்ளார்.

பிறரன்பு, தர்மச் செயல்களுக்கு அழைப்பு விடுக்கின்றது எனவும், நோன்பு வழியாக, பசியைக் கட்டுப்படுத்தி, நம் நலவாழ்வையும், பசியாயிருக்கும் நம் அயலவர் மற்றும் இயற்கையையும் பராமரிப்போம் எனவும், மனிலா கர்தினால் கூறியுள்ளார். 

விசுவாச உணர்வில் நம் சுமைகளையும், செபத்தின் வழியாக நம் நம்பிக்கையையும் ஆண்டவர் மீது வைப்போம் என குறிப்பிட்டுள்ள கர்தினால் தாக்லே அவர்கள், தந்தையாம் இறைவன் மீதும், நம் மீதும், தம் அன்பைக் காட்டிய எருசலேமுக்கு இயேசுவோடு பயணம் மேற்கொள்ள நம்மைத் தயாரிக்கத் துவங்குவோம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 March 2019, 15:16