கிறிஸ்தவ சபைகள் உலக அவையின் பொதுச்செயலர், Olav Fykse Tveit கிறிஸ்தவ சபைகள் உலக அவையின் பொதுச்செயலர், Olav Fykse Tveit  

இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையின் செய்தி

சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் நிலவும் கொடுமைகளைத் தீர்ப்பதற்கு, மத நம்பிக்கையுள்ள நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம் - முதுபெரும் தந்தை கிரில்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சமயங்களுக்கிடையே அறிவுப் பூர்வமான உரையாடல் இடம்பெறுவது, ஒரு நாட்டின் முதிர்ச்சியைக் காட்டுகிறது என்று, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை கிரில் அவர்கள், அபு தாபியில் நடைபெற்ற பல்சமய கருத்தரங்கிற்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ், மற்றும், அல் அசார் தலைமைக் குரு அகமத் அல் தய்யிப் ஆகிய இருவரின் தலைமையில், அபு தாபியில், பிப்ரவரி 4, இத்திங்களன்று நடைபெற்ற பல் சமய கருத்தரங்கிற்கு, முதுபெரும் தந்தை கிரில் அவர்கள் அனுப்பிய செய்தியில், இவ்வாறு கூறியுள்ளார்.

நன்னெறியில் வாழ, இறைவன் வழங்கியுள்ள கொடைகளைப் பயன்படுத்தி, ஏமன், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் நிலவும் கொடுமைகளைத் தீர்ப்பதற்கு, மத நம்பிக்கையுள்ள நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று, முதுபெரும் தந்தை கிரில் அவர்களின் செய்தி கூறுகிறது.

மேலும், இந்த பல் சமய கருத்தரங்கில், கிறிஸ்தவ சபைகள் உலக அவையின் பொதுச்செயலர், Olav Fykse Tveit அவர்கள் உரை வழங்கியபோது, உடன்பிறந்த நிலை, இறைவன் நமக்கு வழங்கியுள்ள தெய்வீக அழைப்பு என்று கூறினார்.

மனிதர்களிடையே நிலவும் இனவெறி, வாழ்வுக்கு எதிரான மிக ஆபத்தான நஞ்சு என்று தன் உரையில் குறிப்பிட்ட Tveit அவர்கள், இந்தப் பாவத்திற்கு, இருபதாம் நூற்றாண்டு, மிக வேதனையான ஒரு நினைவுச்சின்னமாக அமைந்துள்ளது என்று கூறினார்.

மக்களை ஒருங்கிணைப்பதில் மதத் தலைவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்பதால், உரையாடலையும், ஒற்றுமையையும் வளர்ப்பது சமயத் தலைவர்களின் முக்கிய கடமை என்பதை, Tveit அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 February 2019, 15:29