பாகிஸ்தான் ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் ஜோசப் அர்ஷத் பாகிஸ்தான் ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் ஜோசப் அர்ஷத் 

இந்தியா பாகிஸ்தான் உறவு குறித்து பாகிஸ்தான் ஆயர்

இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு அண்டை நாடுகளையும் துன்புறுத்தி வரும் காஷ்மீர் பிரச்சனை என்ற காயத்தைக் குணமாக்காமல் இருப்பது, இரு நாடுகளுக்கும் நல்லதல்ல - பேராயர் ஜோசப் அர்ஷத்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியா, பாகிஸ்தான், ஆகிய இரு அண்டை நாடுகளையும் துன்புறுத்தி வரும் காஷ்மீர் பிரச்சனை என்ற காயத்தைக் குணமாக்காமல் இருப்பது, இரு நாடுகளுக்கும் நல்லதல்ல என்று, பாகிஸ்தான் ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் ஜோசப் அர்ஷத் அவர்கள் கூறினார்.

பிப்ரவரி 14ம் தேதி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய விமானப் படை, பிப்ரவரி 26ம் தேதி மேற்கொண்ட பதில் தாக்குதலைக் குறித்து, இஸ்லாமாபாத்-இராவல்பிண்டி பேராயர் அர்ஷத் அவர்கள் வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

இவ்விரு நாடுகளிலும் உண்மையான சமாதானத்தை விரும்பும் அனைவரும் இந்நிகழ்வுகளால் அதிக வேதனை அடைந்துள்ளனர் என்று கூறிய பேராயர் அர்ஷத் அவர்கள், இந்தப் பிரச்சனையை அறிவுப்பூர்வமான உரையாடல் வழியே இரு நாட்டு அரசுகளும் தீர்த்துவைத்தால், அது, உலகிற்கே சிறந்ததோர் எடுத்துக்காட்டாக விளங்கும் என்று கூறினார்.

கலாச்சாரம், பொருளாதாரம், வர்த்தகம், விளையாட்டு, மதம் என்ற அனைத்து தளங்களிலும் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பரிமாற்றங்கள் உருவாகும்போது, இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வுகள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என்ற நம்பிக்கையை, பாகிஸ்தான் ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் அர்ஷத் அவர்கள் வெளியிட்டார்.

கிறிஸ்தவர்கள் என்ற முறையில் சமாதானத்திற்காக செபிப்பது நம் கடமை என்று கூறிய பேராயர் அர்ஷத் அவர்கள், இந்த செபத்தில், இரு நாடுகளையும் சேர்ந்த இஸ்லாமியர், இந்துக்கள் அனைவரும் இணையவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 February 2019, 15:04