இயேசு சமவெளியான ஓரிடத்தில் நின்று பேறுபெற்றோர் என்று கூறினார் - லூக்கா 6 இயேசு சமவெளியான ஓரிடத்தில் நின்று பேறுபெற்றோர் என்று கூறினார் - லூக்கா 6 

பொதுக்காலம் 6ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே. இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவுபெறுவீர்கள்". - லூக்கா நற்செய்தி 6: 20-21

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் 6ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

கருத்தரங்கு ஒன்று ஆரம்பமானது. அக்கருத்தரங்கை வழிநடத்தியவர், அரங்கத்தில் கூடியிருந்தோரிடம் ஒரு கேள்வியை எழுப்பினார். "இவ்வுலகில் மிகவும் விலை உயர்ந்த நிலம் எங்கே உள்ளது?" என்று அவர் கேட்டதும், பதில்கள் உடனடியாகப் பறந்து வந்தன. எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகள், வைரச் சுரங்கங்கள் நிறைந்த தென்னாப்பிரிக்கா, நியூ யார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதி என்று பலவகை பதில்கள் சொல்லப்பட்டன.

"நீங்கள் சொன்ன அத்தனை பதில்களும் தவறு" என்று கூறியப் பேச்சாளர், சில நொடிகள் மௌனம் காத்தார். பின்னர், "இவ்வுலகிலேயே மிகவும் விலை உயர்ந்த நிலம், நமது கல்லறைத் தோட்டங்கள். ஏனெனில், அங்குதான் பலர், தாங்கள் எழுதாதக் கதைகளுடன், துவங்காத வர்த்தகத் திட்டங்களுடன், ஒப்புரவாகாத உறவுகளுடன் புதைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர், 'அடுத்த நாள் செய்துகொள்வோம்' என்று ஒவ்வொரு நாளும் கூறிவந்தனர். அவர்கள் கூறிய அந்த 'அடுத்த நாளை'ச் சந்திக்காமல் விடைபெற்றனர்" என்று பேச்சாளர் கூறினார்.

இந்நிகழ்வைப் பற்றி தன் நூல் ஒன்றில் குறிப்பிடும் டாட் ஹென்றி (Todd Henry) என்ற எழுத்தாளர், அந்த கருத்தரங்கைவிட்டு நேராக தன் அலுவலகம் சென்று, இரு சொற்களை தன் குறிப்பேட்டில் எழுதி வைத்ததாகக் கூறியுள்ளார். அன்றிலிருந்து தன் வாழ்வை வழிநடத்திய அவ்விரு சொற்கள்: "Die Empty", அதாவது, "காலியாக இறப்பாய்". ஹென்றி அவர்கள், "Die Empty" என்ற அவ்விரு சொற்களை, 2013ம் ஆண்டு எழுதிய ஒரு நூலின் தலைப்பாகக் கொடுத்தார்.

மனித வாழ்வில் தவிர்க்கமுடியாத எதார்த்தங்களாக இருக்கும் மரணம், கல்லறை, ஆகியவை, நமக்கு, வாழ்வின் முழுப்பொருளையும் உணர்த்த வல்லவை. மரணத்திற்கு முன், நம் வாழ்வை, திறமைகளை, சக்தியை மற்றவர்களுக்கு வழங்கிவிட்டு, காலியாக கல்லறைக்குச் செல்வது எவ்வளவோ மேல். ஆனால், நம்மில் பலர், கனவுகளை, பிரச்சனைகளை, ஏக்கங்களை, கவலைகளை சுமந்தவண்ணம் நம் கல்லறையை அடைகிறோம். "காலியாக இறப்பாய்" என்று ஹென்றி அவர்கள், கூறுவதைக் கேட்கும்போது, “கல்லறைக்குள் போகும்போது, காலியாக ('ஜாலி'யாக) செல்வோர் பேறுபெற்றோர்” என்று சொல்லத் தோன்றுகிறது.

கல்லறையை அடைவதற்குமுன், நம் வாழ்வை பிறருக்கு வழங்கிய நிறைவை நாம் உணர்ந்திருந்தால், கல்லறையைத் தாண்டி நம் வாழ்வு தொடரும் என்ற நம்பிக்கையோடு நாம் கண்களை மூடியிருந்தால், நாம் உண்மையில் பேறுபெற்றோர். கல்லறைக்கு இப்பக்கமும், மறுபக்கமும் நாம் வாழும், வாழப்போகும் வாழ்வு, நிறைவுடன் இருக்க, நற்செய்தியில் நமக்கு பல வழிகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு முக்கியமான வழிகாட்டி, இயேசு வழங்கியுள்ள 'பேறுபெற்றோர்' என்ற கூற்றுகள். இந்தக் கூற்றுகள் இன்று நம்மை நற்செய்தி வழியே அடைந்துள்ளன.

'பேறுபெற்றோர்' என்ற சொற்றொடரைக் கேட்டதும், மத்தேயு நற்செய்தி 5ம் பிரிவில் இயேசு கூறியுள்ள புகழ்பெற்ற வாக்கியங்கள், முதலில் நம் நினைவுக்கு வருகின்றன. ஆனால், இன்றைய வழிபாட்டில், லூக்கா நற்செய்தி 6ம் பிரிவில் இயேசு கூறும் “பேறுபெற்றோர்” வாக்கியங்கள், நற்செய்தியாக நம்மை வந்தடைந்துள்ளன.

மத்தேயு நற்செய்தியில், இயேசு, மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர்ந்து, கற்பித்ததால், அதை, 'மலைப்பொழிவு' என்றும், லூக்கா நற்செய்தியில், இயேசு தன் சீடர்களுடன் இறங்கி வந்து, சமவெளியான ஓரிடத்தில் நின்று கற்பித்ததால், அதை, 'சமவெளிப்பொழிவு' என்றும் அழைக்கிறோம். மத்தேயு நற்செய்தியில், இயேசுவின் கூற்றுகள், 'பேறுபெற்றோர்' என்ற ஆசி மொழிகளாக மட்டும் ஒலிக்கின்றன. லூக்கா நற்செய்தியில், இக்கூற்றுகள், 'பேறுபெற்றோருக்கு' ஆசிகளாகவும், 'கெடுற்றோருக்கு' எச்சரிக்கைகளாகவும் கூறப்பட்டுள்ளன.

சமவெளியில், நம்மில் ஒருவராக தன்னையே இணைத்துக்கொண்டு, இயேசு நம்மிடம் நேரடியாகக் கூறும் ஆசி மொழிகளும், எச்சரிக்கைகளும், நமக்குள் எத்தகைய தாக்கங்களை உருவாக்குகின்றன என்பதை, ஓர் ஆன்ம ஆய்வாக மேற்கொள்வது நல்லது.

அதற்குமுன், இயேசு, ஆசி மொழிகளை வழங்கினார் என்ற உண்மையை, கொஞ்சம் தியானித்துப் பயன்பெறுவோம். இயேசு, தன் வாழ்நாள் முழுவதும், ஆசீர் ஒன்றையே, இவ்வுலகிற்கு வழங்கினார். குறிப்பாக, துயரங்களால் துவண்டோரை, தன் ஆறுதலான சொற்களாலும், நலம் வழங்கும் அற்புதங்களாலும் நிறைத்தார். ஆசி வழங்குவது, இயேசுவுக்கு, இயல்பாக அமைந்த ஒரு பண்பு. இத்தகையப் பண்பு, ஆசீர் நிறைந்த ஒரு மனதிலிருந்துமட்டுமே வெளிவரக்கூடும். இதைப் புரிந்துகொள்ள, புத்தமதத்தில் கூறப்படும் ஓர் உவமை உதவியாக இருக்கும்.

ஒருநாள், புத்தர், ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தபோது, அழகும், உடல் கட்டமைப்பும் கொண்ட ஒரு படைவீரர் அவ்வழியே வந்தார். குண்டாக, அதிக எடையுடன் மரத்தடியில் அமர்ந்திருந்த புத்தரைப் பார்த்த அந்த வீரர், "உம்மைப் பார்த்தால், ஒரு பன்றியைப் பார்ப்பதுபோல் இருக்கிறது" என்று கூறினார். புத்தர் அமைதியாக அந்த வீரரைப் பார்த்து, "உம்மைப் பார்த்தால், ஒரு தெய்வத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது" என்று கூறினார்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அந்த வீரர், "என்னைப் பார்த்தால், தெய்வத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது என்று உம்மால் எப்படி சொல்லமுடிந்தது?" என்று கேட்டார். புத்தர் மறுமொழியாக, "நாம் உண்மையிலேயே, வெளி உலகை, வெளியிலிருந்து பார்ப்பது கிடையாது. நமக்குள் இருப்பனவற்றைக் கொண்டு, வெளி உலகைப் பார்க்கிறோம். நான், இந்த மரத்தடியில் அமர்ந்து, இறைவனைத் தியானித்து வருகிறேன். எனவே, நான் காண்பதனைத்திலும், இறைவனைக் காண்கிறேன். நீரோ, வேறு பலவற்றை சிந்தித்துக் கொண்டிருப்பதால், வேறு விதமாகப் பார்க்கிறீர்" என்று அமைதியாகக் கூறினார்.

இவ்வுலகைப்பற்றி, பிறரைப்பற்றி நாம் கொண்டிருக்கும் சிந்தனைகள், கண்ணோட்டம் அனைத்தும் நமக்கு உள்ளிருந்து உருவாகின்றன. நமது சிந்தனை, சொல், செயல் அனைத்திற்கும் அடித்தளமாக இருப்பது, ஆசீர் பெற்ற ஒரு மனநிலையா, அல்லது, சபிக்கப்பட்ட ஒரு மனநிலையா என்பதை ஆய்வு செய்வது நல்லது. ஆசீர் பெற்ற மனநிலை, அனைவரையும், அனைத்துலகையும் ஆசீர்வதிக்கப்பட்டதாய் காணும். சபிக்கப்பட்ட மனநிலையோ, அனைத்தின் மீதும் சாபங்களை அள்ளி வீசும். நம்மில் பலர், நமக்கு வந்துசேரும் ஆசிகளை அலட்சியம் செய்துவிட்டு, அவ்வப்போது வரும் துயரங்களை நம் சாபங்களாக பெரிதுபடுத்துவதால், பெரும்பாலான நம் வாழ்வு சபிக்கப்பட்ட மனநிலையிலேயே கழிகிறது.

இயேசுவின் சிந்தனை, சொல், செயல் அனைத்தும், ஆசீர் பெற்ற மனநிலையிலிருந்து வெளிவந்தவை. அவர் இவ்வுலகில் மனிதராகப் பிறக்கப்போகிறார் என்ற அற்புதச் செய்தியை, இளம்பெண் மரியாவிடம் பகிரவந்த கபிரியேல் தூதர், மரியாவை, "அருள்மிகப் பெற்றவரே" (லூக். 1:28) என்று வாழ்த்தினார். அவரைச் சந்தித்த உறவினர் எலிசபெத்து, "பெண்களுக்குள் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" (லூக். 1:42) என்று, மனநிறைவான ஆசி வழங்கினார்.

இவ்வாறு, கருவில் தோன்றியதுமுதல், ஆசீரால் நிரப்பப்பட்ட இயேசு, தன் பணிவாழ்வைத் துவங்கிய வேளையிலும், ஆசீரால் நிரப்பப்பெற்றார். "நீரே என் அன்பார்ந்த, - ஆசி பெற்ற - மகன்" (காண்க - லூக். 3:22) என்று இறைத்தந்தையின் ஆசீரால் நிரப்பப்பெற்றார், இயேசு. ஆசீரால் நிறைந்து வழிந்த இயேசு, தன் சமவெளிப்பொழிவை, ஆசீர்வாதங்களுடன் ஆரம்பித்தார்:

லூக்கா நற்செய்தி 6: 20-21

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே. இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவுபெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.

ஆசீர் வழங்கிய அதே வேளையில், இயேசு, கசப்பான உண்மைகளை, கேடுகளாக, எச்சரிக்கைகளாக வழங்கவும் தயங்கவில்லை.

இன்றைய நற்செய்தியில், இயேசு கூறியிருக்கும் பேறுகளையும், கேடுகளையும் தவறாகப் பொருள்கொள்ள வாய்ப்புண்டு. அதாவது, இயேசு, ஏழ்மையை, பட்டினியை, அழுகையை, ஆசீர்வாதங்களாக உயர்த்திப் பேசுவதாக எண்ணிப்பார்க்க வாய்ப்புண்டு. இயேசு, இக்கொடுமைகளை மேன்மைப்படுத்தவில்லை; இவற்றால் துன்புறுவோரை மேன்மைப்படுத்தினார். ஏழ்மை, பட்டினி, அழுகை ஆகிய கொடுமைகளால் துன்புறுவோர், இறைவனை நோக்கி அடிக்கடி திரும்ப, இறைவனை தங்கள் வாழ்வின் ஆதாரம் என்று எண்ணிப்பார்க்க, அவர்களுக்கு வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. இதற்கு மாறாக, செல்வத்தில், அதிகமான உணவில், மகிழ்வில் ஆழ்ந்திருப்போர், தவறான ஒரு தன்னிறைவு அடைவதால், அவர்களின் பார்வை இறைவனை நோக்கித் திரும்புவதற்கு வாய்ப்புக்கள் குறைவு. இந்த உண்மையை இடித்துரைக்கவே, இயேசு ஒன்றுக்கொன்று முரணான இவ்விரு குழுவினரை இணைத்துப் பேசியுள்ளார்.

மத்தேயு, லூக்கா என்ற இரு நற்செய்திகளிலும், “பேறுபெற்றோர்” என, இயேசு, பட்டியலிட்டுள்ள புண்ணியங்கள், நிறை வாழ்வுக்கு வழிகாட்டும் விளக்குகள். மதம், இனம் என்ற வட்டங்களைக் கடந்து, “பேறுபெற்றோர்” வாக்கியங்கள், மகாத்மா காந்தி உட்பட, பல உன்னத மனிதர்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளன. இன்றைய நற்செய்தி வழியே, பேறுகளையும், கேடுகளையும் இணைத்து, இயேசு கூறும் ஆசி மொழிகளும், எச்சரிக்கைகளும், நம்மை விழித்தெழச் செய்யட்டும்.

இறுதியாக, நம் எண்ணங்கள் காஷ்மீர் மாநிலத்தை நோக்கித் திரும்புகின்றன. அன்பைச் சிறப்பிக்கும் நாளான, பிப்ரவரி 14ம் தேதி, வியாழனன்று, காஷ்மீர் மாநிலத்தில், இராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற ஒரு பேருந்தின் மீது, இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர், சக்திமிகுந்த வெடிபொருட்களை ஏற்றிச்சென்ற காரை மோதி வெடிக்கச்செய்தார். இந்தத் தாக்குதலால், பேருந்தில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில், தூத்துக்குடி மாவட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன், 28 வயது நிறைந்த சுப்பிரமணியன் அவர்களும், அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் 30 வயது நிறைந்த சிவசந்திரன் அவர்களும், உயிரிழந்துள்ளனர்.

மதியற்ற இந்த வன்முறையை நாம் அனைவரும் வன்மையாகக் கண்டனம் செய்கிறோம். அதே வேளையில், இந்த வன்முறைக்கு மறுமொழியாக, வன்முறையைத் தூண்டும் வகையில், நம் தலைவர்களும், வேறு பிரபலங்களும் பேசி வருவது, வேதனையைத் தருகிறது. இந்த வீரர்களின் உயிர்பலியை, தங்கள் அரசியலுக்கு ஆதாயமாக்கிக் கொள்வோரை எண்ணி, இன்னும் அதிகமாக வேதனைப்படுகிறோம்.

கண்ணுக்குக் கண் என்ற பழிவாங்கும் வெறியுடன் அலைந்தால், உலகம் முழுவதும் குருடாகிவிடும் என்ற எண்ணத்தைக் கூறிய மகாத்மா காந்தி அவர்கள் பிறந்த இந்தியாவில், தற்போது, பழிக்குப் பழி என்ற உணர்வே மேலோங்கியுள்ளது.

வேதனையும், கோபமும் அலைமோதும் இவ்வேளையில், உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களை இறைவனின் சந்நிதியில் ஏந்தி வருவோம். இவ்வீரர்களை நம்பி வாழ்ந்த அக்குடும்பங்களுக்கு, மேடைகளில் முழங்கும் பழிவாங்கும் சூளுரைகள் உதவி செய்யாது. ஈடு செய்யமுடியாத இந்த இழப்பை, இந்த வீரர்களின் குடும்பங்கள், துணிவோடும், நம்பிக்கையோடும் சந்திக்கவேண்டும் என்று செபிப்போம்.

இவ்வுலகிற்கு, கனிவை, நீதியை, இரக்கத்தை, அமைதியை, உணர்த்தும் கருவிகளாக நம்மை இறைவன் உருவாக்கவேண்டும் என்று மன்றாடுவோம். இந்த மேன்மையான உணர்வுகளைப் பறைசாற்றும் ஆசிமொழிகள் சிலவற்றுடன் இன்றைய சிந்தனைகளை நிறைவு செய்வோம்.

மத்தேயு 5: 5-7,9

கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 February 2019, 14:49