லாகூர் திரு இருதயப் பேராலயத்தில் செபிக்கும் பக்தர்கள் லாகூர் திரு இருதயப் பேராலயத்தில் செபிக்கும் பக்தர்கள் 

லாகூர் : 2019, கலந்துரையாடல் ஆண்டு

தொழில்நுட்பத்தின் நவீன முறைகளைப் பயன்படுத்துகின்ற இன்றைய மக்களுக்கு, பிறரோடு தொடர்புகொள்ள குறைந்த நேரமே இருக்கின்றது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானின் லாகூர் உய்ரமறைமாவட்டம், 2019ம் ஆண்டை, கலந்துரையாடல் ஆண்டாக அறிவித்துள்ளது.

லாகூர் பேராயர் செபஸ்டியான் பிரான்சிஸ் ஷா அவர்கள், பீதேஸ் செய்திக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தனிநபர்களுக்கு இடையேயும், குடும்பங்களுக்கு இடையேயும், பல்வேறு மதத்தவர்க்கிடையேயும் கலந்துரையாடல் இடம்பெறும்போது, புதிய நம்பிக்கை பிறக்கின்றது என்று கூறியுள்ளார்.

இக்கால மக்கள், தொழில்நுட்பத்தின் நவீன முறைகளைப் பயன்படுத்துகின்றனர், ஆனால், பிறரோடு தொடர்புகொள்ள குறைந்த நேரமே அவர்களுக்கு இருக்கின்றது, எனவே, கலந்துரையாடலை மக்களிடையே ஊக்குவிக்க வேண்டியது இன்றியமையாதது என்றும்,

வாழ்வையும் அமைதியையும் ஊக்குவிப்பதற்கு, கலந்துரையாடல் உதவுகின்றது என்றும் கூறியுள்ளார், பேராயர் செபஸ்டியான் ஷா.

Puerto Ricoவில் சிறப்பு நற்செய்தி அறிவிப்பு ஆண்டு

கரீபியன் தீவிலுள்ள Puerto Ricoவில், புதிய வழியில் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு உந்துதல் கொடுக்கும் நோக்கத்தில், 2019ம் ஆண்டை, சிறப்பு நற்செய்தி அறிவிப்பு ஆண்டு என அறிவித்துள்ளனர், ஆயர்கள்.

இந்த சிறப்பு நற்செய்தி அறிவிப்பு ஆண்டு, ஆண்டவரின் திருமுழுக்கு விழாவான, சனவரி 13ம் தேதி துவங்குகின்றது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019ம் ஆண்டு அக்டோபரை, சிறப்பு மறைபரப்பு மாதமாக அறிவித்தவேளையில் சுட்டிக்காட்டிய திட்டங்கள், Puerto Rico திருஅவையிலும்  கடைப்பிடிக்கப்படும் என்று, ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.

திருமுழுக்கு பெற்றுள்ளவர்கள் என்ற உணர்வில், திருஅவையின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு உதவ வேண்டியது, அனைத்து மக்களுக்கும் நற்செய்தி அறிவிக்க அழைக்கப்பட்டிருப்பது, புதிய ஊக்கத்துடன் நற்செய்திப் பணியில் ஈடுபடுவது போன்றவை, Puerto Ricoவில், சிறப்பு நற்செய்தி அறிவிப்பு ஆண்டில் வலியுறுத்தப்படும் என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.

Puerto Ricoவில், ஏறத்தாழ 34 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். இஸ்பானியம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டும் அதிகாரப்பூர்வ மொழிகளாகும். 94.3 விழுக்காட்டு மக்கள் இஸ்பானிய மொழியைப் பேசுகின்றனர். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 January 2019, 15:05