புலம்பெயர்ந்தோர் படகில் ஏற உதவி புலம்பெயர்ந்தோர் படகில் ஏற உதவி 

மத்தியதரைக் கடலில் கைவிடப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோருக்கு...

நல்லதொரு வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கொடுமையான சூழல்களிலிருந்து வெளியேறியதே, புலம்பெயர்ந்தோர் செய்த தவறு - பேராயர் Scicluna

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

மத்தியதரைக் கடலில் பல நாள்களாக கைவிடப்பட்டுள்ள 49 புலம்பெயர்ந்தோருக்கு உதவுமாறு, மால்ட்டா ஆயர்கள், ஐரோப்பிய ஆயர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

COMECE எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் செயலர் அருள்பணி Olivier Poquillon அவர்களுக்கு, கடிதம் எழுதியுள்ள மால்ட்டா ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Charles J. Scicluna அவர்கள், ஐரோப்பாவில் புகலிடம் தர மறுக்கப்பட்டு, டிசம்பர் 22ம் தேதியிலிருந்து துன்புறும் புலம்பெயர்ந்தோர் நிலையை விளக்கிக் கூறியுள்ளார்.

பிறப்பின்போது புறக்கணிக்கப்பட்ட நம் ஆண்டவரின் பிறப்பு பெருவிழாவை கத்தோலிக்கராகிய நாம் கொண்டாடும்வேளையில், 49 புலம்பெயர்ந்தோர், லிபியா கடற்பகுதியில் காப்பாற்றப்பட்ட பின்னர், ஐரோப்பாவில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர் என்று, மால்ட்டா பேராயர் Scicluna அவர்கள் கூறியுள்ளார்.

நல்லதொரு வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கொடுமையான சூழல்களிலிருந்து வெளியேறியதே, இந்த மக்கள் செய்த தவறு என்று கூறியுள்ள, பேராயர் Scicluna அவர்கள், மனித மாண்பை மிகவும் மதிக்கின்ற, கத்தோலிக்கரும், ஐரோப்பியரும், புலம்பெயர்ந்துள்ள இம்மக்களின் துன்பங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

ஏறத்தாழ 13 நாள்கள் கடலிலே இருந்த பின்னர், சனவரி 2, இப்புதனன்று மால்ட்டா நீர்ப்பகுதியில் நுழைய இவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு தன்னார்வலர் படகுகள், இந்த மக்களுக்கு உதவிகளை எடுத்துச் சென்றுள்ளன என செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 January 2019, 15:25