குளூனி குளூனி 

சாம்பலில் பூத்த சரித்திரம்:மத்திய காலத்தில் துறவு சபைகள் பகுதி1

புனித பெர்னார்டு அவர்கள், 12ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஆன்மீகத்தில் புத்துணர்ச்சி ஏற்பட சிறந்த சக்தியாக விளங்கினார்

மேரி தெரேசா - வத்திக்கான்

ஐரோப்பிய வரலாற்றில், 5ம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டு வரை, மத்திய காலம் என கருதப்பட்டது. இந்தக் காலம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது. ஆயிரமாம் ஆண்டுக்குப் பிறகுள்ள காலத்தில், ஐரோப்பிய மக்கள் தொகை அதிகரித்தது. தொழில்நுட்பமும், வேளாண்மையும் வளர்ந்தன. கிறிஸ்தவத்திலும், ஆயர்களும், பேராயர்களும், அதிக அதிகாரம் கொண்டிருந்தனர். பொதுநிலை குருக்களும், பங்குத்தளங்களுக்குப் பொறுப்பேற்று, விசுவாசிகளுக்கு ஆன்மீகப் பணியாற்றினர். இவர்கள் தவிர, அருள்பணியாளர்கள், துறவிகள், அருள்சகோதரர்கள், மற்றும் அருள்சகோதரிகளும், ஆதீனங்களிலும், துறவு இல்லங்களிலும் வாழ்ந்து வந்தனர். பொதுநிலையினரிடமிருந்து வேறுபடுத்தி காட்டப்படுவதற்காக, இவர்கள், Regular என அழைக்கப்பட்டனர். Regular என்பது, Regula எனப்படும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததாகும். அதாவது இவர்கள், ஏழ்மை, கற்பு, பணிவு ஆகிய மூன்று வார்த்தைப்பாடுகளின் அடிப்படையில், சட்ட விதிமுறைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர்கள். ஆண் துறவிகள், தங்களுக்கென பெண் துறவிகளை வைத்திருந்தனர் எனச் சொல்லப்படுகிறது. இவர்கள் இந்த தீமையிலிருந்து விலகி வாழ்வதற்கு, கி.பி.800களில் வாழ்ந்த Aniane ஆதீனத் தலைவர் பெனடிக்ட் (இறப்பு கி.பி.821) அவர்கள், சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். ஆனால், ஆண் துறவிகள், அந்தச் சீர்திருத்தங்களை புறக்கணித்து வாழ்ந்ததால், ஏற்பட்ட அறநெறி வாழ்வுச் சிதைவு, பொதுமக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கி.பி.800 முதல், 888ம் ஆண்டுவரை, மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவை ஆட்சி செய்த, Carolingian பரம்பரையினரின் பேரரசு வீழ்ச்சியடைந்தவேளையில், ஆண் துறவிகளின் இத்தகைய வாழ்வு, பொது நிலையினர் மத்தியில் அதிகம் பாதிப்பை உண்டாக்கியது.

குளூனி துறவு சபையினரின் சீர்திருத்தம்

ஆயினும், பிரான்ஸ் நாட்டிலுள்ள Burgundy குளூனி துறவு சபைத் தலைவர்களான Odo (இறப்பு 941),  Mayeul  (இறப்பு 994),  Odilo (இறப்பு 1048)   போன்றோர்  கொண்டுவந்த சக்திமிக்க சீர்திருத்த இயக்கத்தால், புனித பெனடிக்ட் அவர்கள் எழுதிய துறவு சபை கொள்கைகள், கண்டிப்பாகப் புகுத்தப்பட்டன. நெதர்லாந்து, இத்தாலி, இஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியிலிருந்த எண்ணற்ற துறவு ஆதீனங்களில், இந்தச் சீர்திருத்தங்கள் கடைப்பிடிக்கப்பட்டு அவை எடுத்துக்காட்டுகளாய் விளங்கின. குளூனி துறவு சபையினரின் சீர்திருத்தத்திற்குமுன், துறவு ஆதீனம் என்ற நிலை கிடையாது. ஒவ்வொரு துறவு நிறுவனமும் தனித்தனியாக இயங்கி, திருத்தந்தை அல்லது தல ஆயரின்கீழ் இருந்தது. குளூனி துறவு சபையினர் புதிய கருத்தாக்கத்தைப் பரப்பினர். அதன்படி, பல்வேறு துறவு இல்லங்கள், ஒரே துறவு சபையாக இணைக்கப்பட்டு, குளூனி ஆதீனத் தலைவரின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு, அவருக்குக் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். அதேநேரம், அந்த இல்லங்கள், தல ஆயரின் அதிகாரத்திலிருந்து முழுவதும் விலக்குப் பெற்றன. இதன் பயனாக, 1,100ம் ஆண்டில், குளூனி துறவு சபையில், ஏறத்தாழ இரண்டாயிரம் துறவு இல்லங்கள் இணைந்தன.

மத்தியகால மேற்குலகில் திருஅவையின் ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண, குளூனி துறவு சபையினர் கொண்டுவந்த சீர்திருத்தம் மிக முக்கிய பங்களித்தது. அத்துடன், இது, திருத்தந்தையின் முடியாட்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவியது. பொதுநிலையினரின் ஆதிக்கத்திலிருந்து திருஅவையை விடுவிப்பதற்காக, திருத்தந்தை பெரிய கிரகரி அவர்கள் எடுத்த சீர்திருத்த முயற்சிக்கு, மிகவும் சக்திவாய்ந்த ஆன்மீக பலமாகவும் அமைந்திருந்தது. துறவிகளின் உணவிலிருந்து மாமிசத்தை நீக்கியது, துறவிகள் தனியாகச் சொத்துக்களை வைத்திருப்பதை நீக்கியது, துறவு இல்லங்களில் மௌனம் கடைப்பிடிப்பது போன்ற, புனித பெனடிக்ட் அவர்களின் கொள்கைகளைக் கண்டிப்பான முறையில் புகுத்தியது போன்றவை, குளூனி துறவு சபையினரின் சீர்திருத்தம் வெற்றியடைய உதவியதாகச் சொல்லப்படுகின்றது. இதற்குப் பின்னர், துறவிகளின் ஆன்மீகத்திலும் மறுமலர்ச்சி வெளிப்படையாகக் காணப்பட்டது. துறவு நிறுவனங்களில் ஆடம்பர வாழ்க்கை வளர்ந்து வருவதில் மகிழ்ச்சியற்று இருந்த புதிய குழுக்களும், சபைகளுக்குள் தோன்றின.

சிஸ்டர்சியன் துறவு சபை

Molesmes ஆதீனத் தலைவரான இராபர்ட் என்பவரின் தலைமையில், 1098ம் ஆண்டு இந்தப் புதிய குழுக்கள், பிரான்ஸ் நாட்டிலுள்ள, Chalons மறைமாவட்டத்தில், ஆள்நடமாட்டமில்லாத Citeaux என்ற இடத்திற்குச் சென்றன. இதுவே, சிஸ்டர்சியன் (Cistercian) எனப்படும் புதிய துறவு ஆதீனத்தின் தொடக்கமாக அமைந்தது. ஆயினும், இந்த ஆதீனத்தின் மூன்றாவது தலைவராகப் பணியாற்றிய, ஆங்கிலேய புனிதர் Stephen Hardin (இறப்பு 1134) என்பவரே, சிஸ்டர்சியன் துறவு சபையின் உண்மையான நிறுவனர் எனச் சொல்லப்படுகின்றது. ஏனெனில், ஏழ்மை என்ற பண்பில் பேரார்வம் கொண்டிருந்த துறவி Stephen Hardin அவர்களின் சிறப்பான நிர்வாகத் திறமைகளே இதற்குக் காரணம். 1113ம் ஆண்டில் பெர்னார்டு அவர்கள், தனது உடன்பிறப்புகள் இருவர் உட்பட, முப்பது சீடர்களுடன், Citeaux சிஸ்டர்சியன் துறவு ஆதீனத்தில் சேர்ந்தது, அந்த ஆதீன வரலாற்றில்,   மிக முக்கிய தருணமாகும். இதற்கு மூன்று ஆண்டுகள் சென்று, பெர்னார்டு அவர்கள், Citeaux ஆதீனத்திள் சகோதரி இல்லமாக, Clairvaux என்ற இடத்தில், ஒரு புதிய துறவு இல்லத்தைத் தொடங்கினார். இவர், தனது சிறந்த மறையுரைகள், எழுத்துக்கள், மக்களை ஆன்மீக வழியில் திறமையாக வழிநடத்தியது போன்றவைகளால், 12ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஆன்மீகத்தில் புத்துணர்ச்சி ஏற்பட தலைமை சக்தியாக இருந்தார். அக்காலத்தில் மிகவும் புகழ்பெற்ற நாட்டின் மனிதராகவும் இவர் இருந்தார். இத்தகைய சிஸ்டர்சியன் தலைவர்களால், திருஅவை எங்கும் நல்தாக்கங்கள் இடம்பெற்றன. இத்துறவியர், 1120ம் ஆண்டில் இத்தாலி, 1123ம் ஆண்டில் ஜெர்மனி, 1128ம் ஆண்டில் இங்கிலாந்து, 1132ம் ஆண்டில் இஸ்பெயின், 1142ம் ஆண்டில் அயர்லாந்து, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளில் இல்லங்களை அமைத்துப் பணியாற்றத் தொடங்கினர். அச்சமயத்தில், Citeaux துறவு ஆதீனத்தோடு இணைந்த அறுநூறுக்கும் அதிகமான துறவு இல்லங்கள் இருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 January 2019, 14:17