உரோமிலுள்ள பண்டைகால அடிநில கல்லறைகள் உரோமிலுள்ள பண்டைகால அடிநில கல்லறைகள் 

சாம்பலில் பூத்த சரித்திரம்–மத்திய காலத்தில் திருத்தந்தையர் ஆட்சி

ஒரு திருத்தந்தை எவராலும் தீர்ப்பிடப்பட முடியாதவர். ஆயர்களை நியமிக்கவும், அவர்களை, பதவியிலிருந்து நீக்கவும் திருத்தந்தைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

மேரி தெரேசா - வத்திக்கான்

11ம் நூற்றாண்டில் திருத்தந்தை 7ம் கிரகரி அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் மீது பேரரசர்கள் கொண்டிருந்த ஆதிக்கத்தை அகற்றுவதற்காக தீவிரமாக நடவடிக்கை எடுத்தார். Dictatus papae என்ற அறிக்கையின் வழியாக, திருத்தந்தையின் தன்னிகரில்லா அதிகாரத்தை உறுதிப்படுத்தினார். உரோமன் கத்தோலிக்கத் திருஅவை, கிறிஸ்துவால் மட்டுமே தோற்றுவிக்கப்பட்டது. அத்திருஅவை ஒருபோதும் தவறிழைத்தது கிடையாது. அது, காலம் முடியும்வரை ஒருபோதும் தவறிழைக்காது. ஒரு திருத்தந்தை எவராலும் தீர்ப்பிடப்பட முடியாதவர். ஆயர்களை நியமிக்கவும், அவர்களை, பதவியிலிருந்து நீக்கவும் திருத்தந்தைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. திருத்தந்தை மட்டுமே புதிய சட்டங்களையும், புதிய மறைமாவட்டங்களையும் உருவாக்குவார். பொது அவைகளை கூட்டவும், திருஅவை சட்டங்களை அங்கீகரிக்கவும் திருத்தந்தைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவர் வழங்கும் தீர்ப்புகளை அவர் மட்டுமே திருத்தி எழுதுவார்... இவ்வாறு திருத்தந்தை 7ம் கிரகரி அவர்கள் அறிக்கை வெளியிட்டு, திருத்தந்தையர் மீது பேரரசர்கள் கொண்டிருந்த அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இவரின் இம்முயற்சி, இவரின் மரணத்திற்குப் பின்னர், பதவியேற்ற திருத்தந்தையரால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. திருத்தந்தையர், ஆன்மீகத்திற்கும், உலகுசார்ந்த விடயங்களுக்கும் தலைவர்களாக இருந்தனர்.

12ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில், அருள்பணியாளர்கள், ஆயர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பரவலாக அங்கீகரிக்கப்பட்டது. இருந்தபோதிலும், ஆயர்கள் நியமனத்தில் அடிக்கடி பிரச்சனைகள் எழுந்ததால், அதில் திருத்தந்தை தலையிட வேண்டியிருந்தது. இந்தப் பிரச்சனை, 14ம் நூற்றாண்டில் ஒரு முடிவுக்கு வந்தது. எவ்வாறெனில், ஆயர்களை நியமிக்கும் உரிமையை திருத்தந்தையர் ஏற்றுக் கொண்டனர். மேலும், 12ம் நூற்றாண்டில், கிறிஸ்தவ உலகில், அனைவரின் ஆன்மீக நலனைக் கண்காணிப்பதில், திருத்தந்தையர், மிகவும் ஆர்வம் காட்டினர். இதில் திருத்தந்தை 7ம் கிரகரி அவர்களின் வழியைப் பின்பற்றினர். இந்நிலை, திருத்தந்தை 3ம் அலெக்சாண்டர் அவர்கள், பேரரசர் பிரெட்ரிக் பார்பரோசாவுக்கு (Frederick Barbarossa) எதிராக எடுத்த நிலைப்பாட்டில் தெளிவாகத் தெரிந்தது.

பேரரசர் பிரெட்ரிக் பார்பரோசா அவர்கள், இத்தாலியை தனக்கு அடிமைப்படுத்தி, இத்தாலியின் லொம்பார்தி பகுதி நகரங்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் திட்டமிட்டார். இத்திட்டத்தை, திருத்தந்தை 3ம் அலெக்சாண்டர் அவர்கள் எதிர்த்தார். அதனால், இப்பேரரசர் உரோம் நகரைத் தாக்கி, எதிர்த்திருத்தந்தை ஒருவரை பதவியில் அமர்த்தினார். ஆயினும், லொம்பார்தி பகுதி நகரங்கள் மற்றும் ஐரோப்பாவில் வல்லமை கொண்ட பெரும்பாலானவர்களின் ஆதரவைக் கொண்டு, 1176ம் ஆண்டில், லெஞ்ஞானோ எனுமிடத்தில் பேரரசர் பிரெட்ரிக் பார்பரோசா அவர்களைத் தாக்கி தோற்கடித்தார், திருத்தந்தை 3ம் அலெக்சாண்டர். இறுதியில், வெனிஸ் நகரின் புனித மாற்கு வளாகத்தில், திருத்தந்தையும், பேரரசர் பிரெட்ரிக்கும் சந்தித்தனர். திருத்தந்தை மீது மிகுந்த மரியாதை காட்டி, அவரின் காலடியில் சரணடைந்தார் பேரரசர் பிரெட்ரிக் பார்பரோசா. கண்ணீரோடு முழங்காலிட்டு மன்னிப்பும் கேட்டார் அவர். திருத்தந்தையும் பேரரசரை அன்போடு கட்டித் தழுவினார் என வரலாறு கூறுகிறது.

அதேபோல், புனித தாமஸ் பெக்கெட் (St.Thomas Becket)  விவகாரத்திலும் திருத்தந்தையின் ஆன்மீகத் தலைமைத்துவத்திற்கு வெற்றி கிடைத்தது. இங்கிலாந்து அரசர் இரண்டாம் ஹென்றி அவர்கள், தனது நெருங்கிய நண்பரும், தனது அரசவையில் சான்சிலராகவும் பணியாற்றிய தாமஸ் பெக்கெட் அவர்கள், தனக்குச் சாதகமாக இருப்பார் எனக் கருதி, அவரை கான்டர்பரியின் புதிய பேராயராக நியமித்தார். ஆனால் தாமஸ் பெக்கெட் அவர்கள், தான் பொறுப்பேற்ற நாள் முதல், உரோமை திருத்தந்தைக்கு விசுவாசமாக இருந்தார். அரசரும், உரோம் திருத்தந்தையோடு இணக்கமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வந்தார். ஆனால், அரசரோ, இங்கிலாந்தில், திருஅவை தனித்து இயங்க வேண்டும் என்று விரும்பினார். இதனால் அரசருக்கும், பெக்கெட் அவர்களுக்கும் இடையே பிரச்சனை உருவானதால், பெக்கெட் அவர்கள், 1164ம் ஆண்டு இங்கிலாந்தைவிட்டு வெளியேறி பிரான்சில் இரண்டு ஆண்டுகள் தஞ்சமடைந்தார். அதேநேரம், இங்கிலாந்து அரசரும், தனக்கு எதிராக இருக்கும் அரசர் மற்றும் இச்செயலுக்கு துணைபோகும், ஆயர், குருக்கள், விசுவாசிகள் அனைவரையும் திருச்சபையிலிருந்து விலக்குவது என்று முடிவெடுத்தார். ஆனால் இது அன்றைய திருத்தந்தை 3ம் அலெக்சாண்டரின் தலையீட்டால் நிறுத்தப்பட்டது. 1170ம் ஆண்டு டிசம்பர் 29ம் நாள், பெக்கெட் அவர்கள், கான்டர்பரி பேராலயத்தில் மாலை செபத்திற்கு எப்போதும் போலவே நுழைந்தார். அப்போது பாதுகாப்புக்காக நின்ற படைவீரர்களாலே, அவரது மண்டை கொடூரமாய் வாளால் பிளக்கப்பட்டது. மூளை சிதறியது. இயேசு மற்றும் அவரின் திருஅவையின் பெயரால் மரணத்தை ஏற்கிறேன் என்று சொல்லி உயிர்துறந்தார் பெக்கெட். இவர்  கொலை செய்யப்பட்ட விவகாரம், ஐரோப்பா எங்கும் அரசருக்கு எதிரான கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதில் அச்சமடைந்த இங்கிலாந்து அரசர், தனது தூதரை திருத்தந்தையிடம் அனுப்பி, திருத்தந்தைக்கும், திருஅவைக்கும் பணிந்து நடப்பதாக உறுதியளித்தார்.

இவ்வாறு திருத்தந்தையர், மத்திய காலத்தில் தங்களின் ஆன்மீக அதிகாரத்தைச் செயல்படுத்தினர். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2018, 15:10