பெத்லகேம் நகரில், இயேசுவின் பிறப்பு பசிலிக்காவில், இயேசு பிறந்த இடத்தில் செபிக்கும் பக்தர்கள் பெத்லகேம் நகரில், இயேசுவின் பிறப்பு பசிலிக்காவில், இயேசு பிறந்த இடத்தில் செபிக்கும் பக்தர்கள் 

கிறிஸ்து பிறப்பு பசிலிக்காவில் கர்தினால் சாந்த்ரி

பெத்லகேமிலிருந்து, இவ்வுலகை ஒளிர்வித்த, குழந்தை இயேசுவின் சமாதானம், உலகெங்கும், குறிப்பாக, பாலஸ்தீன மக்களுக்கு பரவவேண்டும் - கர்தினால் சாந்த்ரி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பெத்லகேமில் நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் என்பதைக் கொண்டாடும் கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு இரு வாரங்களுக்கு முன்னர், நாம் கிறிஸ்து பிறப்பு பசிலிக்காவில் கூடியிருப்பதற்கு பேறுபெற்றுள்ளோம் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், புனித பூமியில் வழங்கிய ஓர் உரையில் கூறினார்.

டிசம்பர் 11, இச்செவ்வாயன்று, புனித பூமியின் பெத்லகேம் நகரில், இயேசுவின் பிறப்பு பசிலிக்காவைப் புதுப்பிக்கும் முயற்சிகளைத் துவக்கிவைக்கும் நிகழ்வில், கீழை வழிபாட்டு திருஅவைகள் பேராயத்தின் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரி அவர்கள் வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபை, ஆர்மேனிய அப்போஸ்தலிக்க தலைமை, புனித பூமியின் பாதுகாவலர்களாக பணியாற்றும் பிரான்சிஸ்கன் துறவு சபை, மற்றும், கீழை வழிபாட்டு திருஅவைகள் பேராயம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சிகளால், இந்த புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை, கர்தினால் சாந்த்ரி அவர்கள் எடுத்துரைத்தார்.

அனைத்திற்கும் மேலாக, பாலஸ்தீனிய அரசு, பெத்லகேம் உட்பட, புனித பூமியில் உள்ள பல புனிதத் தலங்களை காப்பதில் காட்டிவரும் அக்கறைக்கு திருப்பீடம் நன்றி கூறுவதாக, கர்தினால் சாந்த்ரி அவர்கள் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

கிறிஸ்து பிறப்பு பசிலிக்காவின் புதுப்பித்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் ROACO அமைப்பினரை, சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்கள் ஆற்றிவரும் அரிய பணிகளுக்கு நன்றி கூறியதையும், மறுசீரமைப்பது, புதுப்பிப்பது ஆகிய பணிகள், ஒவ்வொருவர் வாழ்விலும் நடைபெறவேண்டும் என்று குறிப்பிட்டதையும், கர்தினால் சாந்திரி அவர்கள், தன் உரையில் எடுத்துரைத்தார்.

பெத்லகேமிலிருந்து, இவ்வுலகை ஒளிர்வித்த, குழந்தை இயேசுவின் சமாதானம், உலகெங்கும், குறிப்பாக, பாலஸ்தீன மக்களுக்கு பரவவேண்டும் என்ற வேண்டுதலோடு, கர்தினால் சாந்த்ரி அவர்கள் தன் உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 December 2018, 15:47