அமெரிக்காவின் எல்லை தடுப்பு சுவர் அமெரிக்காவின் எல்லை தடுப்பு சுவர் 

தடுப்புச் சுவர் எழுப்பும் பணிக்கு, நிலத்தை தர மறுத்த ஆயர்

எல்லை தடுப்புச் சுவர் எழுப்ப, மறைமாவட்டத்தின் நிலத்தை தர மறுத்த Brownsville மறைமாவட்டத்தின் ஆயர் டேனியல் பிளோரஸ் அவர்கள் மீது, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு வழக்குத் தொடுத்துள்ளது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் தென் முனையில் அமைந்துள்ள Brownsville மறைமாவட்டத்தின் ஆயர் மீது, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு, வழக்கு ஒன்றை தொடுத்துள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், மெக்சிகோ நாட்டிற்கும் இடையே எல்லை தடுப்புச் சுவர் எழுப்புவதற்கு, மறைமாவட்டத்திற்குச் சொந்தமான நிலத்தை அரசு கேட்டபோது, Brownsville மறைமாவட்ட ஆயர், டேனியல் ஃபிளோரஸ் அவர்கள் மறுத்து விட்டதால், அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மெக்சிகோ நாட்டின் எல்லைப் பகுதியைக் காப்பதற்கு அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தான் ஆதரிப்பதாகக் கூறிய ஆயர் ஃபிளோரஸ் அவர்கள், தடுப்புச் சுவர் எழுப்புவதற்கு, மறைமாவட்ட நிலத்தைப் பயன்படுத்துவதை தான் அனுமதிக்கப்போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

மறைமாவட்டங்களுக்கும், கோவில்களுக்கும் சொந்தமான நிலங்கள், பாலங்கள் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டுமேயொழிய, சுவர்கள் எழுப்புவதற்குப் பயன்படுத்தப்படக் கூடாது என்று ஆயர் ஃபிளோரஸ் அவர்கள் மேலும் கூறினார்.

பொதுவாகவே, அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலத்திருஅவை புலம்பெயர்ந்தோருக்குப் புகலிடம் வழங்கிவந்துள்ளது என்று கூறிய சமூக ஆர்வலர், Kevin Appleby அவர்கள், ஆயர் மீது வழக்குத் தொடர்வதன் வழியே, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு, தன் அரசியல் கொள்கையை வெளிப்படுத்தியுள்ளது என்றும், அதற்கு ஆயர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது சரியான பதில் என்றும் கூறியுள்ளார். (Sir)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2018, 14:51