அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களின் ஆண்டு கூட்டம் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களின் ஆண்டு கூட்டம் 

அமெரிக்க ஆயர்கள் திருத்தந்தைக்கு அனுப்பியுள்ள மடல்

பாலியல் கொடுமைக்குத் தீர்வு காண, வரும் ஆண்டு பிப்ரவரி மாதம், வத்திக்கானில் கூடவிருக்கும் ஆயர்கள் கூட்டத்தை, நம்பிக்கையுடன் எதிர்நோக்கியிருப்பதாகக் கூறியுள்ளனர், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 12, இத்திங்கள் முதல், 14 இப்புதன் முடிய அமெரிக்க ஐக்கிய நாட்டின் பால்டிமோர் நகரில் தங்கள் ஆண்டு கூட்டத்தை நடத்திய அந்நாட்டு ஆயர்கள், இக்கூட்டத்தின் இரண்டாம் நாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

தங்கள் நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தில் நிகழ்ந்த இஸ்பானிய, இலத்தீனோ கத்தோலிக்கர்கள் கூட்டத்திற்கு, திருத்தந்தை அனுப்பியிருந்த வாழ்த்துக்களுக்கும், பிட்ஸ்பர்க் நகரில் யூதத் தொழுகைக்கூடத்தில் நிகழ்ந்த தாக்குதலுக்கு, திருத்தந்தை அனுப்பியிருந்த அனுதாபச் செய்திக்கும் ஆயர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும், நவம்பர் 18, உலகெங்கும் கத்தோலிக்கத் திருஅவை சிறப்பிக்கவிருக்கும் உலக வறியோர் நாள் நிகழ்வுகளில் அமெரிக்க தலத்திருஅவை முழுமனதுடன் பங்கேற்கும் என்பதை, இம்மடலின் வழியே உறுதி செய்துள்ள ஆயர்கள், உலகெங்கும் வறியோர் எழுப்பும் துன்பக் குரலைக் கேட்பதற்கு, அமெரிக்க கத்தோலிக்கர்கள் முயன்று வருகின்றனர் என்பதையும் கூறியுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு தலத்திருஅவையை பெருமளவு பாதித்துள்ள பாலியல் வன்கொடுமை என்ற பாவம், தங்கள் ஆண்டு கூட்டத்தின் முக்கிய கருத்தாக அமைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டும் ஆயர்கள், இந்தக் கொடுமைக்குத் தீர்வு காண, வரும் ஆண்டு பிப்ரவரி மாதம், வத்திக்கானில் கூடவிருக்கும் ஆயர்கள் கூட்டத்தை, தாங்கள் நம்பிக்கையுடன் எதிர்நோக்கியிருப்பதாகக் கூறியுள்ளனர்.

"தூய ஆவியார் நம் அனைவருக்கும் மனமாற்றம் தந்து, பாலியல் கொடுமை என்ற பாவத்தை முற்றிலும் ஒழிக்கும் வரத்தைத் தருவாராக" என்று திருத்தந்தை வெளியிட்டுள்ள செபத்தில் தாங்களும் ஒன்றித்திருப்பதாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் திருத்தந்தைக்கு அனுப்பியுள்ள மடலில் கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 November 2018, 15:36