பிலிப்பீன்ஸ் பேரணியில் ஆயர் பேரவைத் தலைவர் பிலிப்பீன்ஸ் பேரணியில் ஆயர் பேரவைத் தலைவர் 

போதைப்பொருள் தொடர்புடைய கொலைகளுக்கு கண்டனம்

போதைப்பொருள் தொடர்பாக இடம்பெறும் கொலைகளுக்கு மறைமுகஆதரவு வழங்குவோரின் பெயர்கள், நரகத்தின் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும், பிலிப்பீன்ஸ் ஆயர் Virgilio David எச்சரிக்கை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டில் போதைப்பொருள் தொடர்பாக இடம்பெறும் பெருமளவான கொலைகளுக்கு ஆதரவு வழங்குவோர் மற்றும் அவற்றை சகித்துக்கொள்வோர்க்கு எதிராக கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் ஒருவர்.

17 வயது நிறைந்த Kian delos Santos என்ற சிறுவன், போதைப்பொருள்களை எடுத்துச் செல்பவன் எனக் குற்றம் சாட்டப்பட்டு காவல்துறையால் கொல்லப்பட்ட ஓராண்டு நினைவு திருப்பலியை, ஆகஸ்ட் 17ம் தேதி நிறைவேற்றிய, Kalookan ஆயர் Pablo Virgilio David அவர்கள், பலியானவர்களின் குடும்பங்களின் கண்ணீர், இறைவனின் இரக்க அரியணையில் கேட்கப்படும் என்று கூறினார்.

சட்டத்திற்குப் புறம்பேயான போதைப்பொருளுக்கு எதிராய் போர் தொடுக்கிறோம் என்று சொல்லிக்கொள்பவர்களே, உங்களுக்கு ஐயோ கேடு என்றும், போதைப்பொருளுக்குப் பலியானவர்களை மீட்டு மறுவாழ்வு அளிப்பதற்குப் பதிலாக, அவர்களைக் கொலை செய்கின்றீர்கள் என்றும், ஆயர் குறை கூறினார்.

Delos Santos நினைவுச்சின்னம் ஒன்றையும் ஆயர் அவர்கள் திறந்து வைத்துள்ளார்.  

ரொட்ரிகோ துத்தர்தே அவர்கள் பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவராக, 2016ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி பதவியேற்ற நாள் முதல், 2018ம் ஆண்டு ஜூன் 30 வரை, போதைப்பொருள் தொடர்பாக 4,500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என, அந்நாட்டு காவல்துறை கூறியுள்ளது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 August 2018, 15:51