கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் சாக்கோ கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் சாக்கோ 

கர்தினால் சாக்கோ: ஈராக் நாட்டிற்கு சக்திமிகுந்த அரசு தேவை

ஈராக் நாட்டை அழிவிலிருந்து காப்பாற்ற, சக்தி மிகுந்த, அரசு தேவை என்று, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும்தந்தை, கர்தினால் சாக்கோ அவர்கள், அந்நாட்டு அரசியல் தலைவர்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாடு தற்போது எதிர்கொள்ளும் பயங்கரமான நிலையிலிருந்து வெளியேற, சக்திமிகுந்த ஓர் அரசு தேவை என்று கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும்தந்தை, கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.

மே மாதம் 12ம் தேதி நடந்து முடிந்த தேர்தல்களைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட அரசு, கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக செயலிழந்து உள்ளது என்றும், ஒரு கூட்டணி அரசு, சக்தியோடு செயல்பட்டால் மட்டுமே, ஈராக் நாட்டைக் காப்பாற்றமுடியும் என்றும், கர்தினால் சாக்கோ அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கும், ஏனைய அரசு அதிகாரிகளுக்கும் முதுபெரும்தந்தை சாக்கோ அவர்கள் அனுப்பியுள்ள ஒரு மடலில், நாட்டிற்குத் தேவையான பத்து அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன என்று ஃபீதேஸ் செய்தி கூறுகிறது.

சதாம் ஹுசேன் ஆட்சியை நீக்க, அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவத்தின் உதவியைக் கோரிய அன்றைய ஈராக் நாட்டுத் தலைவர்கள், மக்களுக்கு குடியரசைத் தருவதாக அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதை, கர்தினால் சாக்கோ அவர்கள் தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க படையெடுப்புக்குப் பின், நாட்டின் பல பகுதிகளில், இன்னும் மின்சாரம், குடி நீர் ஆகியவை கிடைக்கும் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை என்பதையும் கர்தினால் சாக்கோ அவர்களின் மடல் சுட்டிக்காட்டுகிறது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2018, 15:57