ஆயர்கள் சந்திப்பு கூட்டம் ஆயர்கள் சந்திப்பு கூட்டம் 

60 இலட்சம் டாலர்கள் நிதி உதவி வழங்கிய அமெரிக்க ஆயர் பேரவை

ஆப்ரிக்க நாடுகளிலும், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களுக்கு, அமெரிக்க ஆயர் பேரவை, 60 இலட்சம் டாலர்கள் நிதி உதவி வழங்கியுள்ளது

லூயிஸ் ஜெரோம் – வத்திக்கான் செய்திகள்

அமைதி, நீதி, ஒப்புரவு, கிறிஸ்தவ நம்பிக்கை ஆகியவற்றை ஆப்ரிக்க கண்டத்தில் பரப்புவதற்கு, அங்கு வாழும் சகோதரர்களும், சகோதரிகளும் கொண்டுள்ள அர்ப்பண உணர்வுடன், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் கத்தோலிக்கர்கள் ஒன்றித்துள்ளனர் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு கர்தினால், ஜோசப் டோபின் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆப்ரிக்க நாடுகளிலும், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளுக்கு, அமெரிக்க ஆயர் பேரவை, 60 இலட்சம் டாலர்கள் நிதி உதவி வழங்கிய வேளையில், இந்த நிதி உதவியை ஒருங்கிணைக்கும் கர்தினால் டோபின் அவர்கள் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

துறவற, மற்றும் அருள்பணியாளர் உருவாக்கம், பொதுநிலையினரிடையே தலைவர்களை உருவாக்குதல், குடும்பங்களை மையப்படுத்திய மேய்ப்புப்பணிகள் ஆகிய திட்டங்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது என்று அமெரிக்க ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

ஆப்ரிக்க நாடுகளில் மேற்கொள்ளப்படும் 54 முயற்சிகளுக்கு, 14 இலட்சம் டாலர்களும், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் 22 நாடுகளில் மேற்கொள்ளப்படும் 209 முயற்சிகளுக்கு, 49 இலட்சம் டாலர்களும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் அனைத்து பங்கு கோவில்களிலும் திருநீற்றுப் புதனன்று திருப்பலிகளில் திரட்டப்படும் நிதியிலிருந்து, அந்நாட்டு ஆயர் பேரவை ஒவ்வோர் ஆண்டும் இத்தகைய நிதி உதவிகளைச் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2018, 14:51