இறைவனின் ஊழியர் அருள்பணி பேத்ரோ அருப்பே இறைவனின் ஊழியர் அருள்பணி பேத்ரோ அருப்பே 

அருள்பணி அருப்பேயை அருளாளராக உயர்த்தும் பணிகள் ஆரம்பம்

இயேசு சபையின் உலகத் தலைவரும் இறைவனின் ஊழியருமான அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்களை அருளாளராக உயர்த்தும் பணிகள் ஆரம்பம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள் 

ஜூலை,25,2018. இயேசு சபையின் 28வது உலகத் தலைவராகப் பணியாற்றிய, இறைவனின் ஊழியர் அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்களை, அருளாளராக உயர்த்தும் பணிகளைத் துவங்குவதற்கு, உரோம் மறைமாவட்டம் அனுமதி வழங்கியுள்ளது என்று, இயேசு சபையின் தற்போதைய உலகத் தலைவர், அருள்பணி அர்த்தூரோ சோசா அவர்கள் கூறியுள்ளார்.

இயேசு சபையின் பல்கலைக்கழகங்களில் பணிபுரிவோரின் உலக மாநாடு அண்மையில் ஸ்பெயின் நாட்டின் பில்பாவோ நகரில் நடைபெற்ற வேளையில், அருள்பணி அர்த்தூரோ சோசா அவர்கள் இதனை அறிவித்தார்.

திருத்தந்தையின் சார்பில் உரோம் மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றும் கர்தினால் ஆஞ்செலோ தே தொனாத்திஸ் அவர்கள் வழங்கிய ஒப்புதலைத் தொடர்ந்து, இந்தப் பணி ஆரம்பமாகியுள்ளது என்று அருள்பணி சோசா அவர்கள் கூறினார்.

1907ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி, ஸ்பெயின் நாட்டின் பில்பாவோ நகரில் பிறந்த பேத்ரோ அருப்பே அவர்கள், 1945ம் ஆண்டு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளானபோது, அந்நகரின் அருகே அமைந்திருந்த இயேசு சபை நவத்துறவியர் இல்லத்தில், நவத்துறவியரின் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.

1968ம் ஆண்டு, இயேசு சபையின் 28வது உலகத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அருள்பணி அருப்பே அவர்கள், 1983ம் ஆண்டு, பக்கவாத நோயினால் தாக்கப்படும் வரை, சபையின் தலைவராக, தலைசிறந்த பணியாற்றினார்.

1991ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி தன் 83வது வயதில் இறையடி சேர்ந்த அருள்பணி அருப்பே அவர்கள் துவக்கிய பல்வேறு முயற்சிகளில், புலம்பெயர்ந்தோர் பணிக்கென உருவாக்கிய இயேசு சபையின் பணிக்குழு மிக முக்கிய முயற்சி என்று கருதப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2018, 15:33