தேடுதல்

தாவீது அரசர் தாவீது அரசர்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 52-2, வஞ்சகம் தவிர்ப்போம்!

நமது அன்றாட கிறிஸ்தவ வாழ்வில், தோயேகுவிடம் விளங்கிய தீமையின் செயல்கள், நம்மிடமும் இருக்கின்றவனவா என்பதை ஆய்வு செய்து பார்ப்போம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 52-2, வஞ்சகம் தவிர்ப்போம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘தன்வினை தன்னைச் சுடும்!’  என்ற தலைப்பில் 52-வது திருப்பாடல் குறித்த நமது சிந்தனைகளைத் தொடங்கினோம். அதில் குறிப்பாக, இத்திருப்பாடல் எழுதப்பட்டதன் பின்னணிக் குறித்த தகவல்களை அறிந்துகொண்டோம். ஓர் இளைஞனாக மன்னர் சவுலால் தாவீது சந்தித்த சவால்கள், இன்னல்கள், இடையூறுகள் குறித்தெல்லாம் அறிந்துகொண்டோம். மேலும் சர்வாதிகார உணர்வும் அதிகார வெறியும் இணைந்துகொண்டால் அது எந்தளவுக்குப் பிறருக்குத் தீமையை விளைவிக்கும் என்பதையும் உணர்ந்தோம். இவ்வாரம், 1 முதல் 3 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். இப்போது இறையமைதியில் அவ்வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம். வலியோனே! தீமை செய்வதில் ஏன் பெருமை கொள்கின்றாய்? இறைவனின் பேரன்பு எந்நாளும் உள்ளது. கேடுவிளைவிக்க நீ திட்டமிடுகின்றாய்; உனது நா தீட்டிய கத்தி போன்றது; வஞ்சகத்தில் தேர்ந்தோன் நீ அன்றோ! நன்மை செய்வதைவிட தீமை செய்வதையே விரும்புகின்றாய்; உண்மை பேசுவதைவிட பொய் பேசுவதையே விரும்புகின்றாய். (வச 1-3).

தாவீதின் இந்த வார்த்தைகளைத் தியானிப்பதற்கு முன்பாக நடந்த நிகழ்வொன்றை குறித்துப் பார்ப்போம். ‘காலில் விழுந்து கெஞ்சிய பயணி; விடாமல் தாக்கிய காவலர் -வேலூர் பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி!’ என்ற தலைப்பில் அண்மையில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதனை நான் வாசித்தபோது எனது நெஞ்சம் கனத்தது. அது என்ன செய்தி என்பதை இப்போது நாம் அறிந்துகொள்வோம். ‘வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணி மீது காவலர் ஒருவர் தாக்குதல் நடத்தியிருக்கிறார். பேருந்துக்குள் புகுந்தும் அடித்து, கீழே இழுத்து வர முயன்றிருக்கிறார். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின’ என்று அந்தச் செய்தித் தொடங்குகின்றது. வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம்  17-ஆம் தேதி இரவு 11 மணியளவில் இருந்து நள்ளிரவு 1 மணி ஆகியும், திருவண்ணாமலைக்குச் செல்லக்கூடிய பேருந்துகள் இல்லாததால், குடும்பத்துடன் காத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். நீண்ட நேரமாகப் பேருந்துகள் வராததால், அங்கிருந்த போக்குவரத்து ஊழியர்களிடம் பயணிகள் சிலர் கோபப்பட்டு வாக்குவாதம் செய்திருக்கின்றனர். அபோது இரவு நேர கண்காணிப்புப் பணியில் இருந்த வேலூர் வடக்குக் காவல் நிலையக் காவலர் விஜயகுமார் என்பவர் பயணிகளை அமைதிப்படுத்த மிரட்டல் தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது. அந்நேரத்தில், நடுத்தர வயதுடைய ஆண் பயணி ஒருவர் அமைதியாகாமல் சத்தம் போட்டபடியே இருந்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த காவலர் விஜயகுமார், அனைவர் முன்னிலையிலும் அந்தப் பயணியின் கன்னத்தில் அறைந்திருக்கிறார். காவல் நிலையம் அழைத்துச் செல்ல சட்டையைப் பிடித்தும் இழுத்திருக்கிறார். இதனால் அங்குக் கூடியிருந்த பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகி காவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அப்போது அந்தக் காவலர், ‘‘அவர் போதையில இருக்கிறார். காவலர் சீருடையில் இருக்கிற என்னைப் பார்த்து ‘யோவ்’ என்கிறார்’’ என்றவரிடம், ‘‘நான் போதையில இருக்கிறதை நீங்கப் பார்த்திங்களா..? நான் ‘யோவ்’ என்று சொல்லவே கிடையாது’’ என்று அடிவாங்கிய பயணியும் வாக்குவாதம் செய்திருக்கிறார். இதையடுத்து, அங்கு வரவழைக்கப்பட்ட சிறப்புப் பேருந்தில் திருவண்ணாமலை பயணிகள் ஏறினர். அப்போது, அடிவாங்கிய பயணியும் ஊருக்குச் செல்ல அப்பேருந்தில் ஏறியிருக்கிறார்.  அதைப் பார்த்ததும் காவலர் விஜயகுமார் பேருந்துக்குள் புகுந்தும் அவரை அடித்து, கீழே இழுத்து வர முயன்றிருக்கிறார். அப்போது, ‘அய்யா, நான் வீட்டுக்குப் போகணும்’ என்று சொல்லி, காவலரின் காலில் விழுந்திருக்கிறார் அந்தப் பயணி. அதன் பிறகும் அந்தக் காவலரின் போக்கு எல்லை மீறியதால், சக பயணிகள் கூட்டமாகச் சேர்ந்து, காவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே சூழல் மாறியதை உணர்ந்த காவலர் விஜயகுமார் அமைதியாகி பயணியை விட்டுச் சென்றார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன என்று அந்தச் செய்தி நிறைவடைகிறது. பொதுவாக, காவலர்களிடம் அதிகம் வாக்குவாதம் செய்யக் கூடாது என்பார்கள். அதற்குக் காரணம், தங்கள் விருப்பத்திற்கு மாறாக, ஒருவர் செயல்பட்டால் அதில் நியாயமே இருந்தாலும் கூட, சில காவலர்கள் தங்களுக்கு அரசு கொடுத்துள்ள அதிகாரத்தை இப்படித்தான் முறைகேடாகப் பயன்படுத்துவார்கள். மக்களைக் காக்கவேண்டிய ஒரு பொறுப்பிலுள்ள காவலர் இப்படி தனது வலிமையை, அதிகாரத்தை தவறான வழியில் பயன்படுத்த தொடங்கினால் அது தீமையில்தான் சென்று முடியும் என்பது திண்ணம். இங்கே இத்தீமையான செயல் அக்காவலருக்கோ அல்லது அவர்சார்ந்த காவல் துறைக்கோ அல்லது அத்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற அரசுக்கோ அவப்பெயரையும், வெறுப்பையும் ஏற்படுத்துகிறது.

நாம் தியானிக்கும் இன்றையத் திருப்பாடலில் முதலாவதாக, “வலியோனே! தீமை செய்வதில் ஏன் பெருமை கொள்கின்றாய்?” என்ற கேள்வியுடன் தொடங்குகிறார் தாவீது அரசர். வலியோன் என்பவன் வலிமைபடைத்தவன் என்று பொருள்படுகிறது. வலியோன் என்ற சொல்லுக்கு வீரன், அறிஞன் என்ற வார்த்தைகளும் பொருளாக அமைகின்றன. பொதுவாக, வலியோன் என்ற வார்த்தை நேர்மைறையான கண்ணோட்டம் கொண்டதுதான். அதனால்தான் அதற்கு அறிஞன் என்றும் பொருள் கொள்கின்றோம். அப்படியென்றால், வலியோன் என்பவன் உடலளவில் மட்டுமல்லாது மனதளவிலும் வலிமைகொண்டவனாகக் கருதப்படுகிறான். ஆனால் எப்போது அந்த வலியவன் தனது வலிமையை, ஆற்றலை தவறாகப் பயன்படுத்தத் தொடங்குகிறானோ அப்போதே தீமையும் விளையத் தொடங்குகிறது.  இங்கே, "வலியோனே! தீமை செய்வதில் ஏன் பெருமை கொள்கின்றாய்?" என்று தொடங்கும் தாவீது, தொடர்ந்து, "இறைவனின் பேரன்பு எந்நாளும் உள்ளது"  என்றும் கூறுகின்றார். இந்த வார்த்தையை ஓர் இடைச்சொருகலாக திணிக்கின்றார் தாவீது. அப்படியென்றால், வலியோன் தனது வலிமையைத் தவறாகப் பயன்படுத்தி தீமையை விளைவிக்கும்போது, என்றுமுள்ள கடவுளின் பேரன்பு அந்த வலிமையைத் தகர்த்தெறியும் என்ற அர்த்தத்தில் தாவீது இவ்வாறு கூறியிருக்கலாம். இரண்டாவதாக, “கேடுவிளைவிக்க நீ திட்டமிடுகின்றாய்; உனது நா தீட்டிய கத்தி போன்றது; வஞ்சகத்தில் தேர்ந்தோன் நீ அன்றோ!” என்று கூறுகின்றார் தாவீது. தாவீதுக்கு நெருக்கமானவரும் கடவுளின் திட்டங்களை அறிந்து அதை தாவீதுக்கு உரைத்தவருமான குரு அகிமெலக்கும் இன்னும் பலரும் மன்னர் சவுலால் அநியாயமாகக் கொல்லப்படுவதற்கு காரணமானவன் தோயேகு. 'சவுல் பணியாளர்களில் ஒருவனும் ஆண்டவரால் தடைசெய்யப்பட்டவனுமான தோயேகு என்ற ஏதோமியன்' (காண்க 1 சாமு 21:70 என்றுதான் அவனைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தோயேகு பற்றிய இந்த வார்த்தையே அவன் எந்தளவுக்கு மோசமானவன் என்பதையும், தீமையை விளைவிக்கக் கூடியவன் என்பதையும் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது. “நோபில் உள்ள அகித்தூபின் மகன் அகிமெலக்கிடம் ஈசாயின் மகன் தாவீது வருவதை நான் கண்டேன்; அகிமெலக்கு அவனுக்காக ஆண்டவரிடம் திருவுளத்தைக் கேட்டறிந்தார். மேலும், அவர் அவனுக்கு வழியுணவும், பெலிஸ்தியன் கோலியாத்தின் வாளும் கொடுத்தார்” என்று தோயேகு மன்னர் சவுலிடம் போட்டுக்கொடுத்தபோதே, அவன் எத்தகைய கேட்டை விளைவிக்கத் திட்டமிட்டான் என்பதைத் தாவீது அறிந்திருந்தபடியால்தான் இவ்வாறு கூறுகின்றார். காட்டிக்கொடுத்தல், போட்டுக்கொடுத்தல், கேடுவிளைவித்தல் யாவும் சதிச் செயல்களால் வெளிப்படுவது. அதைத்தான் இங்கே தோயேகு செய்கிறான்.

அதனைத் தொடர்ந்து, “உனது நா தீட்டிய கத்தி போன்றது; வஞ்சகத்தில் தேர்ந்தோன் நீ அன்றோ!” என்றும் உரைக்கின்றார் தாவீது. நமது உடலில் உள்ள மிகவும் மோசமான ஆயுதம் நா என்பார்கள் நம் முன்னவர்கள். நமது நாவை கட்டுக்குள் வைத்திராவிட்டால் அது நம்மைத் தன் கட்டுக்குள் வைத்துவிடும். பெரியதொரு கப்பலை கட்டுப்படுத்துவது சுக்கான். எப்படி சுக்கானைக்கொண்டு கப்பலை சரியான திசையில் இயக்கி அதனை காப்பாற்றுகிறோமோ, அவ்வாறே, நமது நாவை சரியான திசையில் செலுத்தி நம் வாழ்வை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இதன் காரணமாகவே, “பொய்சொல்லும் வாய் அடைபட்டுப் போவதாக! செருக்கும் பழிப்புரையும் கொண்டு, நேர்மையாளருக்கு எதிராக இறுமாப்புடன் பேசும் நா கட்டுண்டு கிடப்பதாக!” (திபா 31 18) என்றும், "அவர்களின் வாய் பேசுவதும் நா உரைப்பதும் பாவமே" (காண்க திபா 59 12) என்றும், வேறுசில திருப்பாடல்களிலும் எடுத்துரைக்கின்றார் தாவீது. “வாழ்க்கையில் இன்பம் காணவும் நல்ல நாள்களைக் காணவும் விரும்புவோர், தீச்சொல்லினின்று தம் நாவைக் காத்துக் கொள்க! வஞ்சக மொழியைத் தம் வாயை விட்டு விலக்கிடுக! தீமையை விட்டு விலகி நன்மை செய்க! நல்வாழ்வை நாடி, அதை அடைவதிலே கருத்துக் கொள்க!’ (காண்க 1 பேது 3:10-11) என்று புனித பேதுருவும் தனது திருமடலில் அறிவுறுத்துகின்றார்.

அடுத்து, "வஞ்சகத்தில் தேர்ந்தோன் நீ அன்றோ!" என்று தோயேகு குறித்து குறிப்பிடுகின்றார் தாவீது. அப்படியென்றால் மன்னர் சவுலைப் போன்று தோயேகுவும் இளைஞனான தாவீது மீதும் அவரது அருஞ்செயல்கள்மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்திருக்கிறான். அவரைப் பழிவாங்க நேரம் பார்த்துக் காத்துக்கொண்டிருந்திருக்கின்றான். சந்தர்ப்பம் கிடைத்ததும் அதனை தனக்குச் சாதகமாகிக்கொண்டுவிட்டான் தோயேகு. இறுதியாக, "நன்மை செய்வதைவிட தீமை செய்வதையே விரும்புகின்றாய்; உண்மை பேசுவதைவிட பொய் பேசுவதையே விரும்புகின்றாய்" என்று தாவீது உரைக்கின்றார். தோயேகு நினைத்திருந்தால், இந்தத் தீமையை தவிர்த்து நன்மையை செய்திருக்கலாம். அதாவது, 85 குருக்கள் மற்றும் குருக்கள் நகராகிய நோபில் ஆண், பெண், சிறுவர், பாலகர், ஆடுமாடுகள், கழுதைகள் என அனைவரும் கொல்லப்படாமல் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அவன் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. "ஆண்டவரின் குருக்களை கொன்று விடுங்கள்" என்று மன்னர் சவுல் தனது காவலர்களிடம் கூறியபோது அரசனின் பணியாளர் இதனைச் செய்ய முன்வரவில்லை. ஆனால் “இதைச் செய்” என்று தோயேகுவிடம் கூறியபோது, அவன் அதைச் செய்து முடித்தான். இதனை மனதில் கொண்டுதான், "நன்மை செய்வதைவிட தீமை செய்வதையே விரும்புகின்றாய்" என்று தோயேகுவை குறித்து குறிப்பிடுகின்றார் தாவீது.

ஆகவே, நமது அன்றாட கிறிஸ்தவ வாழ்வில், தோயேகுவிடம் விளங்கிய தீமையின் செயல்கள், நம்மிடமும் இருக்கின்றவனவா என்பதை ஆய்வு செய்து பார்ப்போம். ஒருவேளை, அத்தகைய தீய செயல்கள் நம்மிடத்தில் இருக்குமேயானால் அவற்றை இன்றே ஒழித்துவிட முடிவெடுப்போம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 May 2024, 11:34