தேடுதல்

பிப்ரவரி 04. உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் பிப்ரவரி 04. உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் 

வாரம் ஓர் அலசல் - பிப்.4. உலக புற்றுநோய் தினம்

உலக அளவில் பெரும் அபாயமாக வளர்ந்து வரும் காலநிலை மாற்றமும் புற்றுநோய் காரணியாக மாறியுள்ளதாக அண்மை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் ஆண்டுக்கு, 1கோடி மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள் என்றும், மக்கள் இறப்பதற்கான காரணியில் மாரடைப்பிற்கு அடுத்து இரண்டாவதாக புற்றுநோய் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உலக அளவில் உயிரிழக்கும் ஒவ்வோர் 6 பேரில் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பதாக உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், புற்றுநோய் குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாததே உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் எனவும் தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக 96 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டில் ஏறக்குறைய 2 கோடி பேர் புதிதாகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டதில், 97 இலட்சம் நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 5 ஆண்டுகளில் 5 கோடியே 35 இலட்சம் பேருக்குப் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், 9 ஆண்களில் 1 ஆண் என்ற விகிதத்திலும், 12 பெண்களில் 1 பெண் என்ற விகிதத்திலும் உயிரிழந்துள்ளதாகப் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான அனைத்துலக அமைப்பு தெரிவித்துள்ளது. 2050ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 50 இலட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் எனவும், இது 2022ஆம் ஆண்டில் இருந்த பாதிப்பை விட 77 விழுக்காடு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிலை பழக்கம், மது, அதீத கொழுப்பு கொண்ட உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

உயிரைப் பறிக்கும் புற்றுநோய் குறித்த அச்சம் என்பது இயல்பான ஒன்று. ஏனெனில், உலகில் கண்டறியப்பட்டுள்ள நோய்களில் மிகவும் கொடிய நோயின் பட்டியலில் புற்றுநோயும் ஒன்று. இருப்பினும், தற்போது பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் அளவிற்கு மருத்துவத்துறையானது வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாகப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நபர்களை இறப்பிலிருந்து காக்க இயலும். ஆகவே, அச்சம் என்பது அவசியமற்றது.

உலக புற்றுநோய் தின வரலாறு

1993ஆம் ஆண்டு ஜெனிவாவில், புற்றுநோயைக் கட்டுப்படுத்த அனைத்துலக புற்றுநோய் கட்டுப்பாட்டு அமைப்பு (UICC) நிறுவப்பட்டது. இது உலகம் முழுவதிலும், புற்றுநோயை வேரோடு ஒழிப்பதற்கும், மருத்துவ ஆராய்ச்சியை முன்னேற்றுவதற்கும் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இந்நிலையில், இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட அதே ஆண்டில், ஜெனிவாவில் முதல் அனைத்துலக புற்றுநோய் தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, இந்த பெரும் முயற்சியினை புற்றுநோய் சங்கங்கள், சிகிச்சை மையங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களும் ஆதரித்தன. அதைத் தொடர்ந்து, 2000ஆம் ஆண்டு நடைபெற்ற புற்றுநோய்க்கு எதிரான முதல் உலக உச்சி மாநாட்டில் உலக புற்றுநோய் தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

100க்கும் மேற்பட்ட வகையான புற்றுநோய்கள் இந்த உலகை சூழ்ந்துள்ள நிலையில் பல வகையான புற்றுநோய் பாதிப்புகள் இருந்தாலும் அதில் பாதிக்கும் மேற்பட்டவை தடுக்கக்கூடியவை ஆகும். ஆண்கள் பெரும்பாலும் புரோஸ்டேட் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஆகிய புற்றுநோய்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் பெரும்பாலும் மார்பக புற்றுநோய், கருப்பையகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

மார்பகப் புற்றுநோய் என்பது புற்றுநோயிலேயே உலக அளவில் இரண்டாவது இடத்தை கொண்டிருக்கிறது. அடுத்து, புகைப்பிடித்தல் பழக்கத்தால் பெரும்பாலானோர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். கருப்பையகப் புற்றுநோய் என்பது, எண்டோமெட்ரியல் கேன்சர் என்றே அறியப்படுகிறது. பெண்களின் கருப்பையைத் தாக்குகிறது. மேலும், தொண்டையில் வளரும் தேவையற்ற செல்களால் தைராய்டு புற்றுநோய் வளர்ச்சியடைகிறது. உலகளவில் பெண்களை அதிகமாக பாதிக்கக்கூடிய புற்றுநோய்களில் முதல் இடத்தில் மார்பக புற்றுநோயும், இரண்டாம் இடத்தில் கருப்பைவாய் புற்றுநோயும் உள்ளன.

நமக்குத் தெரிந்த காரணங்கள்

புகையிலை, வாழ்க்கை முறை மாற்றம், மோசமான சூழல் எனப் பல விதமான காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் உலக அளவில் பெரும் அபாயமாக வளர்ந்து வரும் காலநிலை மாற்றமும் புற்றுநோய் காரணியாக மாறியுள்ளதாக அண்மை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஆய்வுப்படி, புவியின் வெப்பநிலை சுமார் 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பசுமைக்குடில் வாயுக்களை அதிகமாக வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதாக உலக வள நிறுவனம் (World Resource Institute) பட்டியலிட்டுள்ளது.

உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்தியா வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. விவசாயம், வருவாய், தொழில் துறை, அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டாலும், அனைத்திற்கும் முதுகெலும்பாக இருக்கும் சுற்றுசூழலுக்கு வீழ்ச்சியே என்று இதுவரையிலான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. நவீன முதலாளித்துவ பொருளாதாரத்தை உருவாக்கச் செய்த நடவடிக்கைகளால் வளிமண்டலத்தில் பசுமைக்குடில் வாயுக்களின் அளவு அதிகரித்துள்ளது என்பதை மறுக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாக, இந்த வாயுக்கள் வெளியேற்றப்படும் அளவு அதிகரித்து உள்ளது. இதனால் இந்தியா காலநிலை மாற்றத்தால் பெருமளவில் சுற்றுச்சூழல் ஆபத்தையும், வானிலை வேறுபாடுகளையும் சந்தித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, சூழலியல் பாதிப்பு மட்டுமின்றி மக்களின் வாழ்க்கை முறை, ஆரோக்கியம் ஆகியவற்றையும் இந்தப் பிரச்னைகள் பாதிக்கின்றன. "காலநிலை மாற்றத்தால் மக்களுக்கு இதய நோய், மூச்சுத் திணறல் போன்ற நுரையீரல் சார்ந்த பல பிரச்னைகளோடு புற்றுநோயும் வரக் காரணமாக இருக்கிறது," என்று புற்றுநோய் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

காலநிலை மாற்றத்தால் உலகின் வெப்பநிலை அதிகரித்துள்ளது, இதனால் கோடை மற்றும் மழைக் காலங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்கள், வெள்ளம், புயல் போன்றவை அதிக அளவில் நிகழ்ந்ததால் மக்களின் வாழ்க்கை நடைமுறை, பயிர் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கலப்படமான தரமற்ற நீர் மற்றும் உணவை உண்ண, மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால், பல்வேறு நோய்த் தொற்றுகள், உடல் பருமன் ஏற்பட்டு வயிறு, குடல், மண்ணீரல் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் ஏற்பட வழிவகுப்பதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

புவி வெப்பமடைதலால் சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களில் இருந்து உயிர்களைக் காக்கும் ஓசோன் படலத்தில் பெரிய ஓட்டை ஏற்பட்டிருப்பதாக நாசா ஏற்கெனவே அறிவித்திருந்தது. "அந்த புற ஊதாக் கதிர்கள் அதிகம் தோலில் படும்போது மெலனோமா, தோல் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்," என்று எச்சரிக்கின்றனர் வல்லுனர்கள்.

தீர்வுதான் என்ன?

காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளாமை, உடற்பயிற்சி செய்யாமை, புகையிலை மற்றும் மது பழக்கம், உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளாமை உள்ளிட்ட காரணங்களால் 3ல் ஒருவர் புற்றுநோயால் உயிரிழக்கிறார். புற்றுநோய் உயிரிழப்புகளில் புகையிலை பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சராசரியாக 22% புற்றுநோய் உயிரிழப்புகளுக்கு புகையிலை பொருட்கள் காரணமாகின்றன.

பசுமைக்குடில் வாயு வெளியேற்றப்படுவதைத் தவிர்க்க முடிந்தவரை புதைபடிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து, புதுப்பிக்கவல்ல ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். காடுகளின் பரப்பளவைப் பாதுகாப்பதோடு, மேலதிக மரங்களை நடவேண்டும். உடல் ஆரோக்கிய ரீதியாகவும் வாழ்க்கை நடைமுறையிலும் நேர்மறை மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியது அவசியம். மது மற்றும் புகைப் பழக்கத்தைத் தவிர்த்து, சத்தான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய காலத்தில் நாம் மேற்கத்திய உணவுப் பழக்கத்தைப் பின்பற்றி வருகிறோம். அதைத் தவிர்த்து நமது வாழ்விடத்தின் காலநிலைக்கு ஏற்ப நார்ச்சத்து மிகுந்த ஆரோக்கியமான உணவு வகைகளை உண்டு, உடற்பயிற்சி செய்தால் நோயற்ற வாழ்வை வாழலாம்.

40 வயதுக்கு மேல் உள்ளவர்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரின் ஆலோசனைப்படி உடல் பரிசோதனை செய்துகொள்ளலாம். சீரான, ஆழ்ந்த தேவையான அளவு தூக்கம் வேண்டும். கார்பனேட்டட் குளிர்பானங்கள், ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. புகைப்பிடிப்பதை, புகைபிடிப்பவரின் அருகில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பூச்சிக்கொல்லி தெளித்த உணவைத் தவிர்க்கலாம்.  அழகுசாதனப் பொருட்களை அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் டப்பாக்களில் உணவை அடைத்து எடுத்துச் செல்வதையும், அவற்றைச் சாப்பிடுவதையும் தவிர்க்கவும்.

நாம் செய்ய வேண்டியது என்ன?

உடலில் தேவையில்லாத கட்டிகள் உண்டாகும்போது, வலி இல்லாவிட்டாலும் கட்டிகள் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். பசியின்மை, திடீர் எடையிழப்பு, ஜீரணக்கோளாறுடன் கூடிய வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், தொடர் இருமல், மாதவிடாய் இல்லாத சமயத்திலும் உதிரப்போக்கு போன்ற பிரச்னைகள்  என்றாலே புற்றுநோய் தான் என்ற உறுதி இல்லை என்றும், ஆனால் இவையும் புற்றுநோயுக்கான ஆரம்பகால அறிகுறி என்பதால் எச்சரிக்கை அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றையச் சூழலில் புற்றுநோய்க்கான சிகிச்சைகளும் மருந்துகளும் புதிது புதிதாக கண்டறியப்பட்டு வருகின்றன. ஆனாலும், ஆண்டொன்றுக்கு இந்தியாவில் 12 இலட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்; ஏழு இலட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். 

பொதுவாக, 30 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களே புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உலக சுகாதார நிறுவனம், `2030ஆம் ஆண்டுக்குள் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்பைப் பாதி அளவாகக் குறைப்போம்’ என்று உறுதிமொழி எடுத்து உள்ளது.  2025ஆம் ஆண்டிற்கான புற்றுநோய் எதிர்ப்பு கருப்பொருளாக “தனித்துவத்தால் ஒன்றுபடுதல்" என்பதை எடுத்து, மூன்றாண்டுகளுக்கானப் பிரச்சாரத்தைத் துவக்கியுள்ளது.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதிலிருந்து மீண்டவர்கள், அவர்களோடு பணியாற்றுபவர்கள் என இவர்களின் வாழ்க்கைப் பாதை அனுபவங்களைப் பகிர்தல், நோயாளிகளுக்கான தனிப்பட்ட அக்கறையுடன்கூடிய சிகிச்சை முறைகள், ஒருபக்கம் மருத்துவத்துடனும் மறுபக்கம் அக்கறையுடனும் கருணையுடனும் அவர்கள் நடத்தப்படல்  என பல்வேறு பரிந்துரைகளுடன் அடுத்த மூன்றாண்டுகளுக்கான திட்டத்தை பரிந்துரைத்துள்ளது உலக நலவாழ்வு அமைப்பு.

நம்மையும் நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் காக்கும் கடமையுணர்வுடன் நம் செயல்பாடுகள் துவங்கட்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 பிப்ரவரி 2025, 12:53