இஸ்ராயேலின் தடை இருந்தாலும் ஐ.நா. மனிதபிமானப் பணிகள் தொடரும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
பாலஸ்தீனிய அகதிகளிடையே தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை ஆற்றிவரும் UNRWA என்ற ஐ.நா. அமைப்பின் பணிகள், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தடைச் செய்யப்பட்டதாக இஸ்ராயேல் அரசு அறிவித்துள்ள போதிலும், தங்களின் மனிதாபிமானப் பணிகள் தொடரும் என அறிவித்துள்ளது அவ்வமைப்பு.
திருப்பீட தின இதழ் L’Osservatore Romanoவுக்கு வழங்கிய நேர்முகத்தில் இதனைக் குறிப்பிட்ட UNRWA வின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் Jonathan Fowler அவர்கள், வெஸ்ட் பேங்க், காசா மற்றும் கிழக்கு யெருசலேம் ஆகியவை ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகளாக இருப்பதால் அவைகளில் மனிதாபிமானப் பணிகளை ஆற்ற இஸ்ராயேல் தடை விதித்துள்ள போதிலும் தங்கள் பணி தொடரும் என அறிவித்தார்.
பாலஸ்தீனிய அகதிகளுக்கான மனிதாபிமானப் பணிகளை பாலஸ்தீனம், இலபனோன், சிரியா மற்றும் ஜோர்டனில் வாழும் 60 இலட்சம் பாலஸ்தீனியர்களுக்கு 1949ஆம் ஆண்டிலிருந்தே ஆற்றிவருகிறது ஐ.நா.வின் UNRWA அமைப்பு.
இவ்வமைப்பு வெஸ்ட்பேங்கில் 19 முகாம்களில் வாழும் ஒன்பது இலட்சம் அகதிகளிடையே 96 பள்ளிகளையும் 43 சிறு மருத்துவமனைகளையும் கொண்டு சேவையாற்றி வருவதாகத் தெரிவித்தது.
இதுவரை காசா பகுதியில் மட்டும் தங்களின் 270 அங்கத்தினர்கள் கொலைச் செய்யப்பட்டுள்ளதாக கவலையை வெளியிடும் UNRWA அமைப்பு, ஐ.நா.வின் வரலாற்றில் இவ்வளவு பெரிய அளவில் பணியாளர்கள் எப்போதும் கொல்லப்பட்டதில்லை எனினும், தங்கள் பணிகள் எவ்வித அச்சமும் இன்றி தொடரும் என மேலும் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்