தேடுதல்

அன்னை தெரேசாவால் உருவாக்கப்பட்ட தொழுநோயாளர் மையம் அன்னை தெரேசாவால் உருவாக்கப்பட்ட தொழுநோயாளர் மையம்  (ANSA)

வாரம் ஓர் அலசல் – உலக, தேசிய தொழுநோயாளர் தினம்

மூட நம்பிக்கை மிகுந்த அந்தக் காலத்திலேயேத் தொழுநோய், சாபத்தால் வருவதல்ல; பாவத்தால் வருவதல்ல; பரம்பரை வியாதியல்ல என்பதை உணர்ந்து, உரக்க ஒலித்தவர் தேசத் தந்தை மகாத்மா காந்தி.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தொழுநோயாளர் மீது காந்தியின் அக்கறை

1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்த மகாத்மா காந்தி, 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி டெல்லி பிர்லா மாளிகையில் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். மகாத்மா காந்தி மறைந்த நாளான ஜனவரி 30 அன்று, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவாக, தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது. அது மட்டுமல்ல, தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமும் சிறப்பிக்கப்படுகிறது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த மகாத்மா காந்தியின் கவலையை கௌரவிக்கும் விதமாகவும், தொழுநோயுற்றோருக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாமல் அவர்களை சமூகத்தின் மைய நீரோட்டத்தில் இடம் பெறச் செய்வது காந்தியின் தொலைநோக்குப் பார்வையாக இருந்தது என்பது குறித்த விழிப்புணர்வை ஊட்டவும், அவரின் நினைவு தினமான ஜனவரி 30ஆம் தேதி தொழுநோயாளர் தினம் இந்தியாவில் சிறப்பிக்கப்படுகிறது. ஆனால், உலக தொழுநோய் ஒழிப்பு தினம் ஜனவரி மாதம் இறுதி ஞாயிறன்று உலகில் சிறப்பிக்கப்படுகிறது. அதற்கும் காந்தி மகானுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான் உண்மை. உலக தொழுநோய் தினத்தை அதாவது ஹேன்ஸன் தினத்தை ஜனவரி கடைசி ஞாயிறில் இடம்பெறும் நோக்கத்தில் பிரான்ஸ் நாட்டு மனிதாபிமான நடவடிக்கையாளர் Raoul Follereau 1954ஆம் ஆண்டு முதல் கொண்டப்பட உருவாக்கியதே காந்தியை கௌரவிக்கும் விதமாகத்தான். ஆம், தொழுநோயாளர்கள் மீது அண்ணல் காந்தி காட்டிய அன்பையும் அக்கறையையும் தெரிய வந்ததால்தான் அவர் நினைவு நாளுக்கு அருகில் வரும் விடுமுறை நாளான ஞாயிறுத் தேர்வுச் செய்யப்பட்டது. இத்தினம் ஜனவரி 26, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டது.

‘என் வாழ்க்கையே எனது செய்தி’ என்பார் காந்தி. அதுபோல் வரலாற்றின் எந்தவொரு அடுக்கிலும் தவிர்க்க முடியாத அளவுக்கு உயர்ந்த தியாக வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். அவர் கொண்ட கொள்கையின் உறுதியும், அவரது விடாப்பிடியான அறப்போராட்டமுமே மானுடம் பேசும் கதைகளாகும். தன் வாழ்நாளில் ஒடுக்குமுறை, தீண்டாமை, பெண் அடிமைத்தனத்தை வலுவாக எதிர்த்தார். தன்னுடைய வார்த்தைகளுக்கு இறுதிவரை உண்மையாக இருந்தவர் காந்தி. காந்தியைப் பொறுத்தவரை இந்தியா அனைத்து மக்களுக்குமான நாடு. அதில் எந்தச் சமரசத்துக்கும் இடம் இல்லை. தனது தனித்துவத்தால் மக்களை ஈர்த்தவர் காந்தி. தான் வாழும் சமூகத்திற்குப் பாடுபட எழுந்த காந்தி மகான்,  ஒரு பெரும் காலத்தின் மனசாட்சியாகவே உயர்ந்து திகழ்ந்தவர்களில் முதன்மையானவர் என்பதுதான் உண்மை.

தொழுநோய், விவிலியத்திலும் காணும் ஒரு பழமையான நோய்

தொழுநோய், ஒரு பழமையான நோயாகும், இது பல நூற்றாண்டுகளாக மனித வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. நீண்ட காலமாக இருந்த போதிலும், இந்த தொற்று நிலை பரவலாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பயத்தையும் தனிமையையும் ஏற்படுத்துகிறது. தொழுநோய் குறித்து வெளிச்சம் போடுவதையும், கட்டுக்கதைகளை அகற்றுவதையும், குணப்படுத்தக்கூடிய இந்த நோயைப் புரிந்துகொள்வதற்கும் எதிர்த்துப் போராடுவதற்கும் தேவையான விழிப்புணர்வை ஒவ்வொருவரும் பெறவேண்டும்.

விவிலியத்தின் பல இடங்களில் தொழுநோயாளரைப் பற்றிய நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன. புதிய ஏற்பாட்டில், ஒரே ஒரு முறை, தொழுநோயாளரின் பெயர் 'சீமோன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "இயேசு பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார்" (மத்தேயு 26: 6-13, மாற்கு 14:3-9) என்ற குறிப்பை, நற்செய்தியாளர்கள் மத்தேயுவும், மாற்கும் பதிவு செய்துள்ளனர். அந்த இல்லத்தில், இயேசுவும், மற்றவர்களும், பந்தியில் அமர்ந்திருந்தனர் என்பதை அறியும்போது, அந்த இல்லத்தலைவர் 'சீமோன்' அவர்கள், தொழுநோயிலிருந்து குணமடைந்திருக்கவேண்டும் என்பது தெளிவாகிறது. இல்லையெனில், அவரை யாரும் நெருங்கியிருக்க முடியாது, அவரும் தன் இல்லத்தில் வாழ்ந்திருக்க முடியாது.

பழைய ஏற்பாட்டில், தொழுநோயாளரைப் பற்றிய நிகழ்வுகள் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன. இந்நிகழ்வுகளில், ஆறு தருணங்களில் மட்டும் தொழுநோயாளரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ஆறு பேரில், மோசே (விடுதலைப் பயணம் 4:6-7), மிரியாம் (எண்ணிக்கை 12:10), கேகசி (2 அரசர்கள் 5:20) யோவாபு (2 சாமுவேல் 3:29) உசியா (2 குறிப்பேடு 26:19-23) ஆகிய ஐந்து பேருக்கு உண்டான தொழுநோய், ஆண்டவர் தந்த தண்டனை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆறாவதாக கூறப்பட்டுள்ள தொழுநோயாளர், நாமான். அத்துடன், தொழுநோயாளி நாமான், பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளார். நாசரேத்து தொழுகைக்கூடத்தில் தன் பணிவாழ்வைப் பற்றிய அறிக்கையை வெளியிட்ட இயேசு, அவ்வேளையில், தொழுநோயாளி நாமானைப் பற்றியும் கூறினார். இஸ்ரயேல் மக்களுள் எவருக்கும் கிடைக்காத ஒரு புதுமை, வேற்றினத்தவரான நாமானுக்கு மட்டுமே கிடைத்தது என்பதை, இயேசு, தன் ஊர் மக்களுக்கு நினைவுறுத்தினார்: "இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது” என்றார் (லூக்கா 4:27).

சமூகக் கண்ணோட்டம்

தொழுநோய் வரலாற்று ரீதியாக குறிப்பிடத்தக்க சமூக களங்கத்துடன், தப்பானக் கண்ணோட்டத்துடன் தொடர்புடையதாக இருந்துவருகிறது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தப்படுவதற்கும் பாகுபாடு காட்டுவதற்கும் வழிவகுத்துள்ளது. தொழுநோய் இன்றைய நிலையில், குணப்படுத்தக்கூடிய மற்றும் தடுக்கக்கூடிய நோயாகும். ஆனால், இது உலகின் பல பகுதிகளில் ஒரு பெரிய பொது நலப்பிரச்சனையாக, சவாலாக உள்ளது. விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சையை ஊக்குவிப்பதன் மூலமும், நோயுடன் தொடர்புடைய சமூகக் களங்கத்தை நிவர்த்தி செய்வதன் மூலமும், தொழுநோயை அகற்றி, பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் நாம் பணியாற்ற முடியும்.

நாட்டில் தொழுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதாகவும், அரசு, சமூகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் திட்டமிட்ட காலத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே 2027ஆம் ஆண்டுக்குள்  தொழுநோய் இல்லா இந்தியா என்ற இலக்கை நாம் அடைய முடியும் என்று இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தெரிவித்தார். 2020ன் கணக்கெடுப்பை நாம் எடுத்துக்கொண்டோமானால், 139 நாடுகளில் 1,27,558 பேர் புதிதாக இந்நோயைப் பெற்றுள்ளனர். இதில் 8,629 பேர் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள்.

ஹேன்சன் நோய் என்று அழைக்கப்படும் தொழுநோய், ஒரு நாள்பட்ட தொற்று நோயாகும், இது முதன்மையாக தோல், மேல் சுவாசக்குழாய், புற நரம்புகள், மற்றும் கண்கள் முதலியவைகளைப் பாதிக்கிறது. இங்கு, முதன்மையான காரணியாக இருப்பது மைக்கோபாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியா ஆகும். இந்த பாக்டீரியா குறித்து 1873ல் நார்வே நாட்டு அறிவியலாளர் Gerhard Henrik Armauer Hansen என்பவர் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்ததனால் அவர் பெயரிலேயே இந்த நோய் அழைக்கப்படுகிறது.

தொழுநோய்க்கான காரணங்கள்

பாக்டீரியா தொற்று, மைக்கோபாக்டீரியம் லெப்ரே, தொழுநோயை ஏற்படுத்துகிறது. நோய்த்தொற்று வடிவத்தைக் கொண்ட சிகிச்சை அளிக்கப்படாத நபருடன் நெருங்கிய தொடர்பு மூலம் நோய் பரவுகிறது. இதற்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பும் உதவுகிறது. பாக்டீரியா சுவாச பாதை அல்லது உடைந்த தோல் வழியாக உடலில் நுழையலாம். தொழுநோய் மிகவும் தொற்றுநோயாக இல்லாவிட்டாலும், சில காரணிகள் பரவும் அபாயத்தை அதிகரிக்கலாம். தொழுநோய் எந்த வயதினரையும் பாதிக்கலாம், ஆனால் பெரியவர்களை விட குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

தொழுநோய் பாதிப்பை பொறுத்தவரையில், உலகளவில் 1.78 விழுக்காட்டினரும், இந்தியளவில் 5.35 விழுக்காட்டினரும், தமிழ்நாடு அளவில் 2.92 விழுக்காட்டினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக 17,525 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

உலக அளவில் தொழுநோய் பரவும் விகிதம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு குறைந்துதான் வருகிறது. பல்வேறு நாடுகளில் தொழுநோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.

மூட நம்பிக்கை மிகுந்த, விஞ்ஞான வசதிக் குறைந்த, அந்தக் காலத்திலேயே தொழுநோய், சாபத்தால் வருவதல்ல; பாவத்தால் வருவதல்ல; பரம்பரை வியாதியல்ல என்பதை உணர்ந்து உரக்க ஒலித்தவர் தேசத் தந்தை மகாத்மா காந்தி. வெறும் வாய்ச் சொல் வீரராக இல்லாமல், தொழுநோயால் பாதிக்கப்பட்ட ‘பர்ச்சூர் சாஸ்திரி’யைச் சபர்மதி ஆசிரமத்தில் தன்னுடனேத் தங்க வைத்து உணவும் உறைவிடமும் அளித்ததோடு, தொழுநோய்ப் புண்களைத் துடைத்து மருந்திட்டு, சேவைச் செய்தார் நமது தேசத் தந்தை என்பது வரலாற்றுப் பதிவு.

மத்திய மாநில அரசுகள் இணைந்து, மகாத்மா காந்தியின் மகத்தானச் சேவையைப் போற்றும் வண்ணம், காந்தி நினைவு நாளான ஜனவரி 30ல் ‘தொழுநோய் ஒழிப்பு தினமாகத் தொடங்கி பிப்ரவரி 13ஆம் நாள் முடிய நாடு முழுவதும், ஒவ்வோர் ஆண்டும் ‘ஸ்பர்ஸ் ப்ரொக்ராம்’ என்ற 15 நாட்கள் நடத்தப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே.

நம் உறுதிமொழிகள்

ஜனவரி 30ன் உறுதிமொழியாக, உடனேச் செயல்பட்டு தொழுநோயை முற்றிலும் ஒழிக்கப் போராடவும், தொழுநோயாளர்களை அன்பாகவும், நமது குடும்ப உறுப்பினர் போலவும் வேறுபாடு இல்லாமல் உரிய மரியாதையுடன் நடத்தவும், தொழுநோய் குணமாகக் கூடியது; ஆரம்பநிலை சிகிச்சை உடல் குறைபாட்டை ஏற்படுத்தாது; அங்கஹீனத்தைத் தடுக்கும்; தொழுநோயாளிகளை ஒதுக்கக் கூடாது போன்ற விபரங்களை ஊர் முழுவதும் தெரிவித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்.

அதற்கு ஆண்கள் எல்லாரும் காந்திகளாகவேண்டும், பெண்கள் எல்லோரும் அன்னை தெரஸாக்களாக வேண்டும். அதன் வழி, தொழுநோயற்ற சமுதாயத்தை உருவாக்க நம்மால் முடியும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 ஜனவரி 2025, 14:43