தேடுதல்

காசா பகுதி இடிபாடுகளுக்கிடையில் பெண் தன் குழந்தையுடன் காசா பகுதி இடிபாடுகளுக்கிடையில் பெண் தன் குழந்தையுடன்   (AFP or licensors)

காசாவில் பாதிக்கப்படும் கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் குழந்தைகள்

மோதலில் ஈடுபடும் அனைத்து தரப்பினரும் பன்னாட்டு மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட குடிமக்களின் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான தங்கள் கடமைகளை மதிக்க வேண்டும்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

தொடர்குண்டுவெடிப்புகளினால் சேதமடைந்துள்ள மருத்துவ மற்றும் நலவாழ்வு வசதிகள், இடம்பெயர்தல், நீர், மின்சாரம், உணவு மற்றும் மருந்துகள் தட்டுப்பாடு ஆகியவை கர்ப்பிணிப் பெண்கள், பிறந்த குழந்தை, தாய் ஆகியோரைக் கடுமையான நெருக்கடியில் ஆழ்த்துகின்றன என்று குறிப்பிட்டுள்ளன உலக நலவாழ்வு அமைப்புக்கள்.

நவம்பர் 4 சனிக்கிழமை வெளியிடப்பட்ட (UNICEF-UNRWA-OMS-UNFPA) நலவாழ்வுத் துறையின் தரவுகளானது, காசா பகுதியில் 2,326 பெண்கள் மற்றும் 3,760 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், மொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களில் இது 67விழுக்காடு என்றும் தெரிவித்துள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் பிறந்து சில மாதங்களே ஆன 420 குழந்தைகள் கொல்லப்படுகின்றனர் அல்லது காயமடைகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

துன்பத்தைத் தணிக்கவும், அவநம்பிக்கையான சூழ்நிலையை பேரழிவாக மாற்றுவதைத் தடுக்கவும் உடனடி மனிதாபிமான போர் இடைநிறுத்தம் தேவை என்றும், மோதலில் ஈடுபடும் அனைத்து தரப்பினரும் பன்னாட்டு மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட குடிமக்களின் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான தங்கள் கடமைகளை மதிக்க வேண்டும் என்றும் நலவாழ்வு அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

காசாவில் தற்போது பிணைக் கைதிகள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பு உரிமை உள்ளது என்றும், அனைத்து பணயக்கைதிகளும் தாமதமின்றியும், நிபந்தனைகள் இல்லாமலும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள நலவாழ்வு அமைப்புக்கள், அனைத்துத் தரப்பினரும், குறிப்பாகக் குழந்தைகள் வன்முறையிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும், பன்னாட்டு மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு உரிய சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

காசாவில் 50,000 கர்ப்பிணிப் பெண்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், நாளொன்றுக்கு 180க்கும் மேற்பட்ட மகப்பேறுகள் நடைபெறுகின்ற வேளைகளில் அவர்களில் 15 விழுக்காட்டினர் மகப்பேறு தொடர்பான சிக்கல்கள் மற்றும் கூடுதல் மருத்துவ பராமரிப்பு தேவையினால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

14 மருத்துவமனைகள் மற்றும் 45 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், சில பெண்கள் தங்குமிடம், வீடுகள், தெருக்கள் மற்றும் இடிபாடுகளுக்கு மத்தியில் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும், நவம்பர் 1 அன்று, மகப்பேறு மருத்துவமனையான அல் ஹிலோ மருத்துவமனை குண்டுவீசித் தாக்கப்பட்டது குறித்தும் எடுத்துரைத்துள்ளது

கர்ப்பிணிப்பெண்கள், தாய்மார்கள் மட்டுமன்றி பிறந்த குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போதுமான மருத்துவ வசதிகள் இன்றித் துன்புறுகின்றனர் என்றும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ஏறக்குறைய 130 குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் வாழ்வு, மின்சாரம் மற்றும் எரிபொருள் சேவை நிறுத்தப்பட்டால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 November 2023, 09:45