நேபாள நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் யுனிசெப்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நேபாளத்தில் 80,000 குழந்தைகள் உட்பட, 2,00,000-க்கும் அதிகமான மக்களுக்கு அவசர, உயிர்காக்கும் உதவிகளை வழங்க யுனிசெப்பும் அதனுடன் இணைந்து பணியாற்றும் மற்ற இயக்கங்களும் தங்களின் ஆதரவைத் துரிதப்படுத்தியுள்ளன என்று அந்நாட்டிற்கான யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பாதி பேர் குழந்தைகள் என்று, நவம்பர் 8 இச்செவ்வாயன்று, வழங்கிய அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது அந்நாட்டிற்கான யுனிசெப் நிறுவனம்.
உள்ளூர் அதிகாரிகளின் அறிக்கைப்படி, நவம்பர் 3-ஆம் தேதியன்று, மேற்கு நேபாளத்தின் தொலைதூரப் பகுதிகளில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இதுவரை 153 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 338-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.
இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில், Jajarkot, Rukum West ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் 80,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 2,00,000 பேர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறுகிறது அவ்வறிக்கை.
மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு ஜாஜர்கோட் மாவட்டத்தில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடரும் நில அதிர்வுகளால், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து அச்சத்துடன் வாழ்கின்றனர் என்றும் கவலை தெரிவிக்கிறது.
இந்நிலநடுக்கத்தால் பெரும்பாலான வீடுகள், பள்ளிகள், நலவாழ்வு மையங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன என்று கூறும் அவ்வறிக்கை, இந்த அண்மைய பேரழிவு நேபாளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் என்றும், 2015-இல் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்கள் ஏறக்குறைய 9,000 பேரின் உயிர்களைப் பறித்தது என்றும் அவர்களில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் என்றும் மேலும் சுட்டுகிறது.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள நேபாளத்திற்கான யுனிசெப்பின் பிரதிநிதி Alice Akunga அவர்கள், துயரம் தரும் விதமாக மீண்டும் ஒருமுறை, இந்தப் பேரழிவு தந்த நிலநடுக்கத்தில் பல உயிர்கள் பலியாகியுள்ளன, அளவுக்கதிகமான விதத்தில் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் கடும் குளிரில் இரவுகளைக் கழிக்க வேண்டிய கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளது. மேலும் இந்தக் குழந்தைகளும் அவர்களது குடும்பங்களும் மருத்துவ பராமரிப்பு, தங்குமிடம், தூய்மையான தண்ணீர், போர்வைகள், குளிர்கால உடைகள் ஆகியவற்றை பெறமுடியாத அவலநிலையில் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
இந்த இக்கட்டான நிலையில், யுனிசெப் நிறுவனம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருகிறது என்றும், ஆனால் குழந்தைகள் மற்றும் பெண்களின் உடல்நலம், ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு மற்றும் தண்ணீர் மற்றும் உடல்நலம் ஆகியவற்றுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய தங்களுக்கு அவசரமாக கூடுதல் உதவிகள் தேவைப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார் Akunga
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்