தேடுதல்

நேபாள நிலநடுக்கம் நேபாள நிலநடுக்கம்  (AFP or licensors)

153 பேர் உயிரிழந்த நேபாள நிலநடுக்கத்தில் 82 பேர் குழந்தைகள்

நேபாள நிலநடுக்கத்தில் 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளை காப்பாற்ற சர்வதேச அமைப்பான Save the Children களத்தில் உதவி.

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

கடந்த வெள்ளிக்கிழமை மாலை நேபாளத்தின் காத்மண்டுவிற்கு மேற்கே 500 கி.மீ தொலைவில் உள்ள ஜஜர்கோட் மற்றும் ருக்கும் வெஸ்ட் ஆகிய இடங்களில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பெரும்பாலானோர் தூங்கிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தில் 153 பேர் இறந்துள்ளதாகவும் அதில் 82 பேர் குழந்தைகளெனவும், மேலும் 5,000 பேர் வீடுகளை இழந்துள்ளதாகவும் அரசு தகவல்கள் உறுதிப்படுத்தப்படுத்தியுள்ளன.

மேலும், நிலநடுக்கத்திற்குப் பிறகு சுமார் 10,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது எனவும்,  காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை சமாளிக்க மருத்துவமனைகள் போராடி வருவதாகவும்,  மற்றும் 300க்கும் மேற்பட்ட பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளன எனவும், மலைப்பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் அத்தியாவசியமான உணவு மற்றும் தேவைப்படும் உதவிகளை, குறிப்பாக தொலைதூரப் பகுதிகளுக்கு கொண்டு செல்வதில் சிரமமாக உள்ளதாகவும் அரசு அறிக்கை தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியான பின்அதிர்வுகள் மற்றும் மற்றொரு பூகம்பத்தின் அச்சம் இருப்பதால் மக்கள் திறந்த வெளியில் தங்க வேண்டிய சூழலில், வெப்பநிலை குறைந்து வருவதால், அவர்களுக்கு தங்குமிடம், அரவணைப்பு மற்றும் சத்தான உணவு தேவை என்று நேபாள Save the Children இயக்குனர் ஹீதர் கேம்ப்பெல் கூறியுள்ளார்.

சுத்தக் குடிநீர் பற்றாக்குறை, கழிப்பறைகள் மற்றும் துப்புரவு வசதிகளுக்கான அவசரத் தேவை,  சிறு குழந்தைகளுக்கு தண்ணீரால் பரவும் நோய்களின் அபாயம், மேலும், இதுபோன்ற பேரழிவுகள் மனநல கோளாறுகள் போன்ற கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதால் அவர்களின் பாதுகாப்பையும், வீட்டை இழந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வது விரைவான செயலாக இருக்காது என்றும் கூறியுள்ளதோடு, குழந்தைகளைக் காப்பாற்ற அரசு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் உடனுழைப்பாளர்களுடன் ஒருங்கிணைந்து, உதவிகளை வழங்குவதில் களத்தில் உள்ளது.

மேலும் இவ்வமைப்பு, தங்குமிடங்கள், போர்வைகள், சுகாதார கருவிகள் மற்றும் குழந்தைகளுக்கான கருவிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை வழங்கியுள்ளதாக இயக்குனர் ஹீதர் கேம்ப்பெல் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2023, 15:51