தேடுதல்

இரஃபா எல்லை இரஃபா எல்லை  (AFP or licensors)

காசாவைவிட்டு எகிப்துக்கு வெளியேறும் காயமடைந்தவர்கள்

இரஃபாவின் எல்லையிலிருந்து, ஏறத்தாழ 70 வாகனங்கள் மனிதாபிமான உதவிப்பொருள்களை ஏற்றிக்கொண்டு நவம்பர் 1, இப்புதன்கிழமை காலை காசாவை நோக்கிச் சென்றுள்ளன

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

போரில் காயமடைந்த பாலஸ்தீனியர்கள் குழுவொன்று தெற்கு காசாவில் உள்ள இரஃபா எல்லை வழியாக எகிப்தை வந்தடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் தொடங்கிய பின்னர் முற்றுகையிடப்பட்ட பகுதிகளிலிருந்து  மக்கள் வெளியேறுவது இதுவே முதல் முறை என்றும், நவம்பர் 1, இப்புதன்கிழமை அதிகாலை, காசாவில் இருந்து காயமடைந்தவர்களைக் கொண்டு வரும் அவசர ஊர்திகள் சிகிச்சைக்காக எகிப்திற்குள் நுழைவதைக் காண முடிந்தது என்றும், இஸ்ரேலின் முற்றுகைக்குப் பின்பு இப்போதுதான் இப்பாதை முதல் முறையாக திறக்கப்பட்டுள்ளது என்றும் அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது.

காயமடைந்த 80 பாலஸ்தீனியர்கள் மற்றும் 500 வெளிநாட்டினர் முதல் கட்டமாக வெளியே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறும் அச்செய்தி அறிக்கைகள், குறிப்பிட்ட வெளிநாட்டினர் மற்றும் பலத்த காயம் அடைந்தவர்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில், கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட நேரங்களில் மட்டும் இரஃபா எல்லை திறந்திருக்கும் என்று பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கிறது.

மேலும் இரஃபாவில், ஏறத்தாழ 70 வாகனங்கள் மனிதாபிமான உதவிப்பொருள்களை ஏற்றிக்கொண்டு நவம்பர் 1, இப்புதன்கிழமை காலை காசாவை நோக்கிச் சென்றன என்று கூறும் அச்செய்தி, மோதல் வெடித்ததில் இருந்து இதுவரை அங்கு 8,796 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவில் உள்ள ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள நல அமைச்சகம் தெரிவித்துள்ளதாகவும் விவரிக்கின்றது.

இதற்கிடையில் அக்டோபர் 31, இச்செவ்வாயன்று, மற்ற இடங்களிலும் காசாவிலும் நடந்த தரைச் சண்டையில் 11 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், அக்டோபர் 7-ஆம் தேதி முதல் கொல்லப்பட்டுள்ள இஸ்ரேலிய இராணுவத்தின் மொத்த எண்ணிக்கை 326  என்றும் இஸ்ரயேல் கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 நவம்பர் 2023, 14:15