ஆண்டுக்கு 40 கோடி குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
போலியோ என்னும் இளம்பிள்ளைவாத நோய்க்கு எதிரான முப்பதாண்டுகால முயற்சியில் உலகில் 250 கோடி குழந்தைகளுக்கு தடுப்பு மருத்துக்கள் வழங்கப்பட்டு போலியோ நோயை 99 விழுக்காடு கட்டுப்படுத்தியுள்ளதாக யுனிசெப் அமைப்பு வெளியிட்ட அறிக்கைத் தெரிவிக்கிறது.
உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் 24ஆம் தேதி சிறப்பிக்கப்படும் உலக போலியோ தினத்தை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள யுனிசெப் நிறுவனம், இந்த முன்னேற்றம் என்பது தோல்வியடையக் கூடும் என்ற அச்சம் உள்ளது, ஏனெனில் இன்னும் இலட்சக்கணக்கான குழந்தைகள், பெருந்தொற்றுநோய், போர், சுற்றுச்சூழல் பேரழிவு, புலம்பெயர்வு மற்றும் தடுப்பு மருந்துகள் குறித்த தவறான தகவல்கள் போன்றவைகளால் போலியோ நோய்க்கு எதிரான சொட்டு மருந்துக்களை பெறாமல் அல்லது பெறமுடியாமல் உள்ளனர் என தெரிவிக்கிறது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இளம்பிள்ளைவாதத்தால் பெருமளவில் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்க, ஆசியா மற்றும் ஆப்ரிக்காவின் 20க்கும் மேற்படட நாடுகளில் போலியோ பாதிப்பு இன்னும் தொடர்ந்துகொண்டிருப்பதாக யுனிசெப் தன் கவலையை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் போலியோ நோயை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வோர் ஆண்டும் 40 கோடிக்கும் மேற்பட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்துகளை வழங்கியுள்ள UNICEF அமைப்பு, அரசுகள், ஏனைய அமைப்புக்கள், மற்றும் தன்னார்வக்குழுக்கள் வழியாக ஆண்டுக்கு 100 கோடி போலியோ தடுப்பு மருந்துக்களை வழங்குகிறது.
ஒரு சில பகுதிகளில் போலியோ நோய் இருந்தாலும் அது உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு அச்சுறுத்தலே, ஏனெனில் இது எளிதில் எல்லைகளைத் தாண்டி தாக்கி குழந்தைகளை முடமாக்கவல்லது என கவலையை வெளியிடும் யுனிசெப் அமைப்பு, போலியோ நோயை முற்றிலுமாக இவ்வுலகிலிருந்து ஒழிப்பதில் அரசுகள் மற்றும் நல்மனம் கொண்டோரின் அர்ப்பணத்தையும் உதவியையும் நாடியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்