தேடுதல்

காசாவின் நாசர் மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சைப் பெறுகின்றனர். காசாவின் நாசர் மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சைப் பெறுகின்றனர்.  (ANSA)

காசா பகுதியில் இதுவரை 3400க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலை

21 மருத்துவமனைகள் உட்பட 34 நலஆதரவு மையங்கள் மீது தாக்குதல் நடந்துள்ளன, 221 கல்வி நிலையங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஒவ்வொரு நாளும் காசா பகுதியில் ஏறக்குறைய 420 குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள் அல்லது படுகாயமுறுகிறார்கள் என அப்பகுதியின் துயர நிலை குறித்த புள்ளிவிவரங்களுடன் ஐ.நா. பாதுகாப்பு அவையில் விளக்கியுள்ளது யுனிசெப் அமைப்பு.

காசாவின் மனிதாபிமான நெருக்கடி நிலைகள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு அவைக்கு விவரங்களை வழங்கிய ஐ.நா.வின் குழந்தைகளுக்கான நிதி அமைப்பான யுனிசெப்பின் பொதுச்செயலர் காத்தரின் ரஸ்ஸல் அவர்கள், இதுவரை இம்மோதல்களால் 8,300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதில் 3400க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் எனவும், இதுதவிர 6,300க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமுற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

30க்கும் மேற்பட்ட இஸ்ரயேல் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், குறைந்தது 20 பேர் பிணையக் கைதிகளாக உள்ளதாகவும் தெரிவித்தார் ரஸ்ஸல்.

21 மருத்துவமனைகள் உட்பட 34 நலஆதரவு மையங்கள் மீது தாக்குதல் நடந்துள்ளதாக கூறும் யுனிசெப்பின் பொதுச் செயலர், 221 கல்வி நிலையங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன அல்லது முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.

தண்ணீர் கையிருப்பு குறைந்து வருவதால் 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தண்ணீரின்றி வாடும் நிலை உருவாகியுள்ளதாகக் கூறும் யுனிசெப்  இயக்குனர் ரஸ்ஸல் அவர்கள், காசாவின் 14 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அதிலும் பெரும்பான்மையாக குழந்தைகள் குடிபெயர்ந்தவர்களாக வாழ்வதாக தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 October 2023, 14:42