தேடுதல்

புலம்பெயர்ந்தோர் சிறைவைக்கப்பட்டுள்ள தடுப்புக்காவல் கட்டிடம் புலம்பெயர்ந்தோர் சிறைவைக்கப்பட்டுள்ள தடுப்புக்காவல் கட்டிடம்  

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக JRS பணிக்குழு

இங்கிலாந்து அரசு புலம்பெயர்ந்தோரை படகில் அரை-தடுப்புக்காவிலில் வைத்திருப்பது அவர்களை மனிதாபிமானமற்றவர்களாக மாற்றும் நடவடிக்கையை பிரதிபலிக்கிறது : இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணிக்குழு

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இங்கிலாந்தின தென்மேற்கு மாவட்டமான Dorset-இன் கடற்கரையில் உள்ள ஒரு படகில் தற்போது புலம்பெயர்ந்தோர் குழுவொன்று ஏறக்குறைய தடுப்புக்காவிலில் வைக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி குறித்து தனது ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது அந்நாட்டிற்கான இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணிக்குழு.  

புகலிடம் தேடிவரும் புலம்பெயர்ந்தோருக்கு இது முற்றிலும் பொருத்தமற்றது என்றும்,  புகலிடம் கோருவோரை நமது சமூகங்களில் இருந்து விலக்கி, அவர்களை மனிதாபிமானமற்றவர்களாக மாற்றும் நடவடிக்கையாக இது பிரதிபலிக்கிறது என்றும் கூறியுள்ளது அப்பணிக்குழு.

படகில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இவர்கள், கூட்ட நெரிசலுக்கு உள்ளாக்கப்படுவதுடன், கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்வார்கள் என்று எடுத்துக்காட்டியுள்ள அவ்வமைப்பு, இது போன்ற பெரிய அளவிலான,  தடுப்புக்காவல் கடுமையான ஆபத்தை விளைவிக்கும் என்றும், அதிகமான தூக்கமின்மைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களின் மனநலம் விரைவில் மோசமடைவதற்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளது அப்பணிக்குழு.  

மேலும் இவ்வகையில் புலம்பெயர்ந்தோரைப் படகில் சிறைவைப்பது, தீ பாதுகாப்பு மற்றும் நோய் பரவும் ஆபத்து பற்றிய தீவிர கவலைகள் இருந்தபோதிலும், மக்கள் தங்களின் மனிதமாண்பு மற்றும் நல்வாழ்வை மட்டுமல்ல, தங்கள் இன்னுயிரையும் இழக்க நேரிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது அப்பணிக்குழு.  

ஆகவே, படகில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்குப் பிரித்தானிய சமூகங்களில் பாதுகாப்பான மாற்று தங்குமிடங்களை அவசரமாக வழங்குமாறு அழைப்பு விடுக்கிறோம் என்றும் பிபி ஸ்டாக்ஹோமைப் புகலிட விடுதியாகப் பயன்படுத்துவதற்கான திட்டங்கள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்த விரும்புகின்றோம் என்றும் கூறியுள்ள இயேசு சபை புலம்பெயர்ந்தோர் அப்பணிக்குழு, புகலிடம் தேடிவருவோரை இம்மாதிரி படகுகளில் தங்க வைக்கும் அனைத்து திட்டங்களையும் அரசு கைவிட வேண்டும் என்றும் மேலும் கோரிக்கை வைத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 August 2023, 14:12