எத்தியோப்பிய குடும்பங்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
எத்தியோப்பியாவில் வன்முறை காரணமாக அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ள அம்ஹாராவில் உள்ள குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கான மனிதாபிமான உதவிக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று Save the Children என்ற அனைத்துலக அமைப்பு கோரியுள்ளது.
ஏற்கனவே முந்தைய மோதலினால் இடம்பெயர்ந்த 5,80,000 பேர் உட்பட, குடிமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதற்கும், மனிதாபிமான உதவிகள் தேவைப்படுபவர்கள் அனைவரையும் சென்றடைவதற்கும் அனுமதிக்குமாறு போரிடும் தரப்பினருக்கு அவ்வமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
ஆபத்தில் உள்ள குழந்தைகளைக் காப்பாற்றவும், அவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வரும் Save the Children என்ற அனைத்துலக அமைப்பின் எத்தியோப்பியாவிற்கான இயக்குனர் Xavier Joubert அவர்கள் இதுகுறித்து கருத்துத் தெரிவித்தவேளை, ஆபத்தான இந்த மோதல்களின் அதிகரிப்புக் காரணமாக குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வன்முறை, இடப்பெயர்வு, பசி மற்றும் முறைகேடுகளிலிருந்து குழந்தைகளை நாம் பாதுகாக்க வேண்டும் என்றும், மேலும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதும், அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் அவர்களை சென்றடைய உதவவேண்டியதும் மிகவும் அவசியமாகும் என்றும் கூறியுள்ளார் Joubert.
Save the Children அமைப்பு எத்தியோப்பியாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகின்றது. உடல்நலம், ஊட்டச்சத்து, நீர் மற்றும் தூய்மைப்பேணல், பாதுகாப்புப் பணிகள், கல்வி மற்றும் பொருட்கள் மற்றும் பண விநியோகம் ஆகிய துறைகளில் மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றது.
2022ஆம் ஆண்டில், Save the Children அமைப்பு, உயிர் காக்கும் உணவு, நீர் விநியோகம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு சிகிச்சை வழியாக ஏறத்தாழ 71 இலட்ச்சம் குழந்தைகள் உட்பட அந்நாட்டிலுள்ள ஏறத்தாழ 76 இலட்சம் மக்களைச் சென்றடைந்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்