மனிதாபிமான உதவித் தேவைப்படும் நிலையில் ஆப்கானிஸ்தான் மக்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இருபது ஆண்டுகளுக்கும் மேலான போரினால் ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி, வறுமை அதிகரிப்பு மற்றும் அத்தியாவசிய தேவைகளின் பற்றாக்குறை ஏற்பட்டு, 2 கோடியே 83 இலட்சம் மக்கள் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் சூழலில் இருப்பதாக தெரிவித்துள்ளது SIR எனப்படும் துறவற செய்திஅறிக்கை.
போரினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக் குறைந்துள்ள நிலையில் அதன் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வர இயலாத நிலையில் உள்ளனர் என்றும், 77 விழுக்காடு பெண்களும் சிறாரும் இதனால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.
பாதுகாப்பான மற்றும் விரைவான போக்குவரத்து இல்லாமையினால் கிராமப்புறங்களில் வாழும் பெண்கள் மகப்பேறு காலத்தில் மிகவும் துன்புறுகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ள அவ்வறிக்கையானது, உணவு, நீர் மின்சாரம், போன்ற அடிப்படை வசதிகள் முறையாகக் கிடைக்கப்பெறாமல் மக்கள் பெரிதும் துன்புறுகின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளது.
போர்ச்சூழலில் காபூல், லஷ்கர்-கா, அனாபாவில் உள்ள மருத்துவமனைகளில் 2,49,722 பேர் மருத்துவ ஆலோசனைகளையும், 41,000க்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சைகளையும் பெற்று வருகின்றனர் என்றும், 42 முதலுதவி நிலையங்கள் மற்றும் அடிப்படை சுகாதார மையங்களில் 7,00,000க்கும் மேற்பட்டோர் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுவருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.
75 விழுக்காடு பொதுச் செலவினங்களுக்கு பன்னாட்டு உதவியை எதிர்பார்த்திருக்கும் ஆப்கானிஸ்தானில் 1 கோடியே 76 இலட்சம் ஆப்கானியர்கள் கட்டாய நலவாழ்வுத் தேவைகளைக் கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகம் மதிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்