சிறாரை பாதுகாத்தல், வரவேற்றல் முக்கியமான செயல்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஆதரவற்ற சிறாரைப் பாதுகாத்தல் மற்றும் வரவேற்றல் ஒரு முக்கியமான செயல் என்றும், ஒரு நாட்டின் அமைப்பு தன்னை அளவிட வேண்டிய மிக முக்கியமான சவால்களில் ஒன்றாக ஆதரவற்ற சிறாரைப் பாதுகாத்தல் திகழ்கின்றது என்றும் தெரிவித்துள்ளது Save the Children பன்னாட்டு அமைப்பு
ஜூன் 20 செவ்வாய்க்கிழமை சிறப்பிக்கப்படும் புகலிடம் தேடுவோர்க்கான உலக நாளில் Save the Children என்னும் பன்னாட்டு குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பானது இத்தாலிக்கு வரும் ஆதரவற்ற வேற்றுநாட்டுச் சிறார்களின் நிலைமைகள் குறித்த தகவல்களை வழங்கியுள்ளது.
போர், வன்முறை, துன்புறுத்தல் மற்றும் மனித உரிமை மீறல்களால் தப்பி ஓட வேண்டிய நிலைக்குள்ளாகும் இலட்சக்கணக்கான மக்களின் வலிமை, தைரியம் மற்றும் விடாமுயற்சியை அங்கீகரிக்க ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்ட இந்நாளில், சிறாரின் எதிர்காலத்திற்குத் துணையாக இருக்க வேண்டும், அவர்கள் பாதுகாப்புடன் வளர்வதற்கான உரிமையை, உறுதியை அளிக்கவேண்டும், முழு ஒருங்கிணைப்புடன் கனவுகள் மற்றும் விருப்பங்களை நனவாக்க உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில், இத்தாலியில் 20,681 ஆதரவற்ற வேற்றுநாட்டைச் சார்ந்தவர்கள் இருந்தனர் என்றும், அவர்களில் 4,000 பேர் 14 வயதுக்குட்பட்ட சிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும், ஜூன் மாதம் பாதி வரை மத்திய தரைக்கடலைக் கடந்து, பெற்றோர் இல்லாத 6,000 சிறார் இத்தாலியை வந்தடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப ஆண்டுகளில் கடல் வழியாக வருகை தரும் வேற்றுநாட்டுச் சிறார்களின் எண்ணிக்கை குறைவுபட்ட நிலையில், இந்த ஆண்டில் வந்த சிறார் மற்றும் இளையோர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தில் உள்ள சிறாரைக் காப்பாற்றவும், அவர்களது எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கவும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இப்பன்னாட்டு அமைப்பு, ஆதரவற்ற வேற்று நாட்டு சிறாரின் கனவுகளை நனவாக்கவும் அவர்கள் அன்றாடம் சந்திக்கும் சிரமங்களை நீக்கவும், அவர்கள் வாழும் சூழ்நிலையை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கவும் சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றது.
மேலும் நிறுவனங்கள், பன்னாட்டு அமைப்புகள், அரசு, சமூகம் போன்றவற்றுடன் உரையாடலினை நிகழ்த்தி வரும் நிலையில், உண்மையான ஒருங்கிணைப்பு மற்றும் உள்ளடக்கத்தை இலக்காகக் கொண்ட பாதையின் உறுதியுடன், ‘‘ஆதரவற்ற வேற்று நாட்டு சிறாரை வரவேற்றல், வளர்ச்சிப் பாதைகளைப் பாதுகாத்தல், மற்றும் ஆதரித்தல்‘‘ என்ற தலைப்பில் ஜூன் 22 வியாழன் அன்று 10 மணிக்கு உரோமையின் மாண்டெசிட்டோரியோ வளாகத்தில் உள்ள Nazionale தங்குவிடுதியின் கப்ரானிசெட்டா ஹாலில் நடத்தப்பட உள்ளது.
இத்தாலிக்கு வரும் இளையோரின் புதிய பயணத்தை விவரிக்கும் அறிக்கை, அடையாளம் காண்தல், வரவேற்றல், மொழி கற்றல் என ஏற்படும் ஆயிரம் தடைகள் மற்றும் வாய்ப்புக்களில் அவர்களுக்கு நம்பிக்கையளிக்கின்றது Save the Children பன்னாட்டு அமைப்பு. ஆதரவற்ற சிறார் மற்றும் இளையோரின் நம்பிக்கை மற்றும் துன்பங்களுக்கு இடையிலான அவர்களது குரலிற்கு செவிமடுத்து உறுதியளிக்கின்றது இவ்வமைப்பு.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்