தேடுதல்

வத்திக்கான் அருங்காட்சியகம் வத்திக்கான் அருங்காட்சியகம்  

வாரம் ஓர் அலசல் – பன்னாட்டு அருங்காட்சியக நாள்

பன்னாட்டு அருங்காட்சியக நாள் (International Museum Day,) ஆண்டுதோறும் மே 18 ஆம் நாள் பன்னாட்டு அளவில் கொண்டாடப்படுகின்றது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

வரலாற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற பொருட்களை சேகரிக்கும் இடங்கள் அருங்காட்சியகங்கள் என அழைக்கப்படுகின்றன. அரும்பொருட்களைச் சேகரித்தல், அவற்றைக் காட்சிக்கு வைத்தல் ஆகிய நோக்கங்களுக்காக உள்ள கட்டிடங்கள் அல்லது நிறுவனங்கள் அருங்காட்சியகங்களாகும். மக்கள், அவர்கள் வாழ்ந்த சூழல் தொடர்பான சான்றுகளை, பொழுதுபோக்கு, கல்வி, ஆய்வு போன்ற நோக்கங்களுக்காகச் சேகரித்து, அவற்றைப் பாதுகாக்கும் பணியை அருங்காட்சியகங்கள் செய்கின்றன. மேலும் அப்பொருட்கள் பற்றிய ஆய்வுகளை நடத்தியும், அதனை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தியும், காட்சிப்படுத்தியும் மக்களுக்கு பெருமளவில் உதவுகின்றன. சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், அதன் பணிக்கும் இயங்குகின்ற ஒரு நிலையான நிறுவனமாக அருங்காட்சியகங்கள் திகழ்கின்றன.

பன்னாட்டு அருங்காட்சியக நாள் (International Museum Day,) ஆண்டுதோறும் மே 18 ஆம் நாள் பன்னாட்டு அளவில் கொண்டாடப்படுகின்றது. பன்னாட்டுப் பேரவையினால் (International Council of Museums, ICOM) ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படும் இந்நாள் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் கொண்டாடப்படுகின்றது. அருங்காட்சியக வல்லுனர்கள் பொதுமக்களை சந்திக்கவும், அருங்காட்சியகங்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளை விளக்கவும் சமூக வளர்ச்சியில் அருங்காட்சியகங்களின் பங்களிப்புகள் குறித்த விழிப்புணர்வைக் கொண்டு வரவும் பன்னாட்டு அருங்காட்சியக நாள் உதவுகின்றது.

பன்னாட்டு அருங்காட்சியக நாளின் வரலாறு

1977 ஆம் ஆண்டில், அருங்காட்சியகங்களின் பன்னாட்டுப் பேரவை உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகங்கள், சமூகத்தில் தங்கள் பங்கை ஊக்குவிக்கும் ஒரு நாளை உருவாக்கத் தொடங்கின. அருங்காட்சியகங்களைப் பார்வையிடுவது மற்றும் அதனைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை மக்களுக்குக் கற்பித்தன. கல்வியின் ஆதாரமாகவும், நமது கடந்த காலத்துடனும் வரலாற்றுடனும் நம்மை இணைக்கும் ஒரு கருவியாக விளங்கும் அருங்காட்சியகங்கள் எவ்வளவு மதிப்புமிக்கவை மற்றும் முக்கியமானவை என்பதை உணர்வது அவசியம்.

1977 ஆம் ஆண்டு, மே 18 ஆம் நாள், முதன் முதலில் கொண்டாடப்பட்ட இந்நாள் அன்று முதல் இன்றுவரை பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகங்கள் பல இந்நாளில் பங்கேற்க அழைக்கப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டில், 90 நாடுகளில் இருந்து 20,000 அருங்காட்சியகங்களும்,  2010 ஆம் ஆண்டில் 98 நாடுகளும், 2011 இல் 100 நாடுகளும், 2012 இல் 129 நாடுகளில் இருந்து 30,000 அருங்காட்சியகங்கள் இந்நாளின் நிகழ்வுகளில் பங்குபெற்றிருந்தன. அண்மையில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 30,000 அருங்காட்சியகங்கள் சர்வதேச அருங்காட்சியக தினத்தில் பங்கேற்றுள்ளன

அருங்காட்சியகத்தில் மக்கள்
அருங்காட்சியகத்தில் மக்கள்

அருங்காட்சியகங்களுக்குச் சென்று ரசிக்க மக்களை ஊக்குவிக்கவும், அருங்காட்சியகங்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்கள் தங்கள் சமூகங்களின் ஆதரவுடன் மட்டுமே உயிர்வாழ முடியும் என்று வலியுறுத்துவதை நோக்கமாகவும் கொண்டு இந்த பன்னாட்டு அருங்காட்சியக நாள் கொண்டாடப்படுகின்றது.

ICOM எனப்படும் பன்னாட்டு அருங்காட்சியகப் பேரவையானது, அருங்காட்சியகங்கள் இலாப நோக்கற்ற நிரந்தர நிறுவனங்களாக இருப்பதால் அவற்றைக் கொண்டாடுவது மிக முக்கியம் என வலியுறுத்துகின்றது. சமூகத்திற்கு பணியாற்றுதல், அதன் வளர்ச்சிக்கு உதவுதல், கலாச்சாரக் கலைப்பொருட்களைப் பாதுகாத்தல், வரலாறு மற்றும் அறிவியலை ஆராய்தல் போன்றவற்றை அருங்காட்சியகங்கள் செய்கின்றன. கலைப்பொருட்கள் மற்றும் அதன் தகவல்களைப் பொதுமக்கள் கற்கவும் கற்பிக்கவும் பொழுதுபோக்கிற்காகவும் மக்கள் அணுகக்கூடிய வகையில் அருங்காட்சியகங்கள் செயல்படுகின்றன. . அருங்காட்சியகங்கள் கலை, வரலாறு, மனித மற்றும் விலங்கினப் பாரம்பரியத்தின் விலைமதிப்பற்ற பொருட்களைப் பாதுகாக்கின்றன. இவற்றை ஆராய்ச்சி செய்து பராமரிக்கும் வல்லுநர்கள் இல்லையென்றால் அவை இழக்கப்படலாம் அல்லது சேதமடையலாம். ஒரு சமூகமாக நமது வரலாறு மற்றும் வளர்ச்சியை வரைபடமாக்கும் பல கலைப்பொருட்களை அருங்காட்சியகங்கள் இல்லாவிட்டால் நம்மால் பார்க்கவோ, புரிந்துகொள்ளவோ, அனுபவிக்கவோ முடியாது.  

தொடக்ககால அருங்காட்சியகங்கள், பழம் பொருட்களின்மேல் ஆர்வம் கொண்ட வசதி படைத்த தனிப்பட்டவர்கள், குடும்பங்கள், நிறுவனங்கள் போன்றவர்களின் சேகரிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகின. ஆனால் இன்று உலகின் எல்லாப் பகுதிகளிலும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படுகின்றன. அருங்காட்சியகங்கள், அறிவியல், கலை, மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களைச் சேகரித்துப் பாதுகாத்து, மக்களுடைய பார்வைக்காகக் காட்சிப்படுத்துகின்றன. இக்கண்காட்சிகள், நிலையானவையாகவோ அல்லது தற்காலிகமானவையாகவோ இருக்கலாம். பெரிய அருங்காட்சியகங்கள், உலகின் பெரிய நகரங்கள் எல்லாவற்றிலும் காணப்படுகின்றன.

அருங்காட்சியகங்களில் பல வகைகள் உண்டு. பல முக்கியமான நகரங்களில், நுண்கலைகள், பயன்படு கலைகள், கைப்பணி, தொல்லியல், மானிடவியல், இன ஒப்பாய்வியல், வரலாறு, பண்பாட்டு வரலாறு, படைத்துறை வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம், இயற்கை வரலாறு, நாணயவியல், தாவரவியல், விலங்கியல், அஞ்சற்பொருள் சேகரிப்பு போன்ற துறைகளுக்காகத் தனித்தனியான அருங்காட்சியகங்கள் உள்ளன. இவ்வகைகளுக்கு உள்ளே பல சிறப்புப் பிரிவுகளுக்கும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நவீன ஓவியங்கள், உள்ளூர் வரலாறு, வானூர்திப் பயண வரலாறு, போன்றவற்றுக்கான அருங்காட்சியகங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

நிழற்படக் கண்காட்சி
நிழற்படக் கண்காட்சி

தொல்லியல் அருங்காட்சியகங்கள்

தொல்லியல் அருங்காட்சியகங்கள், தொல்லியல் ஆய்வுகள் வழியாகக் கிடைக்கும் பழமையான அரும்பொருட்களைக் காட்சிக்கு வைக்கின்றன. தொல்லியல் அருங்காட்சியகங்களில் பல திறந்தவெளி அருங்காட்சியகங்களாக உள்ளன. திறந்தவெளி அருங்காட்சியகங்கள் என்பது பொதுவாகத் தொன்மையான கட்டிடங்கள், சமூகப் பொருளாதார வாழ்க்கை முறைகளைக் காட்டும் நாட்டுப்புற வாழ்விடக் காட்சிகள்; தொழில்நுட்ப வரலாறு, நாட்டுப்புற மக்களின் கலை, வரலாறு போன்றவற்றை எடுத்துரைப்பனவாக இருக்கின்றன. உள்புற தொல்லியல் அருங்காட்சியகங்களில், தொல்லியல் ஆய்வுக் களங்களில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களைச் சேகரித்துப் பாதுகாப்பான முறையில் கட்டிடங்களுக்குள் வைத்து மக்களில் காட்சிக்கு வைக்கின்றன.

கலை அருங்காட்சியகங்கள்

ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஒன்றான நியூயார்க்கில் உள்ள நவீன ஓவிய அருங்காட்சியகம் கலை அருங்காட்சியகங்களைக் கலைக்கூடங்கள் என்று அழைக்கின்றன. கலை தொடர்பான பொருட்களான காட்சிக்கலைகள் சார்ந்த ஓவியங்கள், வரைபடங்கள், சிற்பங்கள் போன்றவற்றை உள்ளடக்குகின்றன. இவ்வகை அருங்காட்சியகங்களில், வெண்கலப்பாண்டங்கள், உலோகவேலைப் பொருட்கள், தளவாடங்கள் போன்ற பயன்படு கலைப்பொருட்களும் இடம்பெறுவதுண்டு. நிகழ்படக்கலைப் படங்கள் பொதுவாகத் திரையிடப்பட்டுக் காட்சிப்படுத்தப்படுகின்றன.

வரலாற்று அருங்காட்சியகங்கள்

வரலாற்று அருங்காட்சியகங்கள், வரலாறு மற்றும், வரலாற்றோடு நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கு உள்ள ஒற்றுமை போன்றவற்றோடு தொடர்புடைய விடயங்களைக் கையாளுகின்றன. வரலாறு தொடர்பான சிறப்பு அம்சங்கள் அல்லது ஒரு குறித்த இடம் தொடர்பான அம்சங்கள் மீதும் கவனம் செலுத்துகின்றன. வரலாற்று அருங்காட்சியகங்கள், ஆவணங்கள், பலவகை அரும்பொருட்கள், கலைப்பொருட்கள், தொல்பொருட்கள் போன்ற பல்வகைப்பட்ட பொருட்களைக் காட்சிக்கு வைக்கின்றன.

ஸ்பெயின் அருங்காட்சியகம்
ஸ்பெயின் அருங்காட்சியகம்

கடல்சார் அருங்காட்சியகங்கள்

கடல், கடற்பயணம் என்பவற்றோடு தொடர்புடைய அரும்பொருட்களைக் சேகரித்துக் காட்சிக்கு வைக்கும் சிறப்பு அருங்காட்சியகங்கள் கடல்சார் அருங்காட்சியகங்கள் ஆகும். இவற்றில், கப்பல்கள், கடல்களிலும் ஏரிகளிலும் நடைபெறும் பயணங்கள் தொடர்பான பொருட்கள் இடம்பெறும். சில வேளைகளில் வரலாற்றுக் கப்பல்கள் அல்லது அவை போல் உருவாக்கப்பட்ட கப்பல்களையே அருங்காட்சியகமாக ஆக்குவதுண்டு. இவை அருங்காட்சியகக் கப்பல்கள் என அழைக்கப்படுவதுமுண்டு.

படைத்துறை, போர் அருங்காட்சியகங்கள்

ஒரு நாட்டின் படைத்துறை வரலாற்றை எடுத்துக் காட்டுவதற்காக உருவாக்கப்படும் அருங்காட்சியகங்கள் படைத்துறை அருங்காட்சியகங்கள் எனப்படுகின்றன. ஒரு நாட்டை மையப்படுத்தியே வழக்கமாக அமையும் இத்தகைய அருங்காட்சியகங்களில் குறிப்பிட்ட நாடு ஈடுபட்ட போர்கள் தொடர்பான காட்சிப் பொருட்கள் இடம்பெறும். இக்காட்சிப் பொருட்களில், ஆயுதங்கள், பிற படைத்துறைச் சாதனங்கள், சீருடைகள், போர்க்காலப் பரப்புரைகள், போர்க்காலங்களில் மக்களின் வாழ்க்கை என்பன தொடர்புடைய பொருட்கள் இடம்பெறும். படைத்துறை அருங்காட்சியகங்கள் ஒரு குறித்த இடப்பகுதியை அல்லது ஒரு குறித்த படைத்துறைப் பிரிவை மட்டும் மையப்படுத்தி அமைவதும் உண்டு. வானூர்திகள், போர்த்தாங்கிகள் என்பவற்றுக்கான அருங்காட்சியகங்கள் இவற்றுள் அடங்குவன.

கலை அருங்காட்சியகம்
கலை அருங்காட்சியகம்

இயற்கை வரலாற்று அருங்காட்சியகங்கள்

இயற்கை வரலாற்று அருங்காட்சியகங்கள், இயற்கை அறிவியல் அருங்காட்சியகங்கள் என்பன இயற்கை உலகு தொடர்பான அம்சங்களைக் காட்சிக்கு வைக்கின்றன. இவை இயற்கை பண்பாடு என்பவை தொடர்பில் கூடிய கவனம் செலுத்துகின்றன. பண்டையகால மக்கள், வரலாறு, மானிடவியல் போன்றவை தொடர்பான காட்சிப்பொருட்களை இத்தகைய அருங்காட்சியகங்களில் காண முடியும். கூர்ப்பு, சூழலியல் தொடர்பான விடயங்கள், உயிரிப்பல்வகைமை போன்றவை இயற்கை அறிவியல் அருங்காட்சியகங்களில் சிறப்பான கவனத்தைப் பெறும் விடயங்களாக இருக்கும். இத்தகைய அருங்காட்சியகங்களுக்கு இலண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், இயற்கை வரலாற்றுக்கான ஆக்சுபோர்டு பல்கலைக்கழக அருங்காட்சியகம், சிமித்சோனிய நிறுவனத்தின் வாசிங்டன் டி. சி. யிலுள்ள இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம், நியூ யார்க் நகரில் உள்ள இயற்கை வரலாற்றுக்கான அமெரிக்க அருங்காட்சியகம் என்பவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.

இந்நாளின் செயல்பாடுகளில் பல ஆயிரக்கணக்கான அருங்காட்சியகங்கள் பங்கேற்கின்றன, இலவச நுழைவுச்சீட்டு, பட்டறைகள், நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி கருத்தரங்குகள் அருங்காட்சியகங்களால் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. எனவே நாம் அனைவரும் இந்நாளில் அருங்காட்சியகங்களைப் பார்வையிட ஊக்குவிக்கப்படுகின்றோம். நாம் வாழும் ஊர்களில் உள்ள அருங்காட்சியகத்தைப் பார்வையிட முயற்சி செய்வோம். அருங்காட்சியகத்தார் செய்யும் பணிக்கு நம் ஆதரவை , நன்கொடையைக் கொடுப்போம். கேள்விப்பட்டிராத அசாதாரணமான அருங்காட்சியகங்களைப் பற்றி கற்றுக் கொள்வோம். அவற்றைப் பார்வையிடுவோம்.  ஒரு புதிய நகரத்திற்குச் செல்லும் போதெல்லாம் குறைந்தபட்சம் ஒரு அருங்காட்சியகத்தையாவதுப் பார்வையிட உறுதியளிப்போம். (இணையதள உதவி)

அனைவருக்கும் இனிய பன்னாட்டு அருங்காட்சியக நாள் நல்வாழ்த்துக்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 May 2023, 15:28