தேடுதல்

புலம்பெயரும் சூடான் மக்கள் புலம்பெயரும் சூடான் மக்கள்  (ANSA)

பன்னாட்டு மனிதாபிமான சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும்

சூடானின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது - ஐநா

மெரினா ராஜ் - வத்திக்கான்

போர் நடந்து கொண்டிருக்கும் போது, மோதலில் ஈடுபடும் தரப்பினர் பன்னாட்டு மனிதாபிமான சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும், உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் நலப்பணிகளை அழிப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் சூடான் நாட்டு Save the Children அமைப்பின் இயக்குனர் Arif Noor.

மே 17 புதன்கிழமை, சூடானின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி மற்றும் பாதுகாப்பு தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள நிலையில், Save the Children அமைப்பின் அறிக்கை பன்னாட்டு மனிதாபிமான சட்டத்திற்கு இணங்க, ஜித்தா உடன்படிக்கையின் உறுதிமொழிகளை ஏற்றுக்கொள்ளுமாறு மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினரை வலியுறுத்தியுள்ளது.

நலப்பணி வசதிகள், பள்ளிகள் மனிதாபிமான பணியாளர்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் போன்ற குடிமக்களின் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பது பற்றிய இச்சட்டங்கள் கட்டாயமாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் ஆரிஃப்.

வான்வழித் தாக்குதல்கள் மற்றும் இராணுவப் பிரிவுகளுக்கு இடையிலான மோதல்களில் இருந்து பொதுமக்கள் கார்டூம் பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று தெரிவித்த ஆரிஃப், பன்னாட்டு முயற்சிகள் இருந்தபோதிலும் இரண்டு மாதங்களாக வன்முறையின் காரணமாக மின்சாரம் துண்டிப்பு, உணவுப் பற்றாக்குறை, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.

போருக்கு முன் ஏறக்குறைய 15 இலட்சம் மக்களுக்கு உதவி தேவைப்பட்ட நிலையில் தற்போது ஏறக்குறைய 25 இலட்சம் மக்களுக்கு உதவி தேவை என்று கூறி 3 கோடி அமெரிக்க டாலர் உதவியை, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது இது சூடானில் இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வன்முறை தொடங்கியதில் இருந்து கார்டூம் பகுதியில் 700 பேர் இறந்துள்ளதாகவும் அதில் 200 பேர் குழந்தைகள்  என்றும் கூறிய ஆரிஃப் ஏறக்குறைய 5200 பேர் காயமடைந்துள்ளனர், பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

உலகின் மிக மோசமான ஊட்டச்சத்து குறைபாடுடைய நாடுகளில் ஒன்றாக சூடான் உள்ளது எனவும், ஏறக்குறைய 6,10,000 பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு தங்கள் உயிரை இழந்துள்ளனர் என்றும், ஐந்து வயதுக்குட்பட்ட முப்பது இலட்சம் சிறார் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் Save the Children அமைப்பு குறிப்பிடுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 May 2023, 12:14