தேடுதல்

மோச்சா சூறாவளி பாதிப்புகள் மோச்சா சூறாவளி பாதிப்புகள்   (Copyright © Partners Relief & Development)

வங்காளதேசம் மற்றும் மியான்மரில் மோச்சா சூறாவளி பாதிப்புகள்

மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் மோச்சா சூறாவளி ஏற்படுத்திய தாக்கத்தால் இலட்சக் கணக்கான குழந்தைகள் ஆபத்தில் உள்ளனர்: ஐ.நா.வின் UNICEF நிறுவனம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மே 14, இஞ்ஞாயிறன்று, வங்காளதேசம் மற்றும் மியான்மரின் சில பகுதிகளைத் தாக்கிய மோச்சா சூறாவளி பேரழிவை ஏற்படுத்தியுள்ளதுடன் இலட்சக்கணக்கான குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்குப் பெரும் துயரங்களை வருவித்துள்ளது என்று கூறியுள்ளது ஐநாவின் UNICEF நிறுவனம்.

மிகவும் மோசமான இந்தச் சூறாவளி தற்போது கடந்து சென்றுவிட்டாலும் கூட, நிலச்சரிவு ஏற்படும் ஆபத்து அதிகமாகவே உள்ளது என்றும், எதிர்வரும் நாள்களில் தண்ணீரால் பரவும் நோய்கள் உட்பட மேலும் ஆபத்துகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அந்நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள UNICEF நிறுவனத்தின் தலைமை இயக்குநர் Catherine Russell, இப்புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே மோதல்கள், வறுமை, உறுதியற்றத்தன்மை மற்றும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அதிர்ச்சிகளை அனுபவிக்கும் சமூகங்கள் உள்ளன என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்தச் சூறாவளியைத் தொடர்ந்து குழந்தைகளின் உடனடித் தேவைகளை நாங்கள் அவசரமாக மதிப்பிட்டு அதற்குப் பதிலளிப்பதால், குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்கும் மேம்படுத்துவதற்கும் நீண்ட காலத் தீர்வுகளைக் கண்டறிவதே சிறந்த வழி என்பதையும்  நாங்கள் உறுதியாக அறிந்துள்ளோம் என்றும் எடுத்துரைத்துள்ளார் Russell.

தேவைகளை மதிப்பிடுவதற்கும் அவசர உதவிகளை வழங்குவதற்கும் யுனிசெஃப் களத்தில் உள்ளது என்றும், நீர் மற்றும் சுகாதாரம், குழந்தைகள் பாதுகாப்பு, உடல்நலம், ஊட்டச்சத்து மற்றும் கல்வி உள்ளிட்ட பணிகளை  வலுப்படுத்த, உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து, வங்காளதேசம் மற்றும் மியான்மாரில் உதவிப் பொருட்களை முன்கூட்டியே தயார்நிலையில் வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்  Russell.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 May 2023, 13:13