தேடுதல்

துருக்கியில் நிலநடுக்கப் பாதிப்புகள் துருக்கியில் நிலநடுக்கப் பாதிப்புகள்   (AFP or licensors)

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கங்களுக்குப் பிந்தைய நிலை!

துருக்கியில் 25,00,000 குழந்தைகளும், சிரியாவில் 37,00,000 குழந்தைகளும் மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர் : யுனிசெஃப் நிறுவனம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

துருக்கியிலும் சிரியாவிலும் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் 100 நாள்களைக் கடந்துள்ள நிலையில், இலட்சக்கணக்கான குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் அங்குத் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப போராடுகின்றனர் என்று கூறியுள்ளது ஐ.நா.வின் யுனிசெஃப் நிறுவனம்.

மேலும் துருக்கியில் 25,00,000 குழந்தைகளும், சிரியாவில் 37,00,000 குழந்தைகளும் மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள UNICEF நிறுவனத்தின் தலைமை இயக்குநர் Catherine Russell, நிலநடுக்கங்களுக்குப் பிறகு, இரு நாடுகளிலும் உள்ள குழந்தைகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இழப்பையும் துயரத்தையும் சந்தித்து வருகின்றனர் என்றும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே நம்பமுடியாத அளவிற்குப் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலுள்ள பல குடும்பங்களை இந்த நிலநடுக்கங்கள் தாக்கியுள்ளன என்றும், இதனால், குழந்தைகள் தங்களின் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர் என்றும் தனது மிகுந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் Russell,

மேலும், இந்தப் பேரழிவினால் குழந்தைகள் அவர்களது வீடுகள், பள்ளிகள் மற்றும் சமூகங்கள் பேரழிவிற்குள்ளானதை நேரிடையாகக் காண நேரிட்டது என்றும், இதன் காரணமாக அவர்களின் முழு வாழ்க்கையும் சீர்குலைந்துள்ளது என்றும் கவலை தெரிவித்துள்ளார் Russell.

மீட்புப் பணிக்கான பாதை இன்னும் நீண்டது என்றும், பாதிக்கப்பட்டுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் நமது தொடர்ச்சியான ஆதரவு தேவை என்றும் எடுத்துக்காட்டியுள்ள Russell, உணவு மற்றும் எரிசக்தி விலை உயர்வு உள்ளிட்ட நீண்ட கால விளைவுகள், வாழ்வாதார இழப்பு மற்றும் பணிகளுக்கான அணுகல் யாவும் நூறாயிரக்கணக்கான குழந்தைகளை இன்னும் மோசமான வறுமையில் தள்ளும் ஆபத்து உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடனடி மற்றும் நீண்ட கால மீட்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தக் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு நிதி உதவி மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படாவிட்டால், அவர்கள் சுரண்டல் மற்றும் முறைகேடுகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார் Russell.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 May 2023, 13:17