தேடுதல்

உலக பூமி நாள் உலக பூமி நாள் 

வாரம் ஓர் அலசல் – உலக பூமி நாள்

பல்லாயிரக்கணக்கான அரிய வகை உயிரினங்கள் அழிந்தும், அழிவின் விளிம்பிலும் நிற்கின்றன. இதனைத் தடுக்கவும், பூமியின் வளத்தைப் பாதுகாக்கவும், கடைபிடிக்கப்படுவதே உலக பூமி நாள்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக பிறந்ததாகக் கருதப்படும் பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கான எல்லா வசதிகளும் தாராளமாக இருந்தன. மனிதர்கள் விலங்கினங்கள், பறவைகள், ஊர்வன, பறப்பன என அனைத்தும் அதனதன் வாழுமிடமறிந்து படைக்கப்பட்டு இன்று வரை மகிழ்வோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. பூமி தனி நபருக்கு மட்டும் சொந்தமல்ல இவ்வுலகில் படைக்கப்பட்ட எல்லாருக்கும் பொதுவானது. பூமி தவிர பிற கிரகங்களில் உயிரினங்கள் வாழ முடியுமா என்று எத்தனையோ ஆராய்ச்சிகளை மனிதன் இன்று வரை தொடர்ந்து மேற்கொண்டாலும், அனைத்து உயிர்களும் தடையின்றி வாழ உகந்த ஒரே கிரகம் பூமி மட்டும் தான் என்ற பதிலே மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தப்படுகின்றது.

மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, மறுபக்கம் பூமியின் வளங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. நாம் செய்யும் ஒவ்வொரு செயலாலும் சுற்றுச்சூழலில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். மனிதனின் பேராசை, போதும் என்ற மனமின்மை இயற்கையை அழித்து செயற்கை பொருட்களை உருவாக்கத் தொடங்கியது. அதன் ஒரு தொடக்கமாக காடுகள் அழிக்கப்பட்டு விலங்குகளின் உறைவிடங்கள் அபகரிக்கப்பட்டன. இதனால் பல்லாயிரக்கணக்கான அரிய வகை உயிரினங்கள் அழிந்தும், அழிவின் விளிம்பிலும் நிற்கின்றன. இதனைத் தடுக்கவும், பூமியின் வளத்தைப் பாதுகாக்கவும்,  கடைபிடிக்கப்படுவதே உலக பூமி நாள். இத்தகைய பூமி நாளைப் பற்றிய தனது கருத்துக்களை இன்றைய நாள் நம்மிடம் பகிர்ந்து கொள்பவர் அருள்சகோதரி சாந்தி எஸ்தர் மேரி. osm.

உலக பூமி நாள் - அருள்சகோதரி சாந்தி எஸ்தர் மேரி

உலகம் வெப்பமயமாகுதல், காற்று மாசு, காடு அழிப்பு, பசுமைக் குடில் விளைவுகள், தண்ணீர் பஞ்சம் என்று பூமி ஏற்கனவே தன் வளங்களை வெகுவாக இழந்து வரும் நிலையில் பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மனிதர்களாகிய நம்மிடமே உள்ளது. முடிந்தவரை காற்று மாசை தடுத்து, அதிக அளவில் மரங்கள் நட்டு, தண்ணீர் சேமிப்பு மேலாண்மை திட்டங்களை மேம்படுத்தி, முடிந்த வரை மரங்கள் நடுவோம். மழை, மன்வளம் பெறுவோம். பூமியின் பாதுகாப்பிற்காக மட்டுமல்ல. மனிதனின் பாதுகாப்பிற்காகவும் அன்றாட வாழ்வில் நாம் சில மாற்றங்களை கொண்டு வரவேண்டியது அவசியம். அந்த வகையில் சுற்றுச்சூழலின் மிக பெரிய எதிரியான நெகிழி எனப்படும் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் கேடு அறிந்து அதனைப் பயன்படுத்தாமல் தவிர்ப்போம். மின்சார பயன்பாட்டை குறைப்பது தனிப்பட்ட முறையில் எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்றே நாள்தோறும் மின்சாரத்தை சிக்கனமாக செலவழிக்க பழகுவோம்.

உணவை வீணாக்குவதை தவிர்ப்போம். விவசாயத்துக்கும், பலரது உழைப்பு மற்றும் இயற்கை சக்தியை வீணாக்கப்படுவதை தவிர்ப்போம். நடைபயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.  எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து மிதிவண்டி உபயோகப்படுத்துவதையும், நடைபயணத்தையும் அதிகரிப்போம். புகை மாசுபாட்டைக் கட்டுப்படுத்தி உடல்நலனைக் காப்போம். காலநிலை மாற்றம் என்பது சிறிது காலமாகக் கவலைக்குரிய ஒரு முக்கிய காரணியாக மனிதகுலத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது, எனவே இந்நிலை உணர்ந்து நம்மைக் காக்கும் இயற்கை அன்னையை கண்ணும் கருத்துமாய் காக்க இந்த பூமி தினத்தில் உறுதி எடுப்போம். (இணையதள உதவி)

அனைவருக்கும் இனிய உலக பூமி நாள் நலவாழ்த்துக்கள்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 April 2023, 10:35