டிஜிட்டல் உலகில் பெண்கள் பின்தங்கியுள்ளனர் : யுனிசெப் நிறுவனம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பாலின இடைவெளியை அகற்றவும், டிஜிட்டல் உலகில் பெண்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை உறுதி செய்யவும் அரசுகளுக்கும் அதன் பங்காளர்களுக்கும் அழைப்புவிடுத்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு அனைத்துலகப் பெண்கள் குறித்து வெளியிடப்பட்ட புதிய யுனிசெஃப் ஆய்வறிக்கையின்படி, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 90 விழுக்காட்டு இளம்பெண்கள் மற்றும் பெண்கள் இணையத்தைப் பயன்படுத்துவதில்லை என்றும் தெரிவருகிறது.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு இடையேயான டிஜிட்டல் பிளவை (digital divide) அகற்றுவது என்பது, இணையம் மற்றும் தொழில்நுட்பத்தை அணுகுவதை விட மேலானது என்றும், இது பெண்களை கண்டுபிடிப்பாளர்களாகவும், படைப்பாளிகளாகவும் தலைவர்களாகவும் மாற்றுவதைக் குறிக்கிறது என்றும் இது குறித்து கருத்துத் தெரிவித்த யுனிசெஃப் நிறுவனத்தின் கல்வி இயக்குனர் இராபர்ட் ஜென்கின்ஸ் கூறியுள்ளார்.
தொழிலாளர் சந்தையில், குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் பாலின இடைவெளியை நிவர்த்தி செய்ய விரும்பினால், இளைஞர்கள், குறிப்பாகப் பெண்கள் டிஜிட்டல் திறன்களைப் பெற உதவுவதன் வழியாக இப்போதே அதனைத் தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார் ஜென்கின்ஸ்.
21-ஆம் நூற்றாண்டின் கற்றல் மற்றும் வேலைவாய்ப்பிற்குத் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்வதில் இளம் பெண்கள் மிகக் குறைவு என்று கூறும் இவ்வாய்வறிக்கை, சராசரியாக, 32 நாடுகள் மற்றும் மாநிலங்களில், பெண்கள் தங்கள் ஆண்களை விட 35 விழுக்காட்டிற்கும் குறைவான டிஜிட்டல் திறன்களைக் கொண்டுள்ளனர் என்றும், இதில் கோப்புகளை நகலெடுப்பது அல்லது ஒட்டுவது, மின்னஞ்சல்களை அனுப்புவது அல்லது கோப்புகளை மாற்றுவது போன்ற எளிய பணிகள் அடங்கும் என்றும் அவ்வாய்வறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்