தேடுதல்

மொசாம்பிக் மக்கள் மொசாம்பிக் மக்கள்  (AFP or licensors)

மொசாம்பிக்கில் பெருமளவில் பரவிவரும் காலரா நோய்!

மொசாம்பிக்கில், 2,50,000-க்கும் மேற்பட்ட இளம் குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். : யுனிசெப் நிறுவனம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மொசாம்பிக்கில் 28,000 க்கும் மேற்பட்ட காலரா நோயாளர்கள் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும்,  இந்த எண்ணிக்கை பிப்ரவரி தொடக்கத்தில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையை விட பத்து மடங்கு அதிகமாகும் என்றும் தெரிவித்துள்ளது ஐநாவின் குழந்தைகளுக்ககான யுனிசெப் நிறுவனம்.

இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து, குழந்தைகள் மற்றும் குடும்பங்களை இன்னும் பெரிய ஆபத்தில் தள்ளுகிறது என்றும், இப்போது,​​மலேரியா மற்றும் வயிற்றுப்போக்கு நோய்களும் அதிகரித்து குழந்தைகளைக் கொல்லும் கொலைகாரர்களாக மாறியுள்ளன என்றும் அந்நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

100-க்கும் மேற்பட்ட நலவாழ்வு மையங்கள் மற்றும் 1,000 பள்ளிகளை சேதப்படுத்தி, ஏறத்தாழ 50,0000 குழந்தைகளின் கற்றலை சீர்குலைத்த Freddy சூறாவளியின் தாக்கங்களில் இருந்து குழந்தைகளும் குடும்பங்களும் மீண்டு வரும் வேளையில், தற்போது காலரா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது இந்நிறுவனம்.

இந்தச் சூறாவளியால் ஏறத்தாழ 250 நீர் வழங்கல் நிலையங்கள் மற்றும் 6 நகர்ப்புற நீர் அமைப்புகள் சேதமடைந்துள்ள நிலையில், ஏறக்குறைய 3,00,000 மக்கள் சுத்தமான தண்ணீர் பெறமுடியாமல் அவதிப்படுவதாகவும், நாட்டிலுள்ள குழந்தைகள் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுவருகின்றனர் என்றும், 3,90,000 ஹெக்டேர் நிலம் Freddy சூறாவளி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் யுனிசெப் நிறுவனம் எடுத்துக்காட்டியுள்ளது.

ஏற்கனவே, நாட்டில் 2,50,000க்கும் மேற்பட்ட இளம் குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும்,  இதனால் அவர்கள் இறக்கும் ஆபத்து பத்து மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 April 2023, 14:29