தேடுதல்

உலக காடுகள் நாள் மற்றும் உலக நீர் நாள் உலக காடுகள் நாள் மற்றும் உலக நீர் நாள் 

வாரம் ஓர் அலசல் - உலக காடுகள் நாள் மற்றும் உலக நீர் நாள்

காடுகளின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய விவசாய கூட்டமைப்பின் 23வது பொதுச் சபையில் உலக காடுகள் நாள் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

நாளுக்கு நாள் அழிந்து வரும் வன விலங்குகளை பாதுகாக்கவும், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மார்ச் 21 ஆம்  நாள் உலக வன தினம் அதாவது காடுகள் நாள் கடைபிடிக்கப்படுகிறது. நவீனமயமாக்கலின் விளைவாக உலகம் முழுவதும் காடுகள் அழிக்கப்படுவதால், வனப்பகுதிகளோடு அவ்வனத்தில் வசித்து வந்த உயிரினங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. வன உயிரினங்களுக்கு நேரிடும் பாதிப்பு‌கள் மற்றும் அழிவுகள் காரணமாக, சுற்றுச்சூழல் சங்கிலியில் மாறுபாடுகள் ஏற்பட்டு இயற்கை பெரிதும் பாதிக்கப்படுவதோடு பருவநிலை மாற்றத்திற்கும் காரணமாக அமைகின்றது.

உலக காடுகள் நாள் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய விவசாய கூட்டமைப்பின் 23வது பொதுச் சபையில் நிறுவப்பட்டது. மேலும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பினால் மார்ச் 21 ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. காடுகளின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த உலக வன நாள் ( International Day of Forests ), ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்நாளைப் பல நாடுகள் பல்வேறு நிகழ்வுகளால் கொண்டாடியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றன. பருவ கால நிலை பெரும்பாலும் சீராக இருப்பற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகக் கொண்டாடப்படும் நாளில் காடுகளினால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள், வன வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் எடுத்து சொல்லப்படுகின்றன.

மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு அல்லது வனம் என்று அழைக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன. மேலும் இவை பல விலங்குகளுக்கு புகலிடமாகவும் விளங்குகின்றன. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன. காடுகளில் பல வகைகள் உண்டு. சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள். வெப்ப மண்டலக் காடுகள் என்பன அவற்றுள் சில வகைகளாகும். வெப்பமண்டலக் காடுகள் உலகில் வாழும் 50 விழுக்காடு உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன. உலக நிலப்பரப்பில் 30 விழுக்காடு அளவுக் காடுகளில் 60 ஆயிரம் வகை தாவரங்கள் உள்ளன. நிழல், இலை, காய், கனி, மணம், குணம், பானம், மழை, குளுமை, தூய்மை, எண்ணெய், உறைவிடம், விறகு என மனிதர்களுக்கு பல வழிகளிலும் நன்மை தரும் தாவரங்கள் மற்றும் காடுகள் தற்போது பல வழிகளில் அழிக்கப்படுகின்றன.

நிழல் தரும் மரங்கள்
நிழல் தரும் மரங்கள்

நம் இந்தியாவில் ஏறக்குறைய 24 விழுக்காடு காடுகள் மற்றும் மரங்களால் சூழப்பட்டிருக்கின்றன. ஏறக்குறைய 100 தேசிய பூங்காக்கள், 515 வன விலங்கு சரணாயலங்கள் இருக்கின்றன. தட்பவெப்பநிலை மாற்றம் மற்றும் மழை பெய்வதில் முக்கியமான பங்களிப்பு தரும் காடுகளை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. உலக மக்கள் தொகை அதிகரித்து , பிற உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் சமச்சீரற்ற நிலை நிலவுகிறது. ஒரு நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி காடுகளாக இருக்க வேண்டும் என ஐ.நா., கூறுகிறது. இந்தியாவின் மொத்த வனப்பரப்பு 6 லட்சத்து 35 ஆயிரத்து 400 ச.கி.மீ ஆகும். இது மொத்த நிலப்பரப்பில் 19.32 விழுக்காடாகும். 1951 ஆம் ஆண்டு முதல் முதல் 1980 ஆண்டு வரை அணைகள் மற்றும் பாசனத்திற்காக 5 லட்சம் ஹெக்டேர் வனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்டுதோறும் 0.6 விழுக்காடு காடுகள் அழிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூமி சூட்டைத் தணித்தல், வாயுமண்டலத்தை சுத்தப்படுத்துதல், நாம் வெளியிடும் கரியமில வாயுவை உட்கொண்டு, சுவாசிக்க ஆக்ஸிஜன் நிறைந்த நல்ல காற்றைக் கொடுப்பவை மரங்களே. மரங்கள் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள். மரங்களை நட்டு வளர்த்த மன்னர்கள், வரலாற்றில் நீங்காத இடம் பெற்றுள்ளனர். உலகில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் பல நூறு ஏக்கர் காடுகள் அழிக்கப்படுவதால் பூமியின் பாதுகாப்பு கவசமாக திகழும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து சூரியனிலிருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர்களின் தாக்குதலுக்கு நாம் ஆளாகும் ஆபத்தில் உள்ளோம். மனிதன் இம்மண்ணில் வாழ எந்த அளவிற்கு உரிமை உள்ளதோ, அதே உரிமை தாவரம், பறவை, விலங்கினங்களுக்கும் உண்டு. மனிதனுக்காக மட்டும் இந்த உலகம் படைக்கப்படவில்லை. ஒட்டுமொத்த உயிரினங்களுக்கும், உலகம் பொதுவானது. பல வழிகளிலும் மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும் பயன்படும் காடுகளை, அதன் அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும். புதிதாக காடுகள் வளர்த்தல்,வீட்டிற்கோர் மரம் வளர்த்தலின் அவசியத்தை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

தண்ணீர் சிக்கனம்
தண்ணீர் சிக்கனம்

உலக நீர் நாள்

"நீரின்றி அமையாது உலகு “ என்ற வள்ளுவரின் கூற்றினை யாராலும் மறுக்க முடியாது. இந்த பூமியில் வாழும் அத்தனை உயிரினத்திற்கும் நீர் இன்றியமையாத தேவையாக உள்ளது. குறைந்த அளவில் தரையை தோண்டினாலே நிலத்தடி நீர் கிடைத்த காலங்கள் மாறி, இன்று பல அடி ஆழம் தோண்டினாலும் வறண்ட நிலையிலேயே இருக்கிறது நம் பூமி. இது வருங்கால சந்ததிகளின் வாழ்க்கையை மிகுந்த கேள்விக்குறியாக்கியுள்ளது.  இதனை அறிந்த உலக நாடுகள் இணைந்து, தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் தேதி உலக நீர் நாளினைக் கடைப்பிடிக்கின்றனர்.

அதிகரித்து வரும் தொழிற்சாலைகள், இயற்கை வளங்களை சுரண்டல்,  நீருக்கான பயன்பாடு அதிகரித்தல் போன்றவைதான் இந்த காலக்கட்டத்தில் நீர் தட்டுப்பாடு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. சில நாடுகளில் மாற்று ஏற்பாடாக கடல்நீரை சுத்திகரித்து பயன்படுத்தும் முறையை விரைவாகவே துவங்கிவிட்டனர். 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு குறித்த ஐ.நா பொதுச் சபையின் மாநாட்டின் முடிவில்  உலகம் முழுவதும் உலக நீர் நாளினைக் கடைப்பிடிப்பது பற்றிய  யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று  உலக நீர் நாள் கொண்டாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, 1993 முதல் உலக நீர் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நெருங்கி வரும் கோடைகாலமும், கொரோனா வைரஸ் தொற்றுநோயும் சுத்தமான நீர் கிடைப்பது எவ்வளவு முக்கியமானது என்பது குறித்து உலகிற்கு எச்சரித்துள்ளன. கடந்த காலம் மட்டுமின்றி தற்போதும் தண்ணீருக்காக மக்கள் படும் சிரமங்களை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நாம் சிந்திப்பதை நிறுத்திவிட்டு செயல்படுவதற்கான நேரமாகக் கருத வேண்டும். உலக நீர் தினமான இன்று, நீரை வீணாக்க மாட்டோம்  நீரை வீணாக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளிப்போம்.

தெருவோர குழாய்களில் நீர்
தெருவோர குழாய்களில் நீர்

நாம் வாழும் காலக்கட்டத்தில் 3 பேரில் ஒரு நபர் பாதுகாப்பான குடிநீர் இல்லாமல் வாழும் நிலை உலகம் முழுவதும் உள்ளது. 2050-ல் ஆண்டுக்கு குறைந்தது ஒரு மாதமாவது  நீர் பற்றாக்குறை இருக்கும் எனவும்,  நீரின் விலை தற்போதைய பெட்ரோலின் விலையை விட அதிகமாக இருக்கும் எனவு எச்சரித்துள்ளது. உலக நீர் நாளின் இலக்கு 2030-க்குள் உலக மக்களை அனைவருக்கும் தரமான நீர் மற்றும் சுகாதாரத்தை வழங்குவதாகும். மோசமான சுகாதாரம், மோசமான ஆரோக்கியம் அல்லது பாதுகாப்பற்ற குடிநீர் காரணமாக வயிற்றுப்போக்கு நோய்களால் ஆண்டுதோறும் சுமார் 297,000 சிறார் அதாவது நாளொன்றுக்கு 800 க்கும் மேற்பட்டவர்கள் இறக்கின்றனர் என்று கணக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன.

நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தவும், நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தவும், நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதும் இந்நாள்  கொண்டாடப்படுவதற்கான காணமாகும். அதேவேளையில் மக்களிடையே நாட்டின் நீர் வளப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வளர்த்தி ஏற்படுத்தவும் வலியுறுத்தப்படுகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை பெய்யாமல் கென்யா மற்றும் மலாவி கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன., மேய்ச்சல் நிலங்கள் பாலைவனங்களாக மாறி வருவதால், கால்நடைகள் மற்றும் ஆடுகளை நம்பி வாழும் பழங்குடியின சமூகங்கள் கடும்பஞ்சத்தினை எதிர்கொள்கின்றனர். பள்ளிகள், மருத்துவப் பராமரிப்பு, ஊட்டச்சத்து மற்றும் விவசாயத் திட்டங்களை வழங்கும் புனித பால் வின்சென்ட் மறைப்பணி மையத்தின் குழுவினர் வறட்சியான சூழ்நிலையில்  வாழும்  மக்களின் சூழலை மாற்றியமைத்து செழிக்க உதவுவதற்காகவும், சுத்தமான நீரினை அளிப்பதற்காகவும் ஆழ்துளைகளை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

உலகின் செயற்பாட்டிற்கு ஆதாரமாக விளங்குகின்ற நீரினைப் பல வழிகளில் நாம் பெற்றுக்கொள்கின்றோம். நன்னீருக்கான மிகப்பெரிய அடிப்படை ஆதாரமாக மழை விளங்குகின்றது. புவியின் மேற்பரப்பிலுள்ள உவர்நீர், நன்னீர் என்பன சூரிய வெப்பத்தின் காரணமாக ஆவியாகி மேலே சென்று ஒடுங்கி மழையாக மாறி பூமிக்கு நன்னீரை அளிக்கின்றன. இதைப்போல உயர் மலைப்பிரதேசங்களில் உருவாகும் நீர்ச்சுனைகள், நீரூற்றுகள் மற்றும் அதனால் தாழ் நிலங்களை நோக்கி உருவாகி ஓடி வருகின்ற நதிகள் என்பனவும் பிற நீர் ஆதாரங்களாக காணப்படுகின்றன. மழையின் வழியாக  நமக்குக் கிடைக்கப் பெறும் நீரானது வடிநிலங்களில் வழிந்து ஏரிகளை சென்றடைந்து அதிக காலம் தேக்கி வைக்கக்கூடிய திறன் படைத்தவையாக காணப்படுகின்றன. அவற்றைப் போல இயற்கையாக மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட குளங்கள் ஆழ்துழைக் கிணறுகள் போன்றவைகளும் நீர் ஆதாரங்களாக காணப்படுகின்றன.

நீர்வீழ்ச்சி
நீர்வீழ்ச்சி

உலகம் எனும் சக்கரம் சுழல அச்சாணியாக திகழும் நீர் ஒரு மனிதன் உயிர்வாழ குடித்தல், குளித்தல், உணவு சமைத்தல், ஏனைய வீட்டு தேவைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு நாளைக்கு குறைந்தது 20 முதல்  30 லிட்டர் வரை தேவைப்படுகின்றது. மனிதனுடைய உடலில் 70 விழுக்காடுக் காணப்படும் நீர் மூலக்கூறானது உலகிற்கு உணவளிக்கும் உழைப்பான விவசாயத்திற்கு அத்தியாவசியமாகவும் காணப்படுகின்றது. தொழிற்சாலைகளில் முக்கியமான மூலப் பொருளாகவும், மனிதனுக்கு தேவையான மின்சார சக்தியை உருவாக்குவதற்கும் நீரானது தற்காலத்தில் பயன்படுத்தப்படுகின்றது.

உதாரணமாக விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொள்ளி மருந்துபொருட்கள், தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் கழிவு நீர், மற்றும் நகரக் கழிவுகள் வடிகால் அமைப்புகள் மூலம் ஆறு, குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் கலத்தல் போன்றவற்றினால் நீர் மாசடைகின்றது. இதனைத்தவிர்க்க, தொழிற்சாலைகள் மற்றும் நகரக் கழிவுகளை நீர் நிலைகளில் கலக்க விடாமல் மீள்சுழற்சிக்கு உட்படுத்துதல், விவசாய நடவடிக்கைகளில் இயற்கை உரப்பயன்பாட்டை ஊக்குவித்தல், முறையான கழிவகற்றல் செயல்முறைகளை நடைமுறைப்படுத்தல், மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்தல், நீர் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை உருவாக்கி அமுல்படுத்தல் ஆகியவற்றின் வழியாக நீர் மாசடைவதைத் தவிர்க்கலாம். “நாம் வாழ நீர் வேண்டும். நீர் காண மழை வேண்டும்” என்ற முன்னோர் கருத்துக்கு அமைவாக நீரைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். எனவே மரம் வளர்ப்போம், மழை பெறுவோம். பெறும் மழை நீரை சேமிப்பது மட்டுமன்றி சிக்கனமாக பயன்படுத்துவதன் வழியாக நீர் வளத்தைப் பேணிப் பாதுகாப்போம். (இணையதள உதவி)

அனைவருக்கும் உலக காடுகள் நாள் மற்றும் உலக நீர் நாள் நலவாழ்த்துக்கள்  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 March 2023, 12:43