தேடுதல்

மீட்புப்பணியில் மக்கள் மீட்புப்பணியில் மக்கள்   (AFP or licensors)

தென்ஆப்ரிக்கா புயலில் 463 பேர் உயிரிழப்பு

பிப்ரவரி மாத இறுதியில் இருந்து பல்வேறு பகுதிகளில் தாக்கிய சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மலாவியில் மட்டும் 360 பேர் இறந்துள்ளனர். 200,000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

தென்ஆப்ரிக்காவின் மலாவியில் ஏற்பட்ட புயலினால் மோசமான பாதிப்புக்கள் மற்றும் உயிரிழப்புக்களின்  எண்ணிக்கை 463 ஆக அதிகமாகி வரும்  நிலையில் பன்னாட்டு உதவியை அதிகரிக்க அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார் மலாவியின் அரசுத்தலைவர் Lazarus Chakwera,

கடந்த வாரங்களில் மலாவியில் ஏற்பட்ட Freddy என்னும் வெப்பமண்டல புயலினால் பல்வேறு வீடுகள் பாதிக்கப்பட்டதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 463 ஐ எட்டியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மூன்று நாட்களாக பார்வையிட்டு நிலைமையை விவரித்த போது இவ்வாறு கூறியுள்ளார் மலாவியின் அரசுத்தலைவர் Lazarus Chakwera.

கடந்த மார்ச் 15 புதன்கிழமை ஏற்பட்ட புயலினால் தெற்கு மலாவியில் ஆறு மாத மழைக்கு சமமான மழை பெய்து, வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டது என்றும், இதனால் 2,00,000க்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார் அரசுத்தலைவர்  Chakwera,

வீடுகளை இழந்துள்ள மக்களுக்கு ஐ.நா அமைப்பினால் 300 க்கும் மேற்பட்ட அவசர முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும், பேரழிவானது, மனிதாபிமான குழுக்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தி, உதவியைக் கடினமாக்குகிறது என்று உலக உணவுத் திட்டம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மனிதாபிமான உதவி தேவைப்படும் நிலையில் 2,80,000 சிறார் உள்ளதாக யுனிசெஃப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மலாவியில் காலரா தொற்றுநோய் மோசமடைந்து, சிறார்களிடையே பரவும் சூழலை ஏற்படுத்தியுள்ளதாகவும், கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் இந்த நோயால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் யுனிசெப் தெரிவிக்கின்றது.

அரசுத்தலைவர் Chakwera, பன்னாட்டு உதவியை அதிகரிக்க அழைப்பு விடுத்துள்ளார் என்றும், ஐக்கிய நாடுகளவை, தென்னாப்பிரிக்கா மற்றும் அண்டை நாடான ஜாம்பியா உட்பட பல நாடுகள் உதவ முன்வந்துள்ளதாகவும். உரோம் தலத்திருவை 50 ஆயிரம் யூரோக்களை இம்மக்களுக்காக ஒதுக்கியுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.    

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 March 2023, 12:18