சோமாலியா மக்களுக்கு உலகளாவிய உதவி தேவை
மெரினா ராஜ் – வத்திக்கான்
2023 ஆம் ஆண்டு சோமாலியாவில் ஏறக்குறைய 18 இலட்சம் பெண்கள் மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட சிறார் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என்றும், உணவு நெருக்கடிக்கு நீடித்த தீர்வுகளை செயல்படுத்துவதற்கும் உலகளாவிய பதில் இன்னும் தேவைப்படுகிறது என்றும் வலியுறுத்தியுள்ளார் save the children அமைப்பின் இயக்குனர் முகமது ஹாசன்.
100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆபத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் சிறார்களைக் காப்பாற்றவும், அவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் save the children அமைப்பு போராடி வருகிறது என்று எடுத்துரைத்துள்ள ஹாசன் அவர்கள், "மனிதாபிமான முயற்சிகள் இதுவரை உணவுப் பற்றாக்குறையைத் தடுத்திருந்தாலும், நாடு முழுவதும் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை ஆபத்தானதாகவே உள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளார்,
உடனடி மனிதாபிமான தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் உணவு நெருக்கடிக்கு நீடித்த தீர்வுகளை செயல்படுத்துவதற்கும் உலகளாவிய பதில் இன்னும் தேவைப்படுகிறது என்றும் வலியுறுத்தியுள்ள ஹாசன், ஐந்து பருவமழைகள் இல்லாமல் வறட்சிக்கு உள்ளாகிய சோமாலியா நாட்டில், ஏப்ரல்முதல் ஜீன் வரை பெய்யவேண்டிய ஆறாவது பருவ மழைக்காக மக்கள் காத்திருக்கின்றார்கள் என்றும் மழையின் அளவு குறைவுபடின் ஏறக்குறைய 65 இலட்சம் மக்கள் அதாவது 40 விழுக்காடு மக்கள் மனிதாபிமான உதவி தேவைப்படும் சூழலுக்கு உள்ளாவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சிறார் மற்றும் அவர்களது குடும்பங்கள் உயிர்வாழ்வதற்கும், வறட்சி மற்றும் உணவு நெருக்கடியின் தீவிர விளைவுகளைச் சமாளிப்பதற்கும் save the children அமைப்பு செயல்பட்டு வருவதாகவும், தண்ணீர், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான பராமரிப்பு, கல்வி முறை போன்றவற்றை அளித்து வருகின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார் ஹாசன்.
குழந்தைகள் வறட்சியால் இடம்பெயர்ந்திருக்கும் போது கற்றலை இழக்காமல் இருக்க, சுகாதார வசதிகளை நிர்வகித்தல் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு பணம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான பொருள்களை வழங்கிவருகின்றது என்றும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5,13,500 என்பதிலிருந்து 4,80,000 ஆகக் குறைந்துள்ளது என்றும் எடுத்துரைத்துள்ளார் ஹாசன்.
1951 ஆம் ஆண்டு முதல் சோமாலியா மற்றும் சோமாலிலாந்தில் பணிபுரிந்து வரும் save the children அமைப்பு குழந்தைகளின் உடல்நலம், கல்வி மற்றும் உணவுத் தேவைகளை ஆதரிக்கும் திட்டங்களை நாடு முழுவதும் கொண்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில், save the children ஏறக்குறைய 25 இலட்சம் சிறார் உட்பட 43 இலட்சம் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்