இலங்கைக்கு அனைத்துலக நாணய நிதியம் (IMF) உதவி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில், அதன் நிதிநிலைமையை மீட்பதற்கு அதிகமான சிக்கன நடவடிக்கைகள் தேவைப்படுவதால், மேலும் பொருளாதார பிரச்சனைகள் வருமென மார்ச் 22, இப்புதனன்று, அதன் அரசுத் தலைவர் இரணில் விக்ரம சிங்கே எச்சரித்துள்ளார்.
இலங்கைக்கு, சீனா, கடன் நிவாரண உத்தரவாதங்களை வழங்கியதைத் தொடர்ந்து, அனைத்துலக நாணய நிதியம் (IMF), மார்ச் 20, இத்திங்களன்று தான் வழங்கவிருக்கும் கடன் உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ளார் இரணில்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அனைத்துலக நாணய நிதியத்திடம் இலங்கை அரசு கடனுதவிக்கு விண்ணப்பித்ததுடன், இது தொடர்பாக அந்நிதியத்துடன் பேச்சு வார்த்தையும் நடத்தி வந்தது. இந்த நிலையில் இலங்கைக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடனுதவி வழங்க (2.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) IMF ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், 2027-ஆம் ஆண்டு வரை பல தவணைகளாக இக்கடன் திரும்ப செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ள வேளை, இதுகுறித்து கருத்துத் தெரிவித்த இரணில், "பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பாதையை எதிர் நோக்கி நாம் முன்னேறி வரும் நிலையில், அனைத்துலக நாணய நிதியம் மற்றும் நட்பு நாடுகள் வழங்கிய பேருதவிக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகக் கூறியுள்ளார்.
அதேவேளையில், நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மீண்டுவர இந்த நிதி பெரும் உதவியாக இருக்கும் என்று அனைத்துலக நாணய நிதியமும் கூறியுள்ளதுடன், கடுமையான ஊழல் எதிர்ப்புச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றும், சிக்கலில் உள்ள ஸ்ரீலங்கன் விமான நிறுவனங்கள் உட்பட, பணப்பட்டுவாடா செய்யும் அரசு நிறுவனங்களை விற்க வேண்டும் என்றும், அது விண்ணப்பித்துள்ளது.
இலங்கையில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்து, பெரும்தட்டுப்பாடும் நிலவியது. அன்றைய செலாவணி இருப்பு குறைந்ததால் அரசு திணறியது. இதனால் வெடித்த மக்கள் போராட்டத்தின் விளைவாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து இராஜபக்சே குடும்பத்தினர் இராஜினாமா செய்தனர். அதனைத் தொடர்ந்து புதிய அரசுத் தலைவராகப் பதவியேற்ற இரணில் விக்ரமசிங்கே, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவாக இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன. (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்