வாரம் ஓர் அலசல் – உலக வானொலி நாள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
எதிரொலி கேட்டான். வானொலி படைத்தான். வானின் ஒளியாகிய சூரியனும் நிலவும் இல்லாமல் எவ்வாறு இவ்வுலகில் வளர்ச்சி இல்லையோ அதுபோல், வானொலி இல்லாமல் நமது வாழ்விலும் வளர்ச்சி இல்லை. இன்று உலக வானொலி நாள். நவீன உலகில் தொலைக்காட்சி, அலைபேசி, கணினி, இணையம் என பல வழிகளில் தகவல் தொடர்பு வேகமாக வளர்ச்சியடைந்தாலும், வெகுஜன ஊடகத்தின் முன்னோடியாக திகழ்வது வானொலி தான். பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதற்காக பயன்பட்ட வானொலியின் பங்கு அளவிட முடியாதது. ஊடகங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்துவருகின்றபோதும், இன்றளவும் வானொலி தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது.
உலக வானொலி நாளாகிய இன்று வானொலி பற்றிய தன்னுடைய கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் மாணவி அஸ்மிதா. புனித மரியின் ஊழியர் சபை அருள்சகோதரிகள் வழிநடத்தும் தூத்துக்குடியில் உள்ள புனித மரியன்னை கல்லூரியில் இரண்டாமாண்டு வணிகவியல் படிக்கும் அஸ்மிதாவை எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் வரவேற்கின்றோம்.
அன்று வானொலி காற்றலைகளின் கவிதை. கருப்பாய் இருப்பாள் நம் கவனத்தை ஈர்த்திடுவாள். அம்மாவின் பொழுதுபோக்காய், அப்பாவின் அரசியல் ஆசானாய், நமக்கெல்லாம் தோழியாய், தம்பி, தங்கைகளுக்கு விளையாட்டு பொம்மையாய் வீட்டின் செல்லப்பிள்ளையாய் திகழ்ந்தவள் வானொலி. அக்காலத்துப் பெண்களுக்கு அடுப்படி முதல் அரசியல்வரை அத்தனையையும் அத்துபடியாக்கியவள் வானொலி. அன்று வானொலி நமக்காக பேசியது இன்று வானொலி நம்மைப் பற்றி பேசுகிறது.
உலக வானொலி நாளினைக் கொண்டாடி மகிழும் இவ்வேளையில் திருத்தந்தையின் குரலாக செயல்பட்டுவரும் வத்திக்கான் வானொலியின் சிறப்புக்களையும் இன்று நாம் அறிந்து கொள்ள வேண்டும். திருத்தந்தையின் குரலையும், எண்ணங்களையும் உலக மக்களுக்குக் கொண்டு செல்லும் நோக்கத்தில், தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்ட வத்திக்கான் வானொலி தனது 92ஆவது வயதை இவ்வாண்டு நிறைவு செய்கின்றது. 1931ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் நாள் தொடங்கப்பட்ட வத்திக்கான் வானொலி, திருத்தந்தையின் குரலாக, கடந்த 92 ஆண்டுகளாக, காலத்திற்கு ஏற்ற முறையில் தன்னையே வடிவமைத்து, உலகில் சிறப்புடன் பணியாற்றிவருகிறது.. திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்கள், 1961ஆம் ஆண்டு பிப்ரவரி 12ம் நாளன்று, வத்திக்கான் வானொலி, தன் ஆரம்ப காலத்திலிருந்து, அன்றன்றைய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்ய தயங்கவில்லை என்று பாராட்டியுள்ளார்.
92 ஆண்டுகளாக இவ்வானொலி சீறும் சிறப்புமாக செயல்பட அயராது உழைத்தவர்கள் பலர். வார ஒலிபரப்பாக இருந்த தமிழ் நிகழ்ச்சிகள் அன்றாட நிகழ்வுகளாக மாற்றம் பெற்றன. திருத்தந்தையின் கருத்துக்களை உலகத்தில் வாழும் தமிழ் மக்கள் காதுகளுக்குக் கொண்டு செல்ல இன்றும் பல முயற்சிகளை எடுத்துவருகின்றது. குறிப்பிட்ட நாளில், நேரத்தில் வானொலியில் மட்டுமே கேட்டு வந்த நிகழ்ச்சிகள் இன்று மாறிவரும் தகவல் தொழில்நுட்ப உலகிற்கு ஏற்றவாறு அலைபேசி, கணிணி, புலனம் முகப்புப்புத்தகம், வலையொளிக்காணொளி என்று தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றது. உலகம் முழுவதும் பரவி உயர்மொழியாம் தமிழ் மொழியை வளர்த்தெடுக்கும் நல் உள்ளங்களுக்கு திருத்தந்தையின் குரலோடு திருவிவிலியம் சார்ந்த கருத்துக்களையும் வழங்கி வருகின்றது.
வாரம் ஓர் அலசல் திங்கள் தித்திக்கும் திருப்பாடல் செவ்வாய், திருத்தந்தையர் வரலாறு மற்றும் மறைக்கல்வி புதன், விருவிருப்பான நேர்காணல் வியாழன், சிறப்பு நாடகம், வெள்ளி ஞாயிறு மறையுரை பல்சுவை என பல சுவைகளை உங்கள் காதுகளும் சுவைக்க விடாமுயற்சியுடன் பணியாற்றுகின்றோம். எமது முயற்சிக்கும் பயிற்சிக்கும் தொடர்ந்து ஆதரவளிக்கும் வத்திக்கான் வானொலி நேயர்களாகிய உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியினை உரித்தாக்குகின்றோம். தொடர்ந்து எம் பணி சிறக்க ஒத்துழைப்பு வேண்டி, வானொலி நேயர்களாகிய உங்களுக்கு உலக வானொலி நாள் வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கின்றோம். அனைவருக்கும் இனிய உலக வானொலி நாள் நல்வாழ்த்துக்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்