தேடுதல்

அறிவியல் அறிஞர் சர்.சி.வி. இராமன் அறிவியல் அறிஞர் சர்.சி.வி. இராமன்  

வாரம் ஓர் அலசல் – தேசிய அறிவியல் நாள்

சூரிய ஒளியை பல்வேறு ஊடகங்களின் வழியே செலுத்துவதன் வழியாக, நிறமானியில் சில புதிய ‘வண்ண வரிகள்' தோன்றுவதைக்கண்டார். அவற்றிற்கு ‘இராமன் வரிகள்' என்றும், அவருடைய கண்டுபிடிப்பு ‘இராமன் விளைவு' (Raman effect) என்றும் பின்னாளில் அழைக்கப்படலாயிற்று.

மெரினா ராஜ் - வத்திக்கான்

தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடி மகிழ்வது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் தேசிய அறிவியல் நாள் (National Science Day) இந்தியாவில் பெப்ரவரி 28 ஆம் நாள் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது..  சர்.சி.வி. இராமன் என்னும் அறிஞரின் அறிவியல் பங்கீட்டை உலகறியச் செய்யவும், மாணவர்கள் முதல் அனைவரும் அதனைக் கற்றுத் தெரிந்து கொள்ளவும் இந்நாளை தேசிய அறிவியல் நாளாகக் கொண்டாட வேண்டும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்பு குழு 1986ம் ஆண்டு இந்திய அரசைக் கேட்டுக் கொண்டது. அதன் விளைவாக 1987 - ஆம் ஆண்டு முதல் இந்த தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு கொண்டாடப்பட்டு வருகின்றது.  

வரலாறு

இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும், சிறந்த இயற்பியல் மேதையுமான சர்.சி.வி.இராமன் அவர்கள், தமிழ்நாட்டில் 1888 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் நாள் பிறந்தார். (C.V. Raman ). இவர் இயற்பியல் துறையில் பல ஆராய்ச்சிகளைச் செய்துள்ளார். ஒருமுறை கல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக ஐரோப்பாவில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு இராமன் கப்பல் பயணம் மேற்கொண்டார். அப்பொழுது இயற்கை மீதிருந்த ஆர்வம் காரணமாக வானத்தை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார். தான் பார்த்த மத்திய தரைக் கடல் பகுதியின் வானம் ஏன் அவ்வளவு நீல நிறமாக காட்சியளிக்கிறது என்று சிந்தித்தார். இந்தக் கேள்வி அவருடைய மனதில் ஆழமாகப் பதிந்தது. இதற்காகப் பல ஆராய்ச்சிகளை தன் வாழ்நாளில் அவர் மேற்கொண்டார்.

அந்த ஆராய்ச்சியின் முடிவில் ஒளி ஊடுருவக்கூடிய ஊடகம் திடப்பொருளாகவோ, திரவப்பொருளாகவோ அல்லது வாயுப்பொருளாகவோ இருக்கலாம். அந்த ஊடகங்களின் வழியாக ஒளி ஊடுருவி செல்லும்போது அதன் இயல்பில் ஏற்படும் மாறுதல்களின் காரணமாக ‘ஒளியின் மூலக்கூறு சிதறல்' (molecular scattering light ) ஏற்படுகிறது என்ற உண்மையைக் கண்டறிந்தார். அவர் தன்னுடைய ஆய்வின்போது வண்ணப்பட்டை நிழற்பதிவுக் கருவியைப் (spectrograph) பயன்படுத்தினார். சூரிய ஒளியை பல்வேறு ஊடகங்களின் வழியே செலுத்துவதன் வழியாக, நிறமானியில் சில புதிய ‘வண்ண வரிகள்' தோன்றுவதை அவர் கண்டார். அவை ‘இராமன் வரிகள்' என்றும், அவருடைய கண்டுபிடிப்பு ‘இராமன் விளைவு' (Raman effect) என்றும் பின்னாளில் அழைக்கப்படலாயிற்று.

சர். சி.வி. இராமன் விளைவு
சர். சி.வி. இராமன் விளைவு

இவர் 1928ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் நாள், இராமன் விளைவு என்னும் அறிவியல் கூற்றை கண்டுபிடித்தார். சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற இராமன் விளைவைக் கண்டுபிடித்ததும், தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்டதுமான பிப்ரவரி 28 ம் நாள் தேசிய அறிவியல் நாளாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசை 1930 ஆம் ஆண்டு இவருக்குப் பெற்றுத் தந்தது. அந்நிகழ்வின் நினைவாகவும், அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்த தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இராமன் விளைவின் பயன்கள்

அரைக் கடத்திகள், சிலிகான் சில்லுகள், டிரான்சிஸ்டர்கள் போன்றவற்றைப் பிழையின்றி, குறையற உற்பத்தி செய்வதற்கும், அவை இடம்பெறும் மின்னணுக் கருவிகளின் பரிமாணங்களை வெகுவாகக் குறைப்பதற்கும், உயிருள்ள திசுக்களைப் பகுப்பாய்வு செய்வதற்கும், இராமன் கருவிகள் உதவுகின்றன. புறத்தோல் நோய் அறிதல், தோலின் ஊடாக மருந்து உட்புகுத்துதல், புற்றுநோய் கண்டறிதல், எலும்புத்தன்மைப் பகுப்பாய்வு மற்றும் நோய் அறிதல், மூட்டு வாதம், எலும்புச் சிதைவு ஆய்வு, இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிதலை அளவிடல் போன்றவற்றில் இராமன் விளைவு பயன்படுகிறது. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு கருவியிலுள்ள லென்ஸில், விரலை வைத்தால் தோலில் மோதித் திரும்பும் ஒளியைப் பகுப்பாய்வு செய்து இரத்தத்திலுள்ள சர்க்கரைச் சத்தின் அளவைக் கண்டுபிடிக்க, இராமன் விளைவுப் பயன்படுத்தப்படுகின்றது. இராமன் விளைவைப் பயன்படுத்தி மேலும் பல புதிய மருத்துவ உத்திகளைப் பலரும் கண்டுபிடித்து வருகின்றனர்.   

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சஞ்சீவ சியாம கம்பீர், புற்றுநோயாளிகளின் இரத்தத்தில் தங்க நுண்துகள்களைச் செலுத்தி அவற்றைப் புற்றுக் கட்டிகளில் போய்த் தொற்றுமாறு செய்தார். மேலும் அவற்றுக்கு மேலாக உள்ள புறத்தோல் மீது லேசர் ஒளியைச் செலுத்தினார். பிரதிபலிக்கும் ஒளியை இராமன் நிறமாலை வழியாகப் பகுப்பாய்வு செய்து புற்றுநோய் இருப்பதை உறுதி செய்யும் உத்தியைக் கண்டறிந்தார். இது பக்கவிளைவு ஏற்படுத்தாத சிறப்பான உத்தியாகக் கருதப்படுகின்றது. ஜார்ஜியாவிலுள்ள ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யும் ஷண்முக், உடலில் ஒரே ஒரு வைரஸ் புகுந்திருந்தாலும் அதன் வகை, தன்மை, இனப்பெருக்க வேகம் போன்றவற்றைக் கண்டறியும் இராமன் கருவியை உருவாக்கியுள்ளார். ஓவியங்களிலும் சிற்பங்களிலும் போலிகளை அடையாளம் காண்பது, அவற்றில் பயன்படுத்தப்பட்ட வர்ணங்களைப் பகுப்பாய்வு செய்வதன் வழியாக மோசடிகளைத் தடுப்பது, புதைபடிவங்களின் வயதைக் கணிப்பது, வெடிபொருட்கள் மற்றும் போதை மருந்துகள் பதுக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடிப்பது, குற்றம் செய்தவர்களை அடையாளம் காண்பது போன்ற தடயவியல் துறை நோக்கங்களுக்கும் இராமன் விளைவு பயன்படுகின்றது. இந்திய அரசின் ‘பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் புதுப்புனைவுத்துறை’ (டி.ஆர்.டி.ஓ.) 15 அடி தொலைவிலிருந்து கூட வெடிபொருட்களைக் கண்டுபிடிக்க உதவுகிற இராமன் விளைவுச் சாதனங்களை உருவாக்கியுள்ளது. இதன் உதவியுடன் புற ஊதா மற்றும் அகச் சிவப்புக் கதிர்களைப் பயன்படுத்திப் பல படலங்களுக்கு அடியில் பொதிந்து வைக்கப்பட்ட வெடிபொருட்களையும் போதைப் பொருட்களையும் எளிதில் விரைவில் கண்டுபிடித்துவிட முடிகின்றது.

நோக்கம்

எந்த ஒரு நாகரீகத்திற்கும் அடிப்படையானது அறிவியல். அத்தகைய அறிவியலின் சிறப்பை இளம் தலைமுறை மாணவர்களுக்கு கூறுவதும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பல புதிய அறிவியல் சிந்தனைகளைக் கண்டறிவதும்,. அதனை தகுந்த முறையில் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதும், புதிய கண்டுபிடிப்புகளை வரவேற்பதுமே அறிவியல் அறிஞர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான நன்றிக்கடன். இதனை ஒவ்வொருவருக்கும் உணர்த்தவேண்டும் என்பதே இந்நாளின் நோக்கமாகும். அறிவியல் என்பது, வாழ்க்கையோடு தொடர்புடையது. இதன் பயன்பாடு விஞ்ஞானிகள், படித்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அப்போதுதான், அந்த கண்டுபிடிப்பு முழுமை பெறும். அறிவியலை படிப்பதோடு நின்று விடாமல், செயல் வடிவிலும் கொண்டு வர வேண்டும் என்பதே சர் சி.வி. இராமனின் ஆசை விருப்பம்.

சி.வி.இராமன் வரலாறு

இராமன் விளைவுக்காக 1930 ஆம் ஆண்டு நோபல் பரிசையும், 1954 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்று மகிழ்ந்தார் சர்.சி.வி. இராமன். இந்த தேசிய அறிவியல் நாளில் அறிவியல் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களைக் கௌரவிக்கும் விதமாக பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பல அறிவியல் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களின் புது கண்டுபிடிப்புகளை தேசிய அறிவியல்  நாளில் நடக்கும் கண்காட்சியில் விவரிக்கின்றார்கள். இந்நாளில் தேசிய அளவிலும் மாநில அளவிலும் நடைபெறும் போட்டிகளில் மாணவர்களின் தங்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை சமர்பிப்பதும் உண்டு. அறிவியல் துறையில் ஆர்வத்தை வளர்க்கும் பொருட்டு மாணவர்களுக்கு தொடர்ந்து உற்சாகம் அளிக்கவும், இன்றைய காலகட்டத்தில் அறிவியலில் பங்கு ஏன் இவ்வளவு சிறப்பு மிக்கதாக இருக்கிறது என்பதை உணரவும் அறிவியல் நாள் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

மாலைப்பொழுதில் சூரியன்
மாலைப்பொழுதில் சூரியன்

உலக அறிவியல்  நாள்

இளம் தலைமுறைகளுக்கு அறிவியலின் சிறப்பை எடுத்துரைத்தல், புதிய அறிவியல் சிந்தனைகளைக் கண்டறிந்து அதை பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல், புதிய கண்டுபிடிப்புக்களை வரவேற்றல் என்னும் மூன்று முக்கிய நோக்கங்களுக்காக இந்த நாள் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகின்றது. உலக அளவில் இந்நாள், 2001 ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 10 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது. ஆனால் இந்தியாவில் 1986 ஆம் ஆண்டிலிருந்தே பிப்ரவரி 28 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பள்ளி கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்கள் தங்களுடைய அறிவியல் கண்டுபிடிப்புக்களை வெளிப்படுத்தும் நாளாவும், தேசிய மாநில அளவில நடக்கின்ற அறிவியல் ஆராய்ச்சிகளை உலகத்துக்கு வெளிப்படுத்துகின்ற நாளாகவும் இந்நாள் கடைபிடிக்கப்பட்டுகின்றது. மக்களின் கருத்து கணிப்பு, தொலைக்காட்சி, வானொலி பேட்டிகள், அறிவியல் கண்காட்சிகள், அறிவியல் பற்றிய படங்கள், பேச்சு போட்டி, வினாவிடை போட்டி போன்ற நிகழ்ச்சிகளினால் இந்நாளை மிகச்சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.

தேசிய அறிவியல் நாள் கருப்பொருள் 2023

2023 ஆம் ஆண்டிற்கான தேசிய அறிவியல் நாள் கருப்பொருள்,சர்வதேச நலனுக்கான சர்வதேச அறிவியல் என்று விண்வெளித்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், டெல்லி தேசிய ஊடக மையத்தில் தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டில், உலகில் இந்தியாவின் பங்களிப்பையும், சர்வதேச அளவில் எழும் தன்மையையும் இந்த கருப்பொருள் குறிப்பிடுவதாக தெரிவித்தார். ஜி20 தலைமைத்துவத்தை இந்தியா ஏற்றுள்ளதுடன், சர்வதேச நலனுக்கான சர்வதேச அறிவியல் என்ற கருப்பொருள் பொருத்தமாக அமைந்துள்ளது என்றும்,  ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற  வளரும் நாடுகளின்  குரலாக இது இருக்கும் என்றும் கூறியுள்ளார் டாக்டர் ஜிதேந்திர சிங்.

இந்நாளில் அறிவியல் மேதைகள் மாணவர்கள் ஆசிரியர்கள் என அனைவரையும் நினைவுகூர்வோம். வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்  போராடிக் கொண்டு இருக்கும் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களையும் நல்ல எண்ணங்களையும் அனுப்புவோம். யாரோ ஒருவர் எதையோ எங்கேயோ கண்டுபிடிப்பது தான் இப்போது நாம் இருந்த இடத்தில் இருந்தே எல்லா வேலைகளையும் செய்ய காரணமாக இருக்கின்றது. அறிவியல் என்பது வெறும் புத்தகத்தில் இருப்பது மட்டுமல்ல. நம்மைச் சுற்றி இருக்கிற எல்லாமே அறிவியல் தான் என்பதை புரிந்துகொள்வோம். சின்ன சின்ன கண்டுபிடிப்புக்களாக இருந்தாலும் அதைக் கண்டுபிடித்த நம் அருகில் இருப்பவர்களை உற்சாகப்படுத்தி வாழ்த்துவோம். யாரறிவார் நாளை அவர்களே கூட பெரிய அறிவியல் மேதையாக வரக்கூடும். எனவே இந்நாளுக்கு பெருமை சேர்த்தவரும்,  இராமன் விளைவைக் கண்டுபிடித்தவருமான சர்.சி.வி. இராமன் போல தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புக்களைக் கண்டறிய முயற்சிப்போம். வெற்றி கோப்பை நம்மையும் விரைவில் தேடி வரும். அனைவருக்கும் இனிய தேசிய அறிவியல் நாள் நல்வாழ்த்துக்கள். (இணையதள உதவி )

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 February 2023, 12:09