தேடுதல்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதி  நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதி   (AFP or licensors)

நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

1939 ஆம் ஆண்டில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 33,000 பேர் இறந்த நிலையில் இவ்வாண்டு (2023) ஏற்பட்ட நிலநடுக்கம் மிகவும் மோசமான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் துருக்கிக்கும் சிரியாவுக்கும் இடையே புதிய எல்லை தாண்டிய மனிதாபிமான உதவி மையங்களைத் திறப்பதற்கு அங்கீகாரம் அளிக்குமாறு பாதுகாப்புச் சபையை வலியுறுத்தியுள்ளார் ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ கூட்டரஸ்

பிப்ரவரி 6 திங்கட்கிழமை  அதிகாலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட  தொடர் நிலநடுக்கங்களால் இறப்பு எண்ணிக்கை ஏறக்குறைய 24,000த்தை எட்டும் நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் கூட்டரஸ்.

சிரியாவில் மட்டும் 53 இலட்சம் மக்களை வீடற்றவர்களாக்கிய இந்நிலநடுக்கத்தினால் இரு நாடுகளிலும் குறைந்தது 8,70,000 பேருக்கு உணவு அளிக்கும் தேவை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஐக்கிய நாடுகள் அவையின் உலக உணவுத்திட்டத்திடம், துருக்கியின் 5,90,000 பேருக்கும் சிரியாவின் 2,84,000 பேருக்கும் உணவுப்பொருள்களை வழங்க 7 கோடியே 70 இலட்சம் அமெரிக்க டாலர் வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் கூட்டரஸ்.

உள்நாட்டில் 5,45,000 இடம்பெயர்ந்தோர், மற்றும் 45,000 புலம்பெயர்ந்தோரை உருவாக்கியுள்ள இந்நிலநடுக்கத்தால் 12,141 கட்டிடங்கள் இடிந்து கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேரழிவுகரமான இந்நிலநடுக்கத்தில் கட்டிடம் இடிந்து விழுந்ததை அடுத்து, நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற கட்டட ஒப்பந்ததாரரைக் காவல்துறையினர் பிப்ரவரி, இவ்வெள்ளியன்று கைது செய்துள்ளதாகவும், 1939 ஆம் ஆண்டில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 33,000 பேர் இறந்த நிகழ்வை விட இவ்வாண்டு ஏற்பட்ட நில நடுக்கம் மிகவும் மோசமான பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மிகவும் சக்திவாய்ந்த மற்றும் ஆபத்தான இந்நிலநடுக்கத்தால் துருக்கியில் 20,318 பேரும், சிரியாவில் 3,553 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 23,871 ஆக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சைப்ரஸ் சிறாரின் இறுதி ஊர்வலத்தில் மக்கள்
சைப்ரஸ் சிறாரின் இறுதி ஊர்வலத்தில் மக்கள்

சைப்ரஸ் குழந்தைகள்

11 முதல் 14 வயதுக்குட்பட்ட 24 சைப்ரஸ் சிறார், கைப்பந்து போட்டிக்காக துருக்கி வந்து தங்கியிருந்த அவர்களின் தங்கும் விடுதியும் நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்ததில் 15 பெரியவர்கள் உட்பட மொத்தம் 19 பேர் இறந்துள்ளதாகவும், இறந்தவர்களின் உடல்கள் சைப்ரஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் துருக்கிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 February 2023, 14:13