காங்கோவில் ஒரு கோடி மக்களுக்கு அவசர உதவி தேவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
காங்கோ ஜனநாயக குடியரசின் மூன்று கிழக்கு மாவட்டங்களில் உள்ள ஒரு கோடி மக்களுக்கு உதவ அவசரமாக 225 கோடி டாலர்கள் தேவைப்படுவதாக ஐ.நா. நிறுவனம் அறிவித்துள்ளது.
வட கீவ் பகுதியில் மோதல்கள் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்தவர்களாக மாறியிருக்கும் 57 இலட்சம் மக்களுக்கு உடனடியாக அவசர கால உதவிகள் தேவைப்படுவதாக, OCHA என்னும் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா அமைப்பு அறிவித்துள்ளது.
வட கீவ் பகுதியில் இடம்பெறும் வன்முறைகளால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாக கூறிய இவ்வமைப்பு, பெரும்பான்மையாக குழந்தைகளைக் கொண்டுள்ள இந்த குழு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
இந்த முகாம்களில் வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் தெருக்களில் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஐ.நா.வின் OCHA அமைப்பு தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்