தேடுதல்

சுவாமி விவேகானந்தர் சுவாமி விவேகானந்தர்  

வாரம் ஓர் அலசல் – தேசிய இளையோர் நாள்

கூர்மையான அறிவாற்றலும் சிந்தனை வளமும் கொண்டவரும் 1863 -ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள் பிறந்தவருமான சுவாமி விவேகாந்தர் பிறந்த நாளையே தேசிய இளையோர் நாளாகக் கொண்டாடி மகிழ்கின்றோம்.
தேசிய இளையோர் நாள்

மெரினா ராஜ் – வத்திக்கான்

உலகம் உன்னை அறிவதை விட உலகத்திற்கு உன்னை அறிமுகம் செய்து கொள் என்ற வரிகளுக்குச் சொந்தக்காரர் சுவாமி விவேகானந்தர். ஒரு நாட்டின் வளமும் செல்வமும் இயற்கை வளங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்து அமைவதில்லை மாறாக இளையோரைக் கொண்டே மதிப்பிடப்படுகின்றது. நம்பிக்கையுள்ள மனத்துணிவுள்ள இளையோரே நாட்டின் செல்வங்களாக வளங்களாகக் கருதப்படுகின்றனர்.  அத்தகைய இளையோர் உலகத்தாரால் அறிந்துகொள்ளப்படுவதில் கவனம் செலுத்துவதை விட, உலகத்தார்க்குத் தங்களை அறிமுகம் செய்து கொள்ள ஏதாவது ஒன்றினைத் துடிப்புடன் செய்யவேண்டும் என்று வலியுறுத்துகின்றார் சுவாமி விவேகானந்தர். இளையோர் வாழ்வில் அக்கறைகொண்ட சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளையே இந்தியாவில் தேசிய இளையோர் நாளாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

1863 -ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள் பிறந்த சுவாமி விவேகானந்தர் கூர்மையான அறிவாற்றலும் சிந்தனை வளமும் கொண்டவர். இந்தியா ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இருந்த காலகட்டத்தில் பிறந்த இவர், ஒரு நாட்டின் வளமைக்கும் முன்னேற்றத்திற்கும் அந்த நாட்டில் உள்ள இளையோரேக் காரணம் என்று எண்ணி அவர்களை ஊக்கப்படுத்தினார். வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி இருந்த இந்தியாவை இளையோர்களே முன்னேற்ற முடியும் என்று உறுதியாக நம்பினார். எனவே தன்னுடைய சிந்தனைகளையும் கருத்துக்களையும் அவர்களுக்காகப படைத்தளித்தார். இளைஞர்களின் அடிப்படை வாழ்வு இளம்வயதில் இருந்தே சிறப்பாக இருந்தால், எதிர்காலத்தில் நாடு முழுமைக்கும் பயனளிக்கும் என்கின்ற சிந்தனையை விதைத்தார். இதன் வழியாக இந்திய நாட்டிற்கு இளைஞர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உயர்த்திக் காட்டி நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்க ஊக்கப்படுத்தினார்.

1985ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12 ஆம் நாள் கொண்டாடப்படும் தேசிய இளையோர் நாளில் இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் உதவியுடன் கருத்தரங்குகள் இளையோர் எழுச்சியூட்டும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இளையோர் அமைப்புகள் இயக்கங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகங்கள் இணைந்து தேசிய இளையோர் விழாவை நடத்தி, இளைஞர்களிடையே தேசிய ஒருமைப்பாடு,  ஒற்றுமை,  உடன்பிறந்தஉறவு,  வீரம் படைப்பாற்றல், கலாச்சாரம், போன்றவற்றை உருவாக்கி, ஒருங்கிணைத்து இந்நாளில் உற்சாகமூட்டுகின்றனர்.

தேசிய இளைஞர் தினத்தின் முக்கியத்துவம்

1883 ஆம் ஆண்டு, சிகாகோவில்  நடைபெற்ற மாநாட்டில் தனது உரையைத் தொடங்குவதற்கு முன் அங்கு கூடியிருந்த அனைவரையும் பார்த்து சகோதர சகோதரிகளே என்று துவங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் சுவாமி விவேகானந்தர். அவரின் கருத்துக்கள் அன்று மட்டுமல்லாது தற்போதைய காலத்திலும் இளையோர்க்கு மட்டுமன்றி அனைவருக்கும் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன. இளைஞர்கள் தங்கள் திறமைகளை எவ்வாறு அடையாளம் காண வேண்டும் என்பதை விளக்கி நாட்டின் சுதந்திரத்திற்காக போராட அன்றைய இளையோரை வழி நடத்தியது போல, இன்றைய இளையோரையும் தன்  பேச்சுக் கருத்துக்கள் வழியாக செயல்பட அழைக்கின்றார். இந்திய தேசத்தின் துறவி என்று அழைக்கப்பட்ட விவேகானந்தர், 'ஒருவர் தான் என்னவாக ஆக வேண்டும், எதை அடைய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அதை அடைய முடியும், எல்லா சக்தியும் நம் கைகளில் தான் உள்ளன. என்று அடிக்கடி இளைஞர்களுக்கு கூறுவார்.

உலக கத்தோலிக்க இளையோர் நாள் - லிஸ்பன்

மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். என்ற லூக்கா நற்செய்தியின் வரிகளை மையமாகக் கொண்டு இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் முதல்வாரங்களில் உலக கத்தோலிக்க இளையோர் நாளானது போர்ச்சுக்கலிலுள்ள லிஸ்பன் நகரின் நடைபெற உள்ளது. இளையோரே நீங்கள் உங்கள் உள்ளே இருந்து வெளியே வளர வேண்டும். யாரும் உங்களுக்கு கற்பிக்க முடியாது, ஆன்மீகவாதியாக்க முடியாது. உங்கள் மனதைத்தவிர சிறந்த ஆசிரியர் வேறு யாருமில்லை என்பது இளையோருக்கு இந்நாளில் அதிகமாக வலியுறுத்தப்படுகின்றது. நாட்டின் இளைஞர்களை சரியான பாதையில் செல்ல வழிகாட்டவும் ஊக்குவிக்கவும், வெற்றியை அடையவும், தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் சிரமங்களை எதிர்கொள்ள அவர்களை ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது.

இந்தியாவில் இளையோர் விழா 2023

2023 ஆம் ஆண்டு சனவரி 12ஆம் நாள் இந்தியாவில் கொண்டாடப்படும் தேசிய இளையோர் நாளானது கர்நாடகா மாநிலத்திலுள்ள Hubballi மற்றும் Dharwad, என்னும் இடங்களில் கொண்டாடப்பட உள்ளதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர், Basavaraj Bommai கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராகப் பங்கேற்கும்  இவ்விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து 7,500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். நமது இளைஞர்கள் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையிலிருந்து உற்சாகத்தையும், அவரது இலட்சியங்கள் மற்றும் போதனைகள் வழியாக உத்வேகத்தையும் பெற வேண்டும். இந்தியாவை மட்டுமல்லாது மேற்கத்திய நாடுகளில் உள்ளோரையும் அதிகமாக பாதித்த விவேகானந்தர் இளையோரின் வழிகாட்டி என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

சுவாமி விவேகானந்தரின் மேற்கோள்கள்

இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும்.

முதலில் வேலைக்காரனாயிருக்கக் கற்றுக் கொண்டால், எஜமானனாகும் தகுதி பின்னர் தானாகவே வரும்.

அன்புடையவனே வாழ்பவன். சுயநலமுடையவனோ செத்துக் கொண்டிருக்கின்றான்

எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளியாவான்.

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.

உறுதியுடன் இரு, அதற்கு மேலாகத் தூய்மையானவனாகவும், முழு அளவில் முயற்சி உள்ளவனாகவும் இரு.

உலகில் உள்ள மக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி இகழ்ந்தாலும் சரி நீ. உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவேனும் பிறழாமல் கவனமாக இரு.

மனிதப் பிறவிதான் பிரபஞ்சத்திலேயே மிகச் சிறந்ததாகும் எல்லா மிருங்களைக் காட்டிலும் எல்லா தேவர்களைக் காட்டிலும் மனிதர்களே உயர்ந்தவர்கள். மனிதர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் யாரும் இல்லை.

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல அதையும் தாண்டி மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. மன நிம்மதி, அன்பு, தவம், தியானம் முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால் வருபவை அல்ல.

கடலைக் கடக்கும் இரும்பு போன்ற மன உறுதியும், மலைகளையே துளைத்துச் செல்லும் வலிமை மிகு தோள்களுமே நமக்குத் தேவை. வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம்..

உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.

தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை

கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்! தளைகளிலிருந்து விடுபடுங்கள்! இளைஞனே,  வலிமை, அளவற்ற வலிமை - இதுவே இப்போது தேவை. சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!

நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றது ஆகிவிடும்.

தேசிய இளைஞர் தின கொண்டாட்டங்கள்

பள்ளி, கல்லூரிகளில் கட்டுரை எழுதுதல், விவாதம், வினாடி வினா போன்ற பல போட்டிகளுடன் இளையோர் நாள் கொண்டாடப்படுகின்றது. மனித நேயத்தை நோக்கிய விவேகானந்தர் வாழ்விலிருந்து இளையோர் உற்சாகம் பெறுவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். மேலும், இந்நாள்களில் மாரத்தான் போன்ற பல்வேறு வெளிப்புற மற்றும் உட்புற நடவடிக்கைகள் பல்வேறு மாநிலங்களால் நிகழ்த்தப்பட்டு, இளையோர் அதிகளவில் அதில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.

அறிவுத்திறன் உடல் உள்ள வலிமை, சமூக ஆர்வம்

சுவாமி விவேகானந்தர்ன், வாழ்க்கையைக் கட்டமைக்கவும், சிந்தனைகளை உள்வாங்கிச் சீர்தூக்கிப் பார்க்க உதவுவதும்தான் உண்மையான கல்வி என்று அறிவுத்திறனை வளர்க்க வலியுறுத்தியவர்.

வாழ்க்கையில் எத்தகைய உயரத்தை எட்டினாலும் அர்த்தமுள்ளதாக அதை மாற்ற உடலும் மனமும் வலிமையாக இருக்க வேண்டும் என்று உடல் ஆரோக்கியத்தையும் வலியுறுத்தியவர். இரும்பு போன்ற தசைகளும் எஃகு போன்ற நரம்புகளும் வேண்டும்’ என அவர் தொடர்ந்து போதித்து,   ‘பலம்தான் வாழ்வு, பலவீனம் மரணம்’ என்பதைத் கூறியவர்.

சமூகப் பணிகளைச் செய்வது என்பது நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் தனி மனிதர்களின் வளர்ச்சிக்கும் முக்கியத் தேவையாகக் கருதிய விவேகானந்தர் சமூகப் பொறுப்போடு செயல்படவும் வலியுறுத்தினார்.

வலிமையான, வீரியமான, நம்பத்தகுந்த துணிச்சலான இளைஞர்கள்தான் இன்றைய உலகிற்கு தேவை. அப்படிப்பட்ட 100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள். உலகை மாற்றிக் காட்டுகிறேன்” என எழுச்சி உரை ஆற்றிய விவேகானந்தர், ஏதோ 100 இளைஞர்களைக் கேட்கவில்லை. வலிமை மிகுந்த, நம்பத்தகுந்த உடல் பலம், சிந்தனை வளம், கொள்கையில் உறுதி உடைய இளைஞர்களையே அவர் தேடினார்.

ஆன்மிகத்தோடு சமய சார்பற்ற பார்வையும் கொண்டிருந்த அவருடைய சிந்தனைகளை ஆன்மிகம் கடந்து புரிந்துகொள்ளத் தொடங்கினால், இந்திய தேசம் இளைஞர்களின் தேசமாக விரைவில் மாறும். எனவே தேசிய இளையோர் நாளினைச் சிறப்பிக்கும் இந்த நாளில் அறிவுத்திறன், உடல் உள்ள வலிமை, சமூக ஆர்வம் கொண்டவர்களாக வாழ முற்படுவோம். எழுச்சிமிகு இளையோராக திகழ்வோம். இளையோரை உற்சாகமூட்டுவோம்.  அனைவருக்கும் இனிய தேசிய இளையோர் நாள் நல்வாழ்த்துக்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 January 2023, 13:29