74ஆவது இந்திய குடியரசு நாள் - மேஜர் திரு ராபர்ட்
மெரினா ராஜ் - வத்திக்கான்
மன்னர் இறந்த பிறகு அவருக்கு மகனாக இருக்கும் இளவரசன் மன்னர் ஆக பொறுப்பேற்று ஆட்சி நடத்தும் மன்னராட்சி முறை உலகின் பெரும்பாலான நாடுகளில் இருந்து வந்தது. இந்த மன்னர் ஆட்சி முறையில் பரம்பரை பரம்பரையாக ஒரு குறிப்பிட்ட குடும்பம் மட்டுமே மக்களை ஆட்சி செய்ய முடியும். இத்தகைய மன்னர் ஆட்சி முறைக்கு மாற்றாக உருவான ஆட்சி முறை தான் “குடியரசு ஆட்சி” முறை. குடியரசு என்றால் மக்களாட்சி முறை குடியரசு ஆட்சியின் தலைவராக இருப்பவர் குடியரசுத்தலைவர். இவரை மக்கள் நேரடியாகவோ அல்லது மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளோ தேர்வு செய்வர். நமது இந்திய நாட்டை பொறுத்தவரையில் இரண்டாவது முறையே பின்பற்றப்படுகிறது. இந்திய நாடு 1947 ஆம் ஆண்டில் ஆங்கிலேயே ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்த பொழுது, இத்தகைய குடியரசு ஆட்சி முறை தான் இந்திய நாட்டிற்கான சிறந்த ஆட்சி முறை எனக் கருதிய இந்திய அரசியல் தலைவர்கள், 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்திய நாட்டை குடியரசு நாடாக அறிவித்தனர்.
இந்திய குடியரசு தினம் வரலாறு
ஏறக்குறைய 190 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேய மற்றும் ஐரோப்பிய நாடுகளால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த இந்திய நாடு, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது. இந்தியா சுதந்திர நாடாக தன்னை அறிவித்துக் கொண்ட பொழுதிலும், இந்திய நாட்டிற்கான நிரந்தரமான அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கும் பணியை இந்தியாவின் முதல் பிரதமர் திரு. ஜவகர்லால் நேரு, அவரது அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்த முனைவர் திருஅண்ணல் அம்பேத்கார் அவர்களிடம் ஒப்படைத்தார். அண்ணல் அம்பேத்கர் மற்றும் அவரது குழுவினர் தங்களது அயராத உழைப்பினால் 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வரைவை நாடாளுமன்ற குழுவிடம் ஒப்படைத்தனர். எனினும், இரண்டு நாட்களுக்குப் பிறகு அதாவது ஜனவரி 26 ஆம் தேதி தான் அந்த அரசியலமைப்பு சட்ட வரைவு நடைமுறைக்கு வந்தது. அன்றைய தினமே இந்திய நாட்டின் முதல் குடியரசுத்தலைவராக திரு. ராஜேந்திர பிரசாத் அவர்கள் பதவியேற்றார். இந்நாளே இந்திய குடியரசு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க நாளான இன்று குடியரசு நாள் பற்றிய செய்திகளை நமக்கு எடுத்துரைப்பவர். இராணுவ வீரர் மேஜர் திரு ராபர்ட் அவர்கள். இந்திய இராணுவப் படையைச் சேர்ந்த இவர் தமிழ் நாட்டிலுள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அருளம்பாடி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இந்தியாவில் எல்லையில் பணிபுரிந்து நாட்டு மக்களின் நல் வாழ்விற்காக போராடும் இவர் ஓர் கத்தோலிக்க கிறிஸ்தவராவார். 2009 ஆம் ஆண்டும் முதல் 2010 ஆண்டு வரை டேராடூனில் பயிற்சி பெற்ற இவர், இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், ராஜஸ்தான் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், மகாராஷ்டிரா போன்ற இடங்களில் ஆற்றிய தன்னலமற்ற பணிகளுக்காக பல்வேறு சிறப்புப் பரிசுகளையும் பதவி உயர்வுகளையும் பெற்றவர்.
இந்திய குடியரசு தினம் சிறப்பு
நாடு சுதந்திரம் பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் அகிம்சை முறையிலும், ஆயுதம் ஏந்தி, இரத்தம் சிந்தி, உயிர் நீத்தும் போற்றத்தக்க தியாகங்களை செய்தனர். அத்தகைய மாமனிதர்களின் ஈடு இணையற்ற தியாகங்களை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்ற குடியரசு தினத்தன்று இந்திய தலைநகரான புது டெல்லியில் இருக்கின்ற ராஜபாதை சாலையில் இந்திய முப்படைகள் உள்ளிட்ட பலவகையான அணிவகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்திய நாட்டின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளின் தலைமை தளபதியாகவும், இந்திய அரசியல் அமைப்பு சட்டங்களை உருவாக்கும் மற்றும் நீக்கும் அதிகாரம் கொண்டவராகவும் இந்திய குடியரசு தலைவர் விளங்குகிறார். எனவே தலைநகர் டெல்லி ராஜபாத்தில் நடைபெறுகின்ற இந்திய குடியரசு தின விழாவிற்கு இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றினார். இவர் இந்திய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றதற்கு பின் முதன் முதலாக இந்திய குடியரசு நாளில் கொடியேற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வந்தே பாரத் என்னும் தலைப்பில் நடன நிகழ்ச்சிகளும், வானில் விமானப் படையினரின் சாகசங்களும் இரு சக்கர வாகனங்களில் காவல்துறையினரின் சாகசங்களும் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து மாநிலங்களின் தனித்திறானையும் சிறப்பையும் வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு ந் அடைபெற்றான. தமிழ் நாட்டின் அலங்கார ஊர்திகளில் வீரத்தமிழச்சி வேலுநாச்சியார், சங்கத்தமிழ் புலவை அவ்வையார், முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், எம்.எஸ்.சுப்புலட்சுமி உருவங்களுடன் பவனி வந்தது.
குடியரசு தினம் விருது
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்ற குடியரசு தின விழாவில், முப்படைகளில் நாட்டுக்காக சேவை புரிந்து உயிர் நீத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கும், நாட்டிற்கு சிறப்பான சேவைகளை புரிந்த காவல்துறையினருக்கும் போற்றத்தக்க வீர- தீர செயல்களை புரிந்த நாட்டின் குடிமகன்களுக்கும் குடியரசு தலைவர் விருதுகளை வழங்கி, கௌரவப்படுத்துகிறார்.
குடியரசு தினம் அரசு விடுமுறை
குடியரசு தினம் அரசு விடுமுறை நாள் என்ற பொழுதிலும் நாடு முழுக்க இருக்கின்ற ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட வேண்டும் என்பது விதியாகும். எனவே அன்றைய தினம் அந்தந்த கல்வி நிலையங்களில் நம் நாட்டின் மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் முப்படையினரை போற்றும் விதமாகவும், பலதரப்பட்ட கலாச்சாரங்களை போற்றும் விதமாகவும் பல கலை நிகழ்ச்சிகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றன. பல்லாண்டுகளாக இந்திய நாடு கடந்து வந்த துயரங்களை போக்க முயன்று பல தியாகங்களை செய்த மகத்தான மனிதர்களை நினைவு கூறும் விதமாகவும், வருங்கால இந்தியாவை சிறப்பிக்க நாம் அனைவரும் உறுதி ஏற்கும் ஒரு மகத்தான நாளாகவும் இந்திய குடியரசு நாள் விளங்குகின்றது. எனவே இத்தகைய மகத்தான தினத்தில் நாமும் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான பங்களிப்பை செய்வோம் என உறுதி ஏற்று செயல்படுவோம். (இணையதள உதவி)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்