வாரம் ஓர் அலசல் – அனைத்துலக மனித உரிமைகள் நாள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்ட மனிதர் ஒவ்வொருவரும் சமமாகப் படைக்கப்பட்டவர்கள். தனது வாழ்விற்கான உரிமையைப் பெறுவதும், பிற மனிதரையும் அதே உரிமையோடு வாழவிடுவதும் மிக அவசியம் என்று இன்றைய நாளில் வலியுறுத்தப்படுகின்றனர். சுதந்திரம், மாண்பு, மரியாதை போன்றவைகள் எல்லா மனிதர்களுக்கும் சமமான ஒன்று. அதனை இனம், மொழி, மதம், அரசியல், நாடு, கலாச்சாரம் என்ற அடிப்படையில் பாகுபாடுகளுடன் நடத்துவது மிகவும் வேதனைக்குரிய செயல். இத்தகைய நிலை தடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் உருவாக்கப்பட்டதே இந்த அனைத்துலக மனித உரிமைகள் நாள்.
இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் எண்ணற்ற மக்கள் கொடூரமான மரணத்திற்கு ஆளாக்கப்பட்டனர். மனிதர்களின் உயிரும் உடைமையும் அழிக்கப்பட்டன. இதனைத் தடுக்க எண்ணி அனைத்துலக நாடுகள் ஒன்று கூடி மனிதனின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் மாண்போடு நடத்தப்பட வேண்டும், என்று குரல் கொடுத்தன. இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல், நாடு, சமுதாய தோன்றல், சொத்து, பிறப்பு போன்ற எந்தவிதமான பாகுபாடுகளும் இன்றி ஒவ்வொரு மனிதனும் வாழ்வதன் அவசியத்தை உணர்த்த 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி, ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு 30 பிரிவுகளின் அடிப்படையில் மனித உரிமைகள் பற்றிய அறிக்கையை சமர்ப்பித்து அதனை நடைமுறைப்படுத்தியது. உலக நாடுகளில் பெரும்பான்மையானவர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்து அன்றிலிருந்து இன்று வரை இந்நாள் அனைத்துலக மனித உரிமைகள் நாளாகக் கொண்டாடப்படுகின்றது.
மனிதர்கள் ஒவ்வொருவரும் மனித மாண்புடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் கொண்டாடப்படும் இந்நாள், உன்னைப் போல் பிறரையும் நேசி. பிறர் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என விரும்புகின்றீர்களோ அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் என்ற விவிலிய வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்தது எனலாம். ஏனெனில் எல்லா மதங்களும் இக்கருத்தையே பல்வேறு வகைகளில் வலியுறுத்துகின்றன.
இந்து வேதங்கள், ஹமுராபியின் பாபிலோனிய வரிகள், திருவிவிலியம், குரான் கன்பூசியஸின் அனலெக்ட்ஸ் ஆகியவை மக்களின் கடமைகள், உரிமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் பழமையான ஐந்து அடிப்படை எழுத்துவடிவங்களாக கருதப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து பல ஆவணங்கள் மனித உரிமைகளை வலியுறுத்தி உருவாக்கப்பட்டன. அவைகள், மாக்னா கார்ட்டா (1215), ஆங்கில உரிமைகள் மசோதா (1689), மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பற்றிய பிரெஞ்சு பிரகடனம் (1789), அமெரிக்க அரசியலமைப்பு மற்றும் உரிமைகள் மசோதா (1791) போன்றவைகளாகும்.
ஆட்சி செய்யும் அரசுகள் தங்களுக்கு கீழ் உள்ள குடிமக்களின் உரிமைகளை மதிக்காமல் மாண்போடு நடத்தாமல் இருக்கும் சூழ்நிலையைத் தடுக்க உருவாக்கப்பட்ட இந்நாள், அநீதியையும் மனிதாபிமானமற்ற தன்மையையும் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் மனிதர்களுக்கு, நீதி கிடைப்பதற்காகச் செயல்படுகின்றது. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளால் ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் சட்டத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியிருந்தன. மனிதப் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் முதலானவற்றுக்கு எதிராக மனித உரிமைகள் சட்டம் ஐ.நா.வால் கொண்டுவரப்பட்டது. ஆனால், சில நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்ற போதிலும் மனித உரிமைச் சட்டங்கள் பெயரளவில் மாத்திரமே நடைமுறையில் உள்ளன.
ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், பொதுமக்களின் நலனைப் பூர்த்திசெய்தல், சமூக நீதியை நிலைநிறுத்தல் என்பவற்றுக்கு மனித உரிமை மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது. ஜனநாயக நாடு என்று பெயரளவில் சொல்லிக் கொள்ளும் நாடுகள் பல இன்றும் மனித உரிமை மீறல்களை செய்து கொண்டுதான் வருகின்றன. உக்ரைன், இரஷ்யா, இலங்கை, என உலகின் பல இடங்களில் கண்ணுக்குத் தெரிந்தும் பல இடங்களில் கண்ணுக்குத் தெரியாமலும் மனித உரிமை மீறல்கள் நடந்துகொண்டுதான் வருகின்றன.
30 பிரிவுகளைக் கொண்ட அனைத்துலக மனித உரிமைகள் சட்டத்தின் முதல் பிரிவிலேயே மனிதர்கள் சுதந்திரமாகவே பிறக்கின்றனர். மதிப்பிலும் உரிமைகளிலும் சமமானவர்கள். நியாயத்தையும் மனச்சாட்சியையும் இயல்பான பண்பாகப் பெற்றவர்கள். எனவே ஒருவரோடொருவர் உடன் பிறந்த உறவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றுக் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூகத்தின் ஒவ்வொரு மனிதனும் இப்பிரகடனத்தைக் கற்றறிவதுடன் மட்டுமல்லாமல் அந்த உரிமைகளை மனதிலிருத்தி மனித சுதந்திரங்களுக்கான மதிப்பினை மேம்படுத்த வேண்டும் என்பதே இந்நாளின் நோக்கமாகும்.
சிறுபான்மையினர் உரிமைகள் என்பது வெறும் ஏட்டளவில் மட்டுமே இருந்து, நடைமுறையில் சாத்தியமற்றதாக இருந்து வந்தது. இவர்களுக்கு மனித உரிமை என்பது ஏதோ ஒரு கட்டுபாட்டுக்குட்பட்டதாகவே அன்றும் இன்றும் காணப்படுகின்றது. மதம், இனம், மொழி என்ற பாகுபாட்டினை மனிதர்களிடத்தில் ஏற்படுத்தி, அவர்களை மிகவும் கொடூரமான முறையில் தாக்குவதை ஊடகச் செய்திகள் வழியாக நாம் பார்க்கின்றோம். சிறுபான்மையினர் தாக்கப்படுவதையும் அவர்களது வழிபாட்டுத் தலங்கள், ஆலயப் பொருட்கள், தங்கியுள்ள வீடுகள் உடைகள் சேதப்படுத்தப்படுவதையும் நாம் அறிகின்றோம். இந்நிலைத் தடுக்கப்பட மனிதர்கள் ஒவ்வொருவரும் சமமானவர்கள் என்பதை உணர்ந்து செயல்படவும், மனித உரிமைகளுக்கு எதிராகப் பிற மனிதர்கள் செயல்படும்போது அதனைத் துணிச்சலுடன் எதிர்த்துக் கேட்பவர்களாகவும் மாற இன்றைய நாள் வலியுறுத்துகின்றது.
மனித வர்த்தகம், மர்ம மனிதர்களால் கடத்தப்படுதல், தாக்கப்படுதல், கொலை, கொள்ளை பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற நிகழ்வுகள், மேற்கூறப்பட்ட மனித உரிமைச் சட்டங்களைக் கேலிக்குரியதாக்குகின்றன. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதையே இத்தகைய நிகழ்வுகள், எடுத்துரைக்கின்றன. மனித உரிமைகள் தினத்தைக் கொண்டாடுவதை விட மனித உரிமைகள் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் நமது உரிமைகளைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும்.
இனம், நிறம், நிறம், மொழி, பாலினம், அரசியல், ஜாதி, மதம், பிறப்பு, சொத்து, பிற அந்தஸ்து, தேசிய அல்லது சமூக தோற்றம் என பாகுபாடு பார்க்கக்கூடாது என்பதை உணர்த்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த நாளில் அதனை அனைவருக்கும் எடுத்துரைக்க வேண்டும். ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் தேதி கொண்டாடப்படும் உலக மனித உரிமைகள் நாள் கலாச்சாரம், சமூகம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தவும், சாத்தியமான அனைத்து சூழல்களிலும் சமூகத்தின் நலனை உறுதிப்படுத்தவும் நம்மை அழைக்கின்றது. கருத்துச் சுதந்திரம், எழுத்துரிமை, கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளைப் பெற்று சுதந்திரமாக உயிர் வாழ்வதற்கான உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு என்பதை உணர்ந்து வாழ முற்படுவோம்.
இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள்
இந்தியாவில் மனித உரிமை மீறல் குறித்த புகார்களை அளிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் 3 இலட்சம் பொதுச்சேவை மையங்கள், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இணைய வழி புகார் தெரிவிக்கும் முறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆணையத்தின் உடனடி சேவையைப் பெறுவதற்கு 14433 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உரிமை மீறல்கள் நடைபெறாமல் தடுக்க ஒவ்வொருவரும் இந்நாளில் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வலியுறுத்தப்படுகின்றனர். ஒவ்வொருக் கருப்பொருளில் இந்நாளானது சிறப்பிக்கப்படுகின்றது. அவ்வகையில் இவ்வாண்டு (Dignity, Freedom, and Justice for All) அனைவருக்கும் மனித மாண்பு, விடுதலை, நீதி என்ற தலைப்பில் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவில் 1993ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி இயற்றப்பட்ட மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின்படி அதே ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்டது. ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியை தலைவராக கொண்ட இவ்வாணையம் மொத்தம் 5 உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுகின்றது. இந்திய மக்களின் உரிமைகளை பாதுகாப்பதும் மற்றும் அவற்றை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நாட்டு மக்களுக்கான சமத்துவம், சுதந்திரம், சமய சார்பு, கல்வி கலாச்சாரம், சுரண்டெலுக்கெதிரான உரிமை மற்றும் அரசியலமைப்புக்கு உட்பட்டு தீர்வு காணுதல் என்ற 6 அடிப்படை உரிமைகளை மக்களுக்கு உறுதி செய்வதும், அவற்றுக்கு எதிரான செயல்முறைகளை கட்டுப்படுத்துவதும் இந்திய மனித உரிமைகள் ஆணையத்தின் கடமையாகும். அரசியல் மற்றும் தனி மனிதரின் ஈடுபாடு இல்லாமல் தன்னிச்சையாக செயல்படும் இவ்வாணையமானது அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும், அவர்கள் மனித உரிமை மீறல் செயலில் ஈடுபட்டால் தக்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும், உரிமையும் பெற்றுள்ளது.
2021-2022ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதுவரை மொத்தம் 64 ஆயிரத்து 170 மனித உரிமை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கொடிய நோயான சாதி, மத, இன, மொழி பாகுபாடு இன்னும் நம்மத்தியில் இருந்து அகலவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றது.
அனைத்துலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு, மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும், மனித விழுமியங்களை மதிப்பதற்கும், வளமான எதிர்காலத்தை தொடங்க அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் தீர்மானிப்போம். இந்தியாவின் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது வெறுப்புத் தாக்குதல்கள் சமீப நாட்களாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இறைவனால் படைக்கப்பட்ட மனிதர் ஒவ்வொரிலும் இருக்கும் இறைச்சாயலை உணர்ந்து மனித மாண்போடும் மரியாதையோடும் ஒவ்வொருவரையும் நடத்துவோம். 1948ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த மனித உரிமைகள் சட்டமானது 75 ஆண்டு நிறைவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், சட்டங்களும் தீர்மானங்களும் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்தப்பட உழைப்போம். எங்கோ எவருக்கோ நடக்கும் மனித உரிமை மீறல்கள்தானே என்ற எண்ணத்தை அகற்றி அதனை எதிர்த்துக் குரல் கொடுப்போம். நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு குரல் கொடுப்பதற்குமுன் நம்வீட்டில், தெருவில் நடக்கும் மீறல்களைக் காண முயற்சிப்போம் நல்லது கெட்டது என்ற இரண்டின் தொடக்கம் எப்பொழுதும் சிறியதிலிருந்துதான் துவங்கும். முளையிலேயே அத்தகைய தீய செயல்பாடுகளைக் களைய முற்பட்டோமானால் எதிர்காலம் வளமானதாக இருக்கும்.
மனித மாண்போடும் உரிமைகளோடும் வாழ்வோம். பிறரையும் வாழவைப்போம். அனைவருக்கும் அனைத்துலக மனித உரிமைகள் நாள் நல்வாழ்த்துக்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்