தொடர் நெருக்கடிகளால் உலகில் 11 கோடி குழந்தைகள் பாதிப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இவ்வுலகில் மோதல்களாலும், இயற்கைப் பேரழிவுகளாலும், காலநிலை நெருக்கடிகளாலும் பாதிக்கப்பட்டுள்ள 11 கோடி குழந்தைகளுக்கு உதவ 1030 கோடி டாலர் தேவைப்படுவதாக 2023ஆம் ஆண்டிற்கான UNICEF மனிதாபிமான பணி அறிக்கை தெரிவிக்கிறது.
அடுத்த ஆண்டிற்கான மனிதாபிமான உதவிகளுக்கென 1,030 கோடி டாலர் தேவைப்படுவதாக உரைக்கும் யுனிசெப் அமைப்பு, இந்த மனிதாபிமான உதவிகள், ஆப்கானிஸ்தான், உக்ரைன், சிரியா, காங்கோ சனநாயக் குடியரசு, எத்தியோப்பியா ஆகிய ஐந்து நாடுகளுக்கும் அதிகம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
11 கோடி குழந்தைகள் உட்பட, 17 கோடியே 30 இலட்சம் பேருக்கு அடுத்த ஆண்டு மனிதாபிமான உதவிகளுக்கென 1,030 கோடி டாலர் தேவைப்படும் நிலையில், நிதி உதவிகளுக்கான விண்ணப்பத்தையும் விடுத்துள்ளது யுனிசெப் அமைப்பு.
இவ்வுலகில் 40 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் தண்ணீர் பற்றாக்குறையுடைய இடங்களில் வாழ்ந்துவருவதாகவும், ஏறக்குறைய 3 கோடியே 70 இலட்சம் குழந்தைகள் தொடர் நெருக்கடிகளால் இடம்பெயர்ந்துள்ளதாகவும் யுனிசெப் தெரிவிக்கிறது.
கோவிட்-19 தொற்றுநோயாலும், காலநிலை மாற்றங்களாலும் பெரும் மனிதாபிமான நெருக்கடிகளை சந்திக்கும் இவ்வுலகில் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்த கவலையை வெளியிட்டுள்ளது யுனிசெப்.
இவ்வாண்டின் துவக்கத்தில் 27 கோடியே 40 இலட்சம் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலை இருந்திருக்க, தற்போது அந்த எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்