தேடுதல்

யுரேனஸ் யுரேனஸ் 

இனியது இயற்கை: உருளும் நீலநிறக் கோள் யுரேனஸ்

யுரேனஸ் கோள், தரையில் உருண்டுசெல்லும் ஒரு பந்துபோன்று, ஏறத்தாழ கிடைமட்டமாக படுத்துக்கொண்டே சூரியனைச் சுற்றி வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

யுரேனஸ் (Uranus), சூரியக் குடும்பத்திலுள்ள எட்டுக் கோள்களில் ஏழாவது கோளாகும்.  இராகு எனப்படும் இக்கோள், 50,000 கி.மீ விட்டத்தைக்கொண்டு சூரியக் குடும்பத்தில் மூன்றாவது பெரிய கோளாக அமைந்துள்ளது. இக்கோள் கிரேக்கக் கடவுள் யுரேனசின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இக்கோள், வெள்ளி அதாவது வீனஸ் கோளைப் போல கிழக்கிலிருந்து மேற்காக தன் அச்சில் சுழல்கிறது. தன் அச்சில் அதிகமாகச் சாய்ந்துள்ள யுரேனஸ் கோள், தரையில் உருண்டுசெல்லும் ஒரு பந்துபோன்று, ஏறத்தாழ படுத்துக்கொண்டே சூரியனைச் சுற்றி வருகிறது. யுரேனஸ் மிகவும் தனித்துவமான மற்றும் மிகவும் வியப்பான வானிலையைக் கொண்டுள்ளது. இது மிகவும் தொலைதூர சுற்றுப்பாதையில் நகர்கிறது. சூரியனில் இருந்து வருகின்ற சிறிய ஒளியும், வெப்பமும்,  யுரேனஸை மிகவும் குளிராக ஆக்குகின்றன. இதனால் அதன் சராசரி வெப்பநிலை -200 டிகிரி செல்சியுசுக்கும் கீழே உள்ளது. இது மிகப் பெரிய பனிக்கோள். இதன் வளிமண்டலத்தில் 83 விழுக்காடு ஹைட்ரசன், 15 விழுக்காடு ஹீலியம், இன்னும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற வளிகள் உள்ளன. இக்கோளைச் சுற்றி 11 பெரிய வளையங்கள் உள்ளன. இக்கோள் ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 84 புவி ஆண்டுகள் ஆகும். இது தன்னைத் தானே சுற்றிவர 17 மணி 14 நிமிடங்கள் ஆகும். ஆக, யுரேனஸ் கோளில் ஓர் ஆண்டு என்பது, புவியின் 43,000 நாள்கள் ஆகும். யுரேனஸில் மொத்தம் 27 செயற்கைக்கோள்கள் உள்ளன. இவற்றில் டைட்டானியா என்பது, மிகப்பெரிய செயற்கைக்கோள் ஆகும். யுரேனஸின் அனைத்து நிலவுகளும் வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் அலெக்சான்டர் போப் ஆகியோரின் பெயர்களால் சூட்டப்பட்டுள்ளன.

இக்கோளின் அடர்த்தி 1.27 கிராம் ஆகும். மேலும், அடர்த்தியின் அடிப்படையில் சனிக்கோளுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. 1781ஆம் ஆண்டில் இக்கோளைக் கண்டுபிடித்த வில்லியம் ஹெர்ஷல் என்ற வானியலாளர், இது ஒரு விண்மீன் அல்ல, ஆனால் ஒரு கோள் எனக் கண்டுபிடித்தார். அதுவரை சூரியக் குடும்பம் சனிக் கோளோடு முடிவடைந்து விட்டதாகவே கருதப்பட்டது. இக்கோளைச் சுற்றி 11 பெரிய வளையங்களும் 2 நடுத்தர வளையங்களும், மேலும் சில சிறு வளையங்களும் உள்ளன. இவை 1977ஆம் ஆண்டில் இவ்வளையங்கள் கண்டறியப்பட்டன. இவ்வளையங்கள் நீர்ப்பனிக் கட்டிகளாலும், தூசிகளாலும், கற்பாறைகளாலும் ஆனவை. இந்த வளையங்களில் சில 2,500 கிலோ மீட்டர்கள் அகலம் கொண்டவையாகவும் உள்ளன. (உதவி: இணையதளங்கள்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 December 2022, 14:51