தேடுதல்

விண்மீன்கள் விண்மீன்கள் 

இனியது இயற்கை: வியக்கவைக்கும் விண்மீன்கள்

அன்னை மரியா “விடியற்கால விண்மீன்" என்று அழைக்கப்படுகிறார். வீனஸ் அதாவது வெள்ளிக் கோள்தான் விடியற்கால விண்மீனாகும். இது அதிகாலையில் கீழ்வானில் சூரிய உதயத்திற்கு முன்பு மிகுந்த ஒளியுடன் தெரிவதால் இப்பெயர் பெற்றது

மேரி தெரேசா: வத்திக்கான்

விண்மீன்கள் என்பன இரவில் விண்வெளியில் மின்னிக்கொண்டிருக்கும் வாயுக்களாலான பெரிய கோளங்களாகும். இவை உடு, நாள்மீன், அல்லது நட்சத்திரம் எனவும் அழைக்கப்படுகின்றன. நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து முக்கிய நிகழ்வுகளை நடத்துகின்ற பழக்கமும் தமிழரிடையே உள்ளது. விண்மீன்கள் பெரும்பாலும் ஹைட்ரஜனால் ஆனவை. இவை இரவில் கண்சிமிட்டுவதுபோல் இருப்பது, பூமியின் வளிமண்டலத்தின் தாக்கத்தினால் ஆகும். இவற்றிலிருந்து வெளியாகும் சக்தி, அவற்றின் வெளிவட்டங்களின் கனத்திற்குச் சமமாக இருப்பதால் அவை ஒரே நிலையில் இருக்கின்றன. இந்த சக்தி, வெப்பத்தையும் ஒளியையும் வெளியிட்டு அவை வெளிமண்டலத்தில் ஒளிர்கின்றன. அவை வெளியிடும் இந்த வெப்பம் மற்றும் ஒளியின் அளவும் மாறுபட்டவை. விண்மீன் கூட்டங்களை O, B, A, F, G, K, M, R, N, T, Y, என்ற ஆங்கிலச் சொற்களால் வகைப்படுத்தியுள்ளனர் வானியியல் ஆய்வாளர்கள். எடுத்துக்காட்டாக O- மற்றும் B-வகையான விண்மீன்கள் நீல நிறத்தில் தெரிகின்றன. அவை பொதுவாக முப்பதாயிரம் முதல் நாற்பதாயிரம் கெல்வின் வெப்ப அளவைக் கொண்டிருப்பவை. A வகை விண்மீன்கள் நீலம் மற்றும் வெண்மை நிறங்களில் ஒளிர்பவை. சூரியன், மஞ்சள் நிறமுடைய விண்மீனாகும். இது பூமிக்கு மிக அருகில் இருப்பதால், மற்ற விண்மீன்கள் போலன்றி பகலில் வெளிச்சம் தருகிறது. அண்டத்தின் பால்வெளியில் நூறாயிரக்கணக்கான விண்மீன்கள் உள்ளன என்றும், வான் முழுவதும் நம் கண்களால் எவ்விதக் கருவிகளுமின்றி 9,096 விண்மீன்களைப் பார்க்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

 கத்தோலிக்கர் அன்னை மரியாவை “விடியற்கால விண்மீனே" என்று அன்போடு அழைத்து வேண்டுகின்றனர். வீனஸ் அதாவது வெள்ளிக் கோள்தான் விடியற்கால விண்மீனாகும். இது அதிகாலையில் கீழ் வானில் சூரிய உதயத்திற்கு முன்பு மிகுந்த ஒளியுடன் தெரிவதால் இப்பெயர் பெற்றது. அறிவியலில் நன்கு முன்னேறிய மேலை நாடுகளில் அது morning star, அதாவது விடியற்கால விண்மீன்  என அழைக்கப்படுவதால் விடிவெள்ளி விண்மீனின் பொதுப்பெயராய் மேலை நாடுகளில் நிலைத்துவிட்டது. ஆனால், தமிழர்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, அந்த கோளின் பெயரிலேயே அதை அழைத்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2022, 13:09